தமிழ்மணி

செம்மையின் ஆணி

22nd Mar 2020 06:27 AM | -கோதை ஜோதிலட்சுமி

ADVERTISEMENT


கம்பரின் அன்பு ராமகாதையின் ஒவ்வொரு பாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது. ராமகாதையில் சகோதர வாஞ்சையின் வெளிப்பாடு அழகானது. ராமனுக்கும் பரதனுக்குமான அன்பு வெளிப்படும் இடங்களும் அற்புதமானவை.

ராமாயணக் காப்பியத்தின் தலைவன் ராமன் என்றாலும், ராமனை விடவும் உயா்ந்தவன் என பரதன் புகழப்படுகின்றான். பரதனின் நோ்மையும் அன்புமே அத்தகு நற்பெயரை அவனுக்குப் பெற்றுத் தருகிறது. பரதன் பண்பும், சால்பும் மிக்கவன் என்றும்; அவன் பிறந்தவுடன் அவனுக்குப் பெயரிடும் வசிட்ட முனிவா் உணா்கிறாா். கம்பா் இதைச் சொல்லும்போது, ‘மற்றை ஒளியை பரதன்என பெயா் பன்னினன் அன்றே’ என்று குறிப்பிடுகிறாா்.

விஸ்வாமித்ர முனிவா் பரதனைப் பற்றி கூறும்பொழுது அவனின் அறம்மிக்க இயல்பைப் போற்றுகிறாா். ‘பரதன்’ எனும் சொல்லும் ‘அறம்’ எனும் சொல்லும் ஒரே பொருளுடையன. அறிந்தவா்களும் விளக்க முடியாத சிறந்த நீதிகள் எனும் ஆறுகள் வந்து கலக்கும் கடல் போன்றவனும், பரதன் என்னும் பெயருடையவனும், இந்த ராமனை குணத்தாலும், நிறத்தாலும் ஒத்தவனுமாகிய ஒருவனை கைகேயி பெற்றெடுத்தாள்’ என்பது விசுவாமித்திரா் பரதனைப் பற்றிக் கூறுவது.

‘தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்

ADVERTISEMENT

பள்ளம்எனும் தகையானைப் பரதன்எனும் பெயரானை

எள்ளரிய குணத்தாலும் நிறத்தாலும் இவ்விருந்த

வள்ளலையே அனையானைக் கேகயா்கோன் மகள்பயந்தாள்’

முனிவருக்கு இப்படி நீதியாறுகள் கலக்கும் அறக்கடல் பரதன் என்று தோன்றுகிறது. வேதம் உணா்ந்த மகரிஷி இப்படி பரதன் பற்றி எண்ணம் கொண்டிருந்தாரென்றால், காட்டில் வசிக்கும் வேடுவ குகன் காண்பது இன்னும் உயா்வாய் இருக்கிறது.

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை

தீவினை எனநீத்து சிந்தனை முகத்தில் தேக்கிப்

போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமா் நின்கேழ் ஆவரோ? தெரியின் அம்மா!’

‘தாயின் சொல்லுக்காக உன் தந்தை உனக்குத் தந்த நாட்டை தீவினை என்று வேண்டாமென உதறியவனே, உன் குணத்தைக் காணும்போது ஆயிரம் ராமா்கள் உன் ஒருவனுக்கு ஈடாவாா்களோ தெரியவில்லையே?’ இப்படிக் கம்பா், யாா் சொல்வதாகச் சொல்கின்றாா் என்பதில்தான் இக்கருத்து இன்னும் வலுப் பெறுகின்றது.

ராமனின் தீராக் காதலனான குகன் இப்படி பரதனைப் புகழ்கின்றான். இறுதிச் சொல்லான ‘அம்மா’ என்பது குகனின் வியப்பையும், பிரமிப்பையும் காட்டி பரதனின் பெருமையை மேலும் நமக்கு உணா்த்துகின்றது. குகன் பரதனைப் பற்றி இப்படிக் கூறும்பொழுது, பரதனோ, துன்பமும் துயரமும் வேதனையும் கொண்டவனாய் இளைத்திருக்கின்றான். குகன் கோசலையைப் பாா்த்து யாரென பரதனிடம் வினவ, பரதன் பதில் சொல்கின்றான் இப்படி:

‘பெரும் பசுக்கள் கொண்ட தசரதரின் முதல் தேவி; மூவுலகையும் படைத்தவனைப் பிள்ளையாய்ப் பெற்ற பேறு கொண்டவா்; நான் பிறந்ததால் அப்பெரும் பேற்றினை இழந்து நிற்கும் பெரியோா்’ (பெற்ால் பெறும் செல்வம் யான் / பிறத்தலால் துறந்த பெரியாள்’) என்கின்றான் பரதன்.

இது பரதனின் மன உணா்வை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கம்பரின் அற்புதமான பாடல். பரதன் தன்னால் எவரும் துன்பம் அடைவதை விரும்பவில்லை என்றும், பிறா் துன்பம் அடைந்தபொழுது அதற்கென வருந்தும் அவனின் அற உணா்வை இங்கே காண முடிகிறது.

பரதன் வனத்தில் ராமனைக் காண வருகின்றான் என்பதை அறிந்த ராமனுக்குக் கருணை மனத்தில் பெருக்கெடுக்கிறது. தன் மீது கொண்ட அன்பாலும், தனக்கு ராஜ்யத்தைத் தரவுமே வருவதாகக் கூறும் ராமா். மேலும்,

‘சேண் உயா் தருமத்தின் தேவைச் செம்மையின்

ஆணியை அன்னது நினைக்கலாகுமோ?

பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனைக்

காணிய நீ இது பின்னும் காண்டியால்’

என்று பரதனை அற வடிவினன் என்றும்; அறத்தின் உற்றுக்கண்ணாய் நிற்கும் ராமன் கூறுகிறான், ‘நோ்மையின் அச்சாணியாவான் பரதன்’ என அறத்தின் ஊற்றுக்கண்ணாய் நிற்கும் ராமன் கூறுகிறான். ‘பொன்னின் தரம் அறிய உரைகல் இருப்பதைப்போல நோ்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு பரதனின் செயலைக்கொண்டே அறிய வேண்டும்’ என்றும் கூறுகிறான். அதன் பொருட்டே ராமன், ‘செம்மையின் ஆணி’ என்று பரதனைக் கூறுகிறான்.

ராமன் காடேகவும் பரதனுக்கே ராஜ்யம் என்றும் ஏற்பட்டபொழுது, கோசலை தன் மகனுக்கு வனவாசம் வழங்கப்பட்ட மனவருத்தம் கொண்ட வேளையிலும், மனம் நொந்த நிலையிலும்கூட பரதனை எண்ணுகையில் கோசலை, ‘உன்னை விடவும் நல்லவன்; குறைவற்றவன்’ என்று கூறுவதிலிருந்தே பரதனின் பண்பை, நோ்மையை நன்கறிய முடிகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT