தமிழ்மணி

"சாமியானா' என்கிற துணிப்பந்தல்!

2nd Feb 2020 12:00 AM

ADVERTISEMENT

இல்லங்களில் நடைபெறும் மங்கலம் அல்லது மங்கலம் அல்லாத பிற நிகழ்வுகளுக்குமென பந்தல் அமைக்கும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளது. வீட்டுக்கு முன்புறம் இடப்படும் திருமணப் பந்தல் பற்றி அகநானூறு பேசுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் பசு, எருமைக் கன்றுகளுக்காக அமைக்கப்பட்ட குட்டையான கால்களையுடைய குறும்பந்தல் பற்றிய செய்திகள் (அடிகள் 297-298) உள்ளன.
பசிய தழைகளாலான பந்தலைப் புறநானூறு (பா. 262) சுட்டுகிறது. பகைவருடன் போரிடச் செல்லும் வீரர்கள் பகைப்புலத்தில் தங்கியிருந்து போரிட வசதியாகப் பசுந்தழைகளால் ஆன பாசறைகள் அமைக்கப்பட்டதை, அதே இலக்கியப் பாடல்களுள் சில (372, 373) தெரிவிக்கின்றன. அத்தகைய பாசறையைக் "கட்டூர்' என்கிறார் ஒளவையார் (புறம். 295).
மண்ணால் எழுப்பப்பட்ட பெருஞ்சுவரின் மேல் அச்சுவர் மழையினால் கரைந்துவிடாமலிருக்க, "ஊகம்' என்னும் புல் கற்றைகளை அதன் மேல் வேய்ந்தனர் (பெரும். அடி. 122). எலியும், அணிலும் மேலே ஏறித் திரிய முடியாதபடி முள்ளினை உடைய ஈந்திலைகளை வீட்டுக் கூரையாக வேயவும் செய்தனர் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (88).
தற்காலத்தில், "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குப் பந்தல்களாக அமைக்கப்படுகின்றன. இடுதல் மற்றும் அகற்றுதல் என்ற செயல்களின் எளிமை மற்றும் விரைவு பற்றியே இத்தகைய துணிப்பந்தல்கள் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. "சாமியானா' என்பது தமிழ்ச்சொல் அன்று.
"சாமியானா' என்ற பெயரில் அழைக்கப்படும் துணிப்பந்தல்கள் சங்க காலத்தில் புடைவைத் துணிப்பந்தல்களாக இருந்துள்ளன. அது, இறப்பு நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவும் இருந்துள்ளன. புறநானூற்றுப் பாடலொன்றில் இக்குறிப்பு (பா.260) உள்ளது.
உவமைகளை ஆள்வதில் திறம்மிக்கவரான வடமோதங்கிழார் எனும் புலவரின் அப்பாடல், "துணிப்பந்தல்' பற்றிய குறிப்பினைத் தருகிறது. அதில், போரில் மாண்ட வீரர்களுக்கென நாட்டப்பெறும் நடுகல்லிற்கான மேற்கூரையாகப் புடைவைத் துணிப்பந்தல் அமைக்கப்படும் வழக்கம் குறித்த செய்தி பொதிந்துள்ளது. இப்பாடலுக்கான ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரை நுட்பமிக்கது.
ஒருகாலத்தில், பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றதை அறிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வீரனொருவன், பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டுக் கொணர்ந்தான். என்றாலும், நிரையை மீட்பதற்காகச் செய்த போரில், பகைவரது அம்பு தைக்க, அவன் புண்பட்டிருந்தான்; ஊரருகே வந்ததும் இறந்தும் போனான்.
பின்பு, அவனது வீரச்செயலை மெச்சிய ஊரார், அவனுக்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும் எழுதிச் சிறப்பித்தனர். அவன் வாழ்ந்த காலத்தில், நிரம்பக் கொடை வழங்கிப் புகழ்பெற்றவன். அவன் போரில் வென்று, நடுகல்லாகிவிட்ட செய்தியை அறியாத பாணன் ஒருவன், வழக்கம்போல் பொருள்பெற அவன் இருப்பிடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப் பாணனைப் பார்த்த உள்ளூர்ப் பாணன் ஒருவன் கூறுகிறான், ""பாணனே! இனி நீ, ஏற்கெனவே அத்தலைவன் உனக்குத் தந்த நிலத்தை உழுது உண்பதோ, வேறொருவரிடம் சென்று இரந்து பெற்று உண்பதோ செய்யலாமே தவிர, வேறெதுவும் செய்வதற்கில்லை. ஏனெனில், நிரை மீட்பதற்காகப் போரிட்டு, தோல் உரிக்கும் பாம்பு போல, புகழுடம்பாகிய சட்டையை விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்று விட்டான். அவனது பெயர், புடைவையால் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடப்பட்டுள்ள நடுகல்லின்மேல் எழுதப்பட்டுள்ளது. அங்குச் சென்று அதனைப் பார்த்து வழிபடுக'' என்றும் கூறி வருந்துகின்றான்.
"கையறுநிலை' என்ற துறையிலமைந்த அப்புறப்பாடலின் பின்வரும் பகுதிதான், நடுகல்லின் மேற்கூரையாக இடப்பட்ட புடைவைத் துணியாலான "சங்ககாலப் பந்தலைச்' சுட்டுகிறது.
"உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்சை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT