தமிழ்மணி

கம்பர் மயங்கவில்லை!

DIN

கம்பரின் கவிநயம் அசாத்தியமானது. அதிலும் இலக்கணச் செறிவுடன் பார்த்து உணரும்போது அளவிட முடியாத உச்சத்தைத் தொடுவது. வள்ளுவத்தைப் போலவே கம்பர் தொல்காப்பிய இலக்கணப் பதிவைப் பல இடங்களில் போற்றியுள்ளது தமிழின் செம்மொழிச் சிறப்பிற்குரிய மகுடமாகும். சமயத் தமிழையும் காப்பியத் தமிழையும் செம்மொழிப் பட்டியலில் சேர்க்காதது பெருங்குறை.
"அமைவரு மேனியான்' பாடலின் "கமையுறு மனத்தினால் கருத வந்ததோ?' என்ற இரண்டாம் அடிக்கு வைணவ சிரேட்டரான வை.மு.கோ.,  ""எப்போதும் இராம தியானம் செய்வதினால் தேவத்தன்மை இம்மனிதர்க்கு வந்து கிடந்ததோ என்றும் பொருள் கொள்ளலாம்'' என்கிறார். இது ஓர் ஆழமான சிந்தனை.
இராமனும் சீதையும் மானுடராகப் படைக்கப்பட்டாலும் அவர்கள் வைகுந்தப் பாற்கடலிலிருந்து வந்தவர்கள் எனக் கம்பர், ""கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?'' எனக் (மிதிலை.ப.38) கூறுவதால் மக்கள் - இராமனை மணவறையில் மானுடராகவும் பாற்கடல் பரந்தாமனுமாகப் பார்க்கின்றனர்.
பாடலின் நான்காவது அடியில் கூறும் "இமையவர் ஆயினார்' என்றது, பாடலின் இரண்டாவது அடியான 
"கமையுறு மனத்தினால் கருத வந்ததோ?' என்றதைத் தொட்டுச் சுவைக்கச் செய்கிறது என்பதால், புறக்கண் காட்சி அழகினும் மனக்கண் பார்வை அழகே அழகு என்பதைக் கம்பர் முதல் இரண்டடிகளாகப் பாடியது கவிக்கூற்றான இலக்கணச் செறிவுடையதாகும்.
கவிதையியலில் கவிக்கூற்று என்பதோர் இன்றியமையாத இலக்கணக்கூறு. மக்கள் இராமனைக் கண்டு அனுபவிப்பதற்கு முன்பே கம்பர் அனுபவித்தார் என்பதே கவிக்கூற்றின் சிறப்பாகும்.
1926-ஆவது பாடலின் "ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என்ற வரியில்கூடக் கம்பர் மயங்கவில்லை என்பதே உண்மை.
"அடுக்கியத் தோற்றம் விடுத்தல் பண்பே ' என்ற தொல்காப்பிய உவமை இலக்கணப்படி ஒரு பொருளுக்குப் பல உவமை அடுக்கிக் கூறலாம்; ஆனால் கூறப்படும் உவமைக்கு உவமைகூறக் கூடாது என்ற கருத்தின் வழி இராமனாம் ஒருவனுக்கு நால்வேறு உவமைகள் அடுக்கிக் கூறப்பட்டனவேயன்றி மயக்கமில்லை. மயங்காத அழுத்தக் கருத்தானது, "அழியா அழகுடையான்' என்ற குறிப்பு வினைமுற்றின் சொற்பொருள் அழுத்தத்தால் அமைந்ததன்றி மயக்கத்தாலன்று. "ஐயோ' என்ற வியப்பும் மயக்கத்தைத் தராததாகும்.
மேலும் கம்பர் கூறிய "தக்கது ஆகுக' என்றதும்கூட மயக்கமோ குழப்பமோ தராத தெளிந்த சொல்லாடல்தான். "பாடலைப் படிப்போரே! நான் கூறிய இரண்டில் எது தக்கதான பொருளோ அதை உங்கள் விருப்பிற்குக் கொள்க' என வேண்டுகோள் வகையில் (வியங்கோள் நிலையில்) "தக்கது ஆகுக' என்றாரேயன்றி,  கம்பர் யாரையும் குழப்பவில்லை; மயங்கவும் இல்லை!
ஆனால், கம்பர் இராம தியான பக்தி மேலீட்டால் இமைக்காத மனக் கண்ணால், மக்கள் இராமனை அனுபவிப்பதையே சிறப்பாகக் கருதியதால், "இமையவராயினார்' என்ற சொல்லாடல் - இரண்டாவது அடியான "கமையுறு மனத்தினால் கருத வந்ததான' கருத்தாடலுக்குக் கூடுதலாய்ப் பெருமை சேர்க்கிறது.
புள்ளி மயங்கியல், உயிர் மயங்கியல் எனத் தொல்காப்பியம் கூறும் "மயக்கம்' என்ற சொல் "ஒன்றுதல்' என்ற கருத்தினைக் குறிப்பதாகும். இராமனைக் காணும் மக்களுக்கு முன்னர் இராமனை மனக்கண்ணால் கண்டார் கம்பர். இராமனில் ஒன்றினார், இராமனை மனம் ஒன்றி அனுபவித்தார் என்பதே உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT