தமிழ்மணி

விடுத்த மாலையில் யாத்த ‘திருமாலை’!

14th Jun 2020 07:30 AM | முனைவா் அ.மோகனா

ADVERTISEMENT

பக்தி இயக்கம் அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமின்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது. யாப்பியல் நோக்கில் பல்வேறு புது முயற்சிகளை பக்தி இலக்கியங்களில் காணமுடியும். குறிப்பாக, திருமாலோடு தாங்கள் பெற்ற அனுபவங்களின் நேரடிப் பதிவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள் அமைந்துள்ளன.
 திருமாலின் தொண்டர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொண்டர்களின் அடிப்பொடியாக வாழ்ந்த தொண்டரடிப் பொடியாழ்வாரின் "திருமாலை', அவர் திருமாலுக்குச் செய்துவந்த கைங்கரியத்தின் விளைவாக எழுந்தது. பூமாலையோடு சேர்த்து அவரால் அளிக்கப்பட்ட பாமாலைதான் "திருமாலை'.
 அவ்வாறே, பெண் மயக்கமான இருளில் விழுந்து திருமாலின் அருளால் மீண்டு, ஒளியை அடைந்த அவர் உறங்கும் திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியையும் பாடியுள்ளார். அதன்மூலம் இருள் கடிந்து ஒளிபெற்ற தம் நிலையினையும் ஊடுபொருளாக்கியுள்ளார். இவருடைய பாடல்கள் பொருண்மையில் மட்டுமின்றி வடிவத்திலும் சிறப்பு வாய்ந்தவையாக அமைந்துள்ளன.
 தமிழ் "யாப்பியல்' மரபில் சீர்களை தேமா, புளிமா முதலிய "வாய்பாடு' அலகுகளால் குறிப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரின் "திருமாலை' யில் இடம்பெற்ற பாசுரங்கள் யாவும் "தேமா' சீரினால் முடிகின்ற அடிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரசைச் சீர்களாலான பாடலடிகள் ஓசை நயமும், பொருட்செறிவும் கொண்டவையாக அமைந்து, பாடுவதற்கு இன்பம் அளிப்பவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாசுரங்களும் இத்தன்மையன. திருமாலைக் கண்முன் காட்சிப்படுத்துகின்ற,
 "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
 அச்சுதா அமரரேறே ஆயர்தங் கொழுந்தே யென்னும்
 இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
 அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே'
 என்று தொடங்கும் "திருமாலை' பாசுரம் ஒலிக்காத வைணவத் தலங்கள் இல்லை. இப்பாசுரத்தின் அமைப்பை நோக்கும்போது, அவை ஒரு விளச்சீரைத் தொடர்ந்து மாச்சீர், தேமாச் சீரைக்கொண்டு அமைகின்றன. நாற்பத்தைந்து பாசுரங்களும் இவ்வமைப்பு மாறாமல் பாடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
 "பெண்டிராற் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
 உண்டிராக் கிடக்கும்போ துடலுக்கே கரைந்து நைந்து
 தண்டுழாய் மாலை மார்பன் றமர்களாய்ப் பாடி யாடித்
 தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே' (1:876)
 தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையே இப்பாசுரத்தில் கூறியுள்ளார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இவ்வாறு உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வரும் உணர்வுகளை சொற்களாக்கும் அதே நேரத்தில், அவை குறிப்பிட்ட வடிவத்தோடும் வடிக்கப்படுகின்றன.
 இவ்வடிவத்தின் இலக்கணத்தை 19-ஆம் நூற்றாண்டில் பிறந்த தி.வீரபத்திர முதலியாரின் "விருத்தப்பாவியல்'
 கீழ்க்காணுமாறு விளக்கியுள்ளது.
 "சீர்வளர் கமலச் செவ்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
 கார்வள மலிந்த கூந்தற் கன்னலுங் கசக்கு மின்சொ
 லேரிளங் கொங்கை மின்னே ரிடையெழிற் கொடியம் பேதாய்
 சீர்விள மாச்சீர் தேமாச் சீரிணைந் திரட்டு மீங்கே' (வி.பா.படலம்:1)
 பிற்காலத்தில் இந்த அறுசீர் ஆசிரிய விருத்த வடிவம் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றது. கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விருத்த வடிவங்களுக்கு இலக்கணம் வகுத்த நூலாக "விருத்தப்பாவியல்' உள்ளது. இருப்பினும், இலக்கணம் பெறாத வடிவங்களும் பக்தி இலக்கியங்களில் உள்ளன. தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி மூன்று விளச்சீர்களைத் தொடர்ந்த மாச்சீரினால் முடியும் அமைப்பைப் பெற்றுள்ளன. திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பாடல்களிலும் இவ்வமைப்பைக் காண முடியும்.
 - முனைவர் அ.மோகனா
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT