தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் (14/06/2020)

14th Jun 2020 12:17 PM

ADVERTISEMENT

மனது விட்டுச் சிரிக்க வேண்டும், மனதின் இறுக்கத்தை அகற்ற வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம், ஒன்று "காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தைப் பார்ப்பது அல்லது சாவி சாரின் "வாஷிங்டனில் திருமணம்' படிப்பது என்பதை நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவரை அந்தத் திரைப்படத்தை எத்தனை முறை திரும்பத் திரும்பப் பார்த்திருப்பேன் அல்லது "வாஷிங்டனில் திருமணம்' எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதற்குக் கணக்கு வழக்கே கிடையாது.

சாவி சாரின் மணிவிழாவின்போது ஒரு மலர் வெளிக்கொணர்ந்தோம். அதில் நான் எழுதிய கட்டுரையில் என்னை "ஏகலைவன்' என்று குறிப்பிட்டிருந்தேன். "சாவி' வார இதழில் நான் உதவிஆசிரியராகச் சேர்வதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே என்னை எழுத்துப் பித்தனாக்கியதற்கு அவரது "வாஷிங்டனில் திருமணம்' தான் காரணம்.
 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து விடுமுறைக்குக் கேரளத்தில் உள்ள எனது தாய்வழிப் பாட்டனார் வீட்டுக்கு நானும் என் சகோதரியும் செல்வோம். அப்போது நான் ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த விகடனில் "வாஷிங்டனில் திருமணம்' தொடர் வெளிவந்து கொண்டிருந்த நேரம். பாட்டி "ஆனந்த விகடன்' வாசகர். தாத்தாவுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. பேசத்தான் தெரியும்.
 வாரா வாரம் "ஆனந்த விகடன்' வந்ததும், தாத்தாவுக்கு நான் "வாஷிங்டனில் திருமணம்' தொடரை வாசித்துக் காட்ட வேண்டும். தமிழை எழுத்துக்கூட்டி வாசிக்கும் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்துவதற்காகவே என் தாத்தா அதை வாசித்துக் காட்டச் சொல்லி இருக்கலாம். எது எப்படியோ, கதைகள் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை அந்தப் பதினோரு வாரத் தொடர் ஏற்படுத்தியது.
 ஆனந்த விகடனில் பதினோரு வாரங்கள் தொடராக வெளிவந்தது "வாஷிங்டனில் திருமணம்' தொடர். இன்றளவில் அதை விஞ்ச ஒரு நகைச்சுவைத் தொடர் இல்லை என்கிற அளவில் சுமார் 60 ஆண்டுகாலமாகக் கோலோச்சி வருகிறது என்றால், சாவி சாருக்கு இயல்பிலேயே இருந்த நகைச்சுவை உணர்வுதான் காரணம்.
 எல்லோரும் சாவி சாரை நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டுமே நினைக்கிறார்கள். அவரது "வழிப்போக்கன்', "வேதவித்து', "ஆப்பிள் பசி' உள்ளிட்ட படைப்புகள் அவரை ஒரு வித்தியாசமான எழுத்தாளராக அடையாளம் காட்டும். சாவி சாரின் பன்முகத் தன்மையை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அந்தச் சிறு வயதில் நான் எதிர்பார்த்திருக்க நியாயமில்லை.
 மூன்று நாள்களுக்கு முன்னால், புத்தகங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். "வாஷிங்டனில் திருமணம்' கண்ணில் பட்டது. புத்தகம் அடுக்கும் வேலையை அப்படியே விட்டு விட்டு, புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டேன். ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் அதே விறுவிறுப்புடன் நகரும் கதை உத்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எத்தனை முறை நாம் அனுபவித்துச் சிரித்திருக்கிறோம். ஒவ்வொரு மீள் வாசிப்பின்போதும் மீண்டும் சிரிக்கிறோமே! அதுதான் "சாவி' முத்திரை.
 ஆங்கிலத்தில் சார்லஸ் டிக்கன்சின் "பிக்விக் பேப்பர்ஸ்' என்றால், தமிழில் சாவி சாரின் "வாஷிங்டனில் திருமணம்'. வேடிக்கை என்ன தெரியுமா? "வாஷிங்டனில் திருமணம்' தொடர் எழுதும்போது சாவி சார் அமெரிக்காவுக்குப் போனதில்லை. வாஷிங்டனைப் பார்த்ததுமில்லை.
 எழுத்தாளர்கள் எல்லோரும் தாங்கள் பார்த்த இடங்களை மையப்படுத்திக் கதைகள் புனைவார்கள். சாவி சார் மட்டும்தான் தான் எழுதிய கதையில் வரும் இடங்களை, பல ஆண்டுகளுக்குப் பின் நேரில் சென்று கண்டு மகிழ்ந்தவர்!
 கரோனா நாள்களில் வீட்டுக்குள் அடைந்து கிடந்து மன அழுத்தம் ஏற்படுகிறதா? அதற்கு அருமருந்து "வாஷிங்டனில் திருமணம்'. அதைச் சொல்லத்தான் இதை எழுதினேன்!

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தால் எல்லாம் ஸ்தம்பித்துவிட்டிருக்கும் நிலையில், பதிப்பகங்கள் முடங்கி விட்டதில் வியப்பில்லை. ஆனால், நாகர்கோவிலில் உள்ள "வைகுந்த்' பதிப்பகத்தார் அப்படி முடங்கிவிடத் தயாராக இல்லை. விமர்சனத்துக்குப் புத்தகங்களை அனுப்பித் தந்தபடி இருக்கிறார்கள்.
 அப்படி விமர்சனத்துக்கு வந்திருந்தது பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய "தமிழ் இலக்கிய அகராதி'. கடந்த நூற்றாண்டில் தமிழகம் கண்ட சிறந்த தமிழறிஞர்களில் பாலூர் கண்ணப்ப முதலியாருக்குத் தனி இடம் உண்டு. 57-க்கும் அதிகமான நூல்களை ஆக்கி அளித்திருக்கும் பாலூர் கண்ணப்ப முதலியார் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர்.
 தொண்டை நாட்டு பாடல்பெற்ற சிவத்தலங்கள், இலக்கிய வரலாறு, தமிழ்நூல் வரலாறு, பாண்டி நாட்டுக் கோயில்கள், தமிழ்ப் புலவர் அறுபத்து மூவர், வள்ளுவர் கண்ட அரசியல் உள்ளிட்ட நூல்கள் தமிழ் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அற்புதப் படைப்புகள். அந்த வரிசையில் சேர்த்துக் கொண்டாடப்பட வேண்டிய நூல் "தமிழ் இலக்கிய அகராதி'. மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை இன்னின்ன என்று ஆய்ந்து, ஓர் ஆசிரியரின் பார்வையில் அவற்றைப் பதிவு செய்திருக்கிறார் கண்ணப்பனார்.
 தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, சொற்களுக்குரிய பொருள் அறிதற்குத் துணை செய்வதோடு நில்லாமல் தொகைச் சொற்கள், தொடர் மொழிகளின் விளக்கங்கள், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுக்குரிய விளக்கங்கள் என்று இலக்கியம் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார் பாலூர் கண்ணப்ப முதலியார்.
 சொல் அகராதி, தொகை அகராதி, பிரபந்த அகராதி, நூல் அகராதி, புலவர் அகராதி என்பனவற்றுடன் நின்றுவிடாமல் பிற்சேர்க்கையில் விடுபட்ட பெரியோர்கள், ஆளுமைகள் குறித்தும் சிறு குறிப்புகள் தந்திருப்பது அவரது தொலைநோக்கு சிந்தனையின் சிறப்பு. தமிழ் இலக்கியங்களில் வரும் வார்த்தைகளாகட்டும், இலக்கியம் படைத்த புலவர்களாகட்டும், அவர்தம் இலக்கியப் படைப்புகளாகட்டும், கண்ணப்பனார் வாழ்ந்த காலத்துத் தமிழ் ஆளுமைகளாகட்டும் அனைத்தும் அடங்கிய பெட்டகம் பாலூர் கண்ணப்ப முதலியார் "அருளிய' தமிழ் இலக்கிய அகராதி. இது அவர் தமிழுக்குத் தந்திருக்கும் "கொடை!'


 
 நடப்பு காலாண்டிதழ் "சங்கு' இதழ் தபாலில் வந்திருந்தது. அதிலிருந்தது, கவி.வெற்றிச் செல்வி சண்முகத்தின் "குடை தேசத்தில் மழை விற்பவள்' என்கிற கவிதைத் தொகுப்பிலிருக்கும் இந்தக் கவிதை.
 குளிர்பான புட்டிகளில் பொங்கி வழிகிறது ஆறுகளின் கோபம்!
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT