தமிழ்மணி

தத்துவம் பொதிந்த தமிழ்ச் சொற்கள்

2nd Feb 2020 12:00 AM

ADVERTISEMENT

ஒரு மொழியின் முதல் அடித்தளம் எழுத்து. அதன் இரண்டாம் அடித்தளம் சொல். சொல் முதலில் ஒரு பொருளையே குறித்தது. காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளைக் காட்டியது. (எ.கா: காயம் - உறைப்பு, மிளகு, காழ்ப்பு, வடு, நிலைபேறு, பெருங்காயம், ஆகாயம்) ஒரு சில தமிழ்ச் சொற்கள் மறைமுகமாகத் தத்துவக் கருத்தை அறிவிக்கும் சிறப்பைப் பெற்றுள்ளன. இந்தச் சிறப்பு வேறு மொழிகளுக்கு உண்டா என்பது ஆய்வுக்குரியது.
 செல்வம் என்ற சொல், பணம், சொத்து ஆகிய பொருள் தரும். கூர்ந்து கவனித்தால் இச்சொல் அரிய கருத்து ஒன்றை அறிவிப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 செல்வம் என்பது "உம்மை விட்டுப் பிரிந்து செல்வோம்' என்ற பொருளையும் தரும். எனவே, நிலைத்திருக்காத செல்வம் ஒருவனிடம் இருக்கும்போதே அறம் செய்க என்ற தத்துவக் கருத்தை இது உணர்த்துகிறது. இப்படிப் பல தத்துவச் சொற்கள் தமிழில் உள்ளன.
 தேங்காய்: மங்கல விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது. இனி இங்கே தேங்காயம் - தேங்கி நிற்காதே என்று இச்சொல் உணர்த்துகிறது.
 ஒளி: ஒருவர் உயிருடன் இருக்கும்போதே பெறும் பெருமை (ஒளி ஒருவருக்கு உள்ள வெறுக்கை (குறள்971). எனவே, ஒவ்வொருவரும் வாழும்போதே பெருமை பெறக்கூடிய செயல்கள் செய்ய வேண்டும்.
 பிணி: வெளியே இருந்து வந்து உடம்பைச் சேர்ந்து, உருவாகும் நோய். சுற்றுச் சூழல் சீர்கேட்டால் பிணி ஏற்படும். எனவே, சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
 மாக்கள் (மா-விலங்கு. மாக்கள் - விலங்கு நிலையிலிருந்து கூர்தல் அறம் எனப்படும் பரிணாம வளர்ச்சி மூலம் தோன்றிய மக்கள்). மரபு வழிவந்த விலங்குணர்ச்சிகளை மனிதன் நீக்கிக்கொள்ள வேண்டும்.
 திருநீறு: சிவ பக்தர்கள் நெற்றியிலும், பிற உறுப்புகளிலும் தடவிக்கொள்ளும் விபூதி எனும் சாம்பல். இதைத் தடவிக் கொள்ளும் மனிதன் ஒருநாள், முடிவு நிலை அடைந்து, எரியூட்டப்பட்டுச் சாம்பலாவன். எனவே, உயிருடன் இருக்கும்போது அவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
 கடவுள்: அனைத்தையும் கடந்த இறைவன் (மனிதனின் ஆராய்ச்சி, கற்பனை முதலிய எல்லாவற்றையும் கடந்து, தாண்டி - இருப்பவன். இறைவன் ஒன்றென்று உணர்ந்து அவன் உண்டு என்று நினைத்து நல்வழி நடப்பதே மனிதனின் கடமை.
 இயவுள்: அண்டங்களையும் அனைத்தையும் இயக்கும் இறைவன். ஆகவே, இப்பெருஞ்செயலை நான் செய்தேன் என்று ஒருவன் எண்ணி மமதை கொள்ளக்கூடாது.
 தீமை: தீயின் தன்மை போன்று மனத்தைச் சுடும் செயல். வாட்டி வதைக்கும் தீயை யாரும் தழுவுவதில்லை. தீமையும் அப்படிப்பட்டது தான். எனவே, தீமையை யாரும் செய்யக்கூடாது.
 நீர்மை: நீரின் தன்மை. நீர் குளிர்ச்சியானது. உயிரினங்களை வளர்ப்பது போற்றப்படுவது. ஆகவே நீரின் இயல்புடையவனாக இருப்பவனை அனைவரும் போற்றுவார்கள்.
 வெறுக்கை: செல்வம். தவறான பயன்பாடு காரணமாகச் செல்வம் வெறுக்கப்படும் நிலையைப் பெறும். ஆகையால், செல்வம் உடையவன் பிறரால் வெறுக்கப்படக் கூடிய செயல்களைச் செய்தல் கூடாது.
 பருத்தி: ஆடை நெய்வதற்குப் பயன்படும் மூலப்பொருள். காய்நிலையில் அடக்கமாக இருந்து, பக்குவம் அடைந்து முற்றிய நிலையில் வெடித்து உள்ளீட்டுப் பஞ்சு பருத்துப் பெரிதாகத் தோன்றும். முதல் நிலையில் அடங்கியிருந்து, பக்குவப்பட்ட நிலையில் ஒருவனுக்கு அறிவு விரிவடையும்.
 சுற்றம்: சொந்தக்காரர். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்ற முறையில் சொந்தக்காரர்களுக்கு உதவி புரிந்தால், அவர்கள் உதவி புரிந்தவனைச் சுற்றி வலம் வருவர்.
 இப்படித் தமிழில் ஒரு சொல்லின் நிழலில் குறிப்புப் பொருள் தத்துவக் கருத்து இருக்கிறது. சங்கப் பாடல்களில் உள்ளுறை, இறைச்சி என்ற மறைமுகப் பொருள்கோளும் உள்ளன.
 இவை பழைமை அருந்தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன.
 }முனைவர் மலையமான்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT