தமிழ்மணி

கற்பனையின் உச்சம் தொட்ட கம்ப காதை!

14th Jun 2020 07:24 AM | முனைவா் சி.சிதம்பரம்

ADVERTISEMENT

கம்பர், வால்மீகி ராமாயணத்தைப் பின்பற்றி தமிழ் மரபுக்கு ஏற்ப கம்பராமாயணத்தைப் படைக்கிறார். ராமாயணக் கதை நிகழ்ந்த இடம் வடக்கே உள்ள கோசல நாடு. "குசலம்' என்றால் "மயில்' என்று பொருள். "க' என்ற வட எழுத்து மிகுதியைக் குறிக்கும். வடமொழியில் அகரம் ஒகரம் புணர ஓகாரம் ஆகும். க + குசலம் = கோசலம் என்றாயிற்று.
 மயில்கள் அதிகமாக இருக்கும் நாடு கோசல நாடு. ஒட்டகம் மிகுதியாக இருந்தால் "பாலைவனம்' என்று பொருள். மயில்கள் அதிகமாக இருந்தால் அது "சோலைவனம்' என்பது விளங்கும். கங்கா நதியினால் வளம்பெற்ற நாடு கோசலை. கோசல நாட்டின் வளத்தை கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
 "நீரிடை உறங்கும் சங்கம்
 நிழலிடை உறங்கும் மேதி
 தாரிடை உறங்கும் வண்டு
 தாமரை உறங்கும் செய்யாள்' (கம்ப. நா.படலம். 37)
 என்று சிறப்பிக்கிறார். தசரதன் ஆட்சி செய்யும் கோசல நாட்டில் சங்குகள் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருக்கும்; எருமைகள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருக்கும்; வண்டுகள் மலர் மாலைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும்; திருமகள் தாமரை மலரிலே உறங்குகிறாள் என்று ஒன்று முதல் ஆறறிவு கொண்ட உயிர்கள் உறங்குகின்றன என்று பாடுகிறார்.
 காப்பியத்தின் தொடக்கத்தில் உறங்கும் என்ற சொல்லைத் திரும்பத் திரும்பக் கம்பர் குறிப்பிடுவதின் உட்கருத்து வேறு என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
 செடிகொடிகளுக்கு ஓரறிவு. சங்குக்கும், நத்தைக்கும் ஈரறிவு. கரையானுக்கும் எறும்புக்கும் மூன்றறிவு. நண்டுக்கும், வண்டுக்கும் நான்கறிவு. விலங்குகளுக்கும், மனிதர்களில் சிலருக்கும் ஐந்தறிவு.
 (மாவும் மாக்களும் ஐயறிவினவே. மக்கள் தாமே ஆறறிவுயிரே - தொல்.1526:4-5).
 கோசல நாட்டில் உள்ள அனைத்து உயிர்களுமே கவலை இல்லாததால் உறங்குகின்றன என்றும், அந்த அளவில் தசரதன் நாட்டை ஆட்சி செய்கிறான் என்னும் பொருள்படப் பாடுகிறார்.
 மேலும், கோசல நாட்டின் தலைநகரில் வாங்கும் தன்மை இல்லாததால் வழங்கும் தன்மை இல்லை (வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்- கம்பராமாயணம். 84:1) என்று பாடுகிறார். இவ்வாறு கவிஞன் தான் பார்க்காத ஒன்றினை நம் கண்முன்னே படைத்துக் காட்டுவதை படைப்புக் கற்பனை (Creative imagination) என்று அறிஞர்கள் வகைப்படுத்துகின்றனர்.
 படைப்புக் கற்பனையின் உச்சம் கம்பகாதை என்பது தொடக்கம் முதல் இறுதிவரை விரவிக் கிடப்பதை நாம் காண முடியும்.
 - முனைவர் சி.சிதம்பரம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT