இளமங்கை ஒருத்தி மலையிடத்தே வாழுகிறாள். அவளை உளமார விரும்பிய ஒருவன் தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் உரைக்க முயலுகிறான். ஆனால், அவள் அதற்கு உடன்படாமல் "போ' என்று சொல்லிவிட்டாள். இளைஞன் தன் வருத்தத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.
தவ்வரித் தார்புயத் தாரூரர்
சண்டன் தடஞ் சிலம்பில்
கவ்வரி யிற்கய லாகிநின்
றாள்கம லப்பியாள்
பவ்வரி யிற்பதி னோரா
மெழுத்தெனும் பாவை நம்மை
வவ்வரி தன்னி லிரண்டாம்
எழுத்தை மறந்தனளே!
(தனிப்பாடல் திரட்டு)
இதில் தமிழ் எழுத்துகளில் ஓரெழுத்து ஒரு சொல் என்பவற்றை வரிசை எண் கூறி இலக்கண - இலக்கிய நயம் படைத்துள்ளதைக் காணலாம்.
"த' - பிரமன். அரி - திருமால்; தார்-மாலை
"க' - வரிக்கு அயல. "க' - சோலை
"ப' - வரியில் பதினோரம் எழுத்து "போ'- போய் விடு (ஏவல்)
"வ'- வரியில் இரண்டாம் எழுத்து "வ' - வருக (அழைப்பு)
பிரமன், திருமால் இவர்களுடைய மாலையைத் தோளில் அணிந்த திருவாரூர் சண்டன் (தியாகராசன்) வாழும் பெரிய மலையின் சோலையுள் நின்ற கமலப்பிரியாள் (இலக்குமி) போன்ற பாவை நம்மை (என்னை) "போ' என்று சொல்லிவிட்டாள், ஏனோ தெரியவில்லை? என்னை "வா' என்று அழைக்க மறந்துவிட்டாளே! இனி நான் என்ன செய்வேன்?
-ம. பாலசுப்ரமணியன்