தமிழ்மணி

கரையேறவிட்ட முதல்வன்! 

21st Jun 2020 03:33 PM | -பா. அசோக்குமார்

ADVERTISEMENT


மதுரையில் சோமசுந்தரக் கடவுள் தருமி என்பவரின் வறுமையைப் போக்கப் பாட்டெழுதித் தந்து பாண்டியன் அறிவித்த ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழியைப் பெற்றுத்தரச் செய்தார் என்ற திருவிளையாடல் அனைவரும் அறிந்த செய்தி! 

அதுபோல் சிவஞான முனிவர் ஓர் ஏழை அந்தணரின் ஏழ்மையைப் போக்கப் பாட்டொன்று எழுதித்தந்து, ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழியைப் பெற்றுத்தரச் செய்த வரலாறு நடந்தது "திருப்பாதிரிப்புலியூர்' என்னும் திருத்தலத்தில் என்பது பலரும் அறியாத செய்தி.

சிவஞான முனிவர், திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் செம்மாப்புடன் வீற்றிருந்து சாத்திர, தோத்திர நூல்களுக்கும், தமிழிலக்கண நூல்களுக்கும் உரை கண்டதோடு, "காஞ்சிபுராணம்' போன்ற படைப்பிலக்கிய கர்த்தாவாகவும் திகழ்ந்த பெருமைக்குரியவர்.

அப்பர் கரையேறி வணங்கிய திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்திற்கு ஒருமுறை அவர் வருகை புரிந்தார். முனிவரின் புலமையை அறிந்த ஏழை அந்தணர் ஒருவர் முனிவரைக் கண்டு தரிசித்து,  தம் மகனுக்கு உபநயனம் செய்விக்கப் பொருளுதவி செய்ய வேண்டி விண்ணப்பித்தார்.

ADVERTISEMENT

அப்போது அத்திருக்கோயில் மண்டபத்தில் கட்டப்பட்ட பொற்கிழி பற்றிய விவரத்தைக் கேட்டறிந்து, மதுரையில் சுவாமி தருமிக்குப் பாட்டெழுதித் தந்து உதவியதை நினைவுகூர்ந்த அளவில், பாதிரிப்புலியூரானை வணங்கி, பாட்டெழுதித்தர முனைந்தார்.

"கரையேறவிட்ட முதல்வா! உனையன்றியு மோர் கதி உண்டாமோ?' என்ற ஈற்றடியைச் சரியானபடி நிரப்பி, பாடல் எழுதித் தருவோர்க்குப் பொற்கிழி தருவதான நிபந்தனையை அறிந்த சிவஞானச்செல்வர் உடனே,

"வரையேற விட்டமுதஞ் சேந்தனிட 
    வருந்தினைவல் லினமென் றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ! வெனைச்
    சித்தென் றுரைத்தா லென்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக் 
    கொண்டுவட புலிசை மேவும்
கரையேற விட்டமுதல் வாவுனையன் றியு
    மெனக்கோர் கதியுண் டாமோ?' 

இப்பாடல் பல்வேறு அம்சங்களின் குவியலாக உள்ளது.  ஓர் ஏழை ஆன்மா தன் விருப்பைத் தெரிவிப்பது போன்றது இப்பாடல். "விட்டிடுதி கண்டாய்!' என்ற மணிவாசகரின் உருக்கத்துடன் பாதிரிப்புலியூரானைச் சிக்கெனப் பிடிப்பதாகப் பாடல் தொடங்குகின்றது. அப்பரடிகள் கரையேறி வந்து வணங்கிப் பாடிய முதல் திருத்தலம் என்பதால், ஆன்மாக்களைக் கரையேற்றிக் காப்பவர் இப்பாதிரிப்புலியூரில் உள்ள ஈசன் என்பதைக் கருத்தாகக்கொண்ட ஈற்றடி நுட்பம், பாடல் முழுவதிலும் கலந்து கரைந்துள்ளது.

திருத்தில்லையில் தீட்சிதர்கள் தமக்கு அளிக்கும் பிரசாதத்தினும் சேந்தனார் தந்த எளிய களியையே சிதம்பரநாதன் களிப்பாக உண்டதை முதலில் சுட்டிய பாடலின் பாங்கு, "எளியேனைக் கண்டு கொள்' என்ற ஆன்மாவின் அவையடக்க விண்ணப்பமாகும்.

"கசடதபற' என்ற வல்லின எழுத்துகளில் "ட, ற' இரண்டும் மொழி முதல் வாராதாயினும் மொழி முதல் வருவனவற்றோடு சேர்ந்து வரிசைப்படுத்தி வல்லினம் எனக்கூற வைத்தது போல் ஒன்றுக்கும் ஆகாத என்னையும் "அசத்து' (அறிவற்றவன்) என நீக்காமல் ஏற்று அருள்புரிதல் வேண்டும்' என்ற பாடலில் கருத்து ஓர் ஆன்மாவின் கெஞ்சலாகவே உள்ளது.

சிவபெருமானுக்குக் காளை வாகனமாகும்.  திருமால் ஒரு சமயம் காளையாகி வந்து சிவனைத் தாங்கினார். 

இக்கருத்தைச் சிவஞான முனிவர் கூறும் நயம் வியப்பாக உள்ளது.

திருமால் திருவோண நட்சத்திரத்திற்குரியவர். இந்நட்சத்திரம் அவிட்டத்திற்கு முந்தையது. எனவே, இதனை நினைப்பிக்கும் வகையில் "அவிட்டத்திற்கு முந்தைய திருவோணத்தாரைக் காளையாகப் பெற்று, திருப்பாதிரிப்புலியூரில் அப்பர் பெருமானைக் கரையேறவிட்டது போல் ஆன்மாக்களைக் கரையேற்றும் பொருட்டு எழுந்தருளியிருக்கும் ஈசனே! உனையன்றி எனக்கு ஒரு புகலிடம் உண்டோ?' என வரலாற்றுப் பதிவோடு ஓர் ஆன்மா தன் விண்ணப்பத்தையும் பதிவு செய்வதாகப் பாடலை நிறைவு செய்தார் சிவஞான முனிவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT