தமிழ்மணி

மகாகவியின் மேதாவிலாசம்!

14th Jun 2020 12:08 PM

ADVERTISEMENT

மறுமலர்ச்சிப் பாடல்களுக்கு மரபு வகுக்க வந்த மகாகவி பாரதி, "சொல் புதிது - சுவை புதிது... சோதி மிக்க நவ கவிதை' என்று கூறுவார். ஆனால், அவரே பலரும் அறிந்த ஒரு பழைய சொல்லில் புதிய சுவையைப் படைத்துப் புரட்சியும் செய்வார். பழைமையில் புதுமையைப் படைக்கும் தனது ரசவாத வித்தைக்கு இங்கே அவர் தேர்வு செய்துகொண்ட களம் பாஞ்சாலி சபதம்.
 தருமன் சகுனியுடன் ஆடிய சூதாட்டத்தில் பாஞ்சாலியைப் பணயப் பொருளாக வைத்துத் தோற்றுவிடுகிறான். உடனே துரியோதனன் தனது தேர்ப்பாகனை அனுப்பி, பாஞ்சாலியை அரசவைக்கு அழைத்து வருமாறு பணிக்கிறான். சற்று நேரம் கழித்து புறப்பட்டுப் போன தேர்ப்பாகன் திரும்பி வந்து துரியனை வணங்கி,
 "பொன்னரசி தனைப் பணிந்து
 போதருவீர்! என்றிட்டேன்;
 என்னை முதல்வைத்து
 இழந்தபின் தன்னையென்
 மன்னர் இழந்தாரா?
 மாறித் தமைத்தோற்ற
 பின்னெமைத் தோற்றாரா?
 என்றேனும் பேரவையை
 மின்னற் கொடியனையார்
 வினவிரத் தாம்பணித்தார்
 வந்துவிட்டோன்...'
 என்று விவரம் கூறுகிறான். பாகனது உரையைக் கேட்டதுமே பாம்புக் கொடியோன் சீற்றத்துடன் சினந்தெழுந்து,
 "அட, பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய்
 என்றன் பெற்றி அறிந்திலை போலும் நீ;
 அந்தக் கள்ளக் கரிய விழியினாள்
 அவள் கல்லிகள் கொண்டிங்கு வந்தனை!'
 என்று படபடப்புடன் வினவுவதாகப் பாரதியின் காவியம் தொடர்கிறது. துரியனின் இந்த உரையிலே இடம்பெறும் "கல்லிகள்' என்னும் சொல், பாரதியால் இங்கே "கேள்விகள்' என்னும் புத்தம் புதிய பொருளில் எடுத்தாளப்படுகிறது. இது மகாகவியின் மகத்தான புத்தாக்கம் என்றே கருதத்தோன்றுகிறது. ஏனெனில், ஏனைய கவிஞர்களின் படைப்புகளில் இந்தச் சொல்லாட்சி இடம்பெற்றதாகத் தெரியவில்லை. கல்வி என்னும் சொல் கேள்வி என்னும் பொருள் தருவது எப்படி?
 "அற்பப் பயனுக்காக அளவுக்கு அதிகமான முயற்சியை இடித்துரைப்பது' போன்றதோர் அருமையான சொலவடை தமிழில் உண்டு. "மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது' என்பதுதான் அது. "கல்லி' என்னும் சொல் "தோண்டி' என்று வினையெச்சப் பொருளைத் தரும். அதனுடன் "கள்' என்னும் பன்மை விகுதி சேர்த்து, "கல்லிகள்' என்று தொழிற்பெயர் போன்றதோர் புதிய உருத்தோற்றத்தை வடிவமைக்கிறார் மகாகவி பாரதி. (கேள்விகள் என்பது போல).
 தோண்டுதலுக்கும் கேள்விக்கும் என்ன தொடர்பு? ஆனால், பாரதியின் ஆதர்சப் படைப்பான பாஞ்சாலி, தேர்ப்பாகனிடம் அடுக்கடுக்காக எழுப்பும் வினாக்களை மீண்டும் ஒரு முறை நோக்குவோம்:
 ""வல்ல சகுனிக்கு மாண்பிழந்து நாயகர்தாம் என்னை முன்னேகூறி இழந்தாரா? தம்மையே முன்னமிழந்து முடித்தெம்மைத் தோற்றாரா? சென்று சபையில் செய்தி தெரிந்து வா!'' என்று பாகனிடம் "கெல்லி'க் கிளறுகிறாள்; "தோண்டி'த் துருவுகிறாள்! ஏனெனில், தான் கண்ட புதுமைப் பெண்ணின் "திமிர்ந்த ஞானச் செருக்கினை' திரௌபதியின் வாய்மொழிகளின் வாயிலாக வடித்துக் காட்டுவதே பாரதியின் நோக்கம்.
 தோண்டித் துருவும் பாஞ்சாலியின் இந்த வினாக்களின் மூலம், அவளை சாதுரியம்மிக்க ஒரு வழக்குரைஞராகப் பார்க்க முடிகிறது. துரியனின் சபையில் நடந்த சூதாட்ட நிகழ்வுகளைத் தேர்ப்பாகனிடம் வினவியறியும் அவளது சொற்களில் புலனாய்வு மேற்கொள்ளும் ஒரு புதுமைப் பெண்ணின் சாயல் தென்படுகிறது.
 பாஞ்சாலியை அழைத்து வராமல் தனித்து வந்த தேர்ப்பாகனிடம் துரியோதனன், ""அந்தக் கிள்ளை மொழியாளின் "கேள்விகள்' கொண்டிங்கு வந்தனை!'' என்று அனைவரும் அறிந்த சொற்களைப் பயன்படுத்தி வினவுவதாகப் பாரதி பாடியிருந்தால், கருத்துச் சிதைவு எதுவும் ஏற்படப்போவதில்லை; கதைத் தொடர்பும் அறுபடப்போவதில்லை. பிறகு ஏன் பாரதி, "கல்லி' என்னும் பெருவழக்கில் இல்லாத சொல்லாட்சியை இங்கே புதிதாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதுதான் பழைய சொல்லிலும் புதிய சுவையைப் புகுத்தி, சோதிமிக்க நவகவிதைகளை உருவாக்க முடியும் என்பதைச் செய்து காட்டும் மகாகவி பாரதியின் மேதாவிலாசம்!
 -குரு.சீனிவாசன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT