இளமையிலேயே கற்றுணர்ந்த வல்லோரையும், முதுமையிலும் கல்வித்திறம் அற்றவரையும் பூக்காமலேயே காய்க்கின்ற மரத்திற்கும்; பூக்கள் மட்டுமே பூத்து காய்க்காத மரத்திற்கும் உவமையாக்கும் நயமான சிறுபஞ்சமூலம் தரும் பாடல்கள் இவை. இந்நூலை இயற்றியவர் காரியாசான் எனும் புலவர்.
"பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - காலா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்
குரையாமை செல்லு முணர்வு'
இளம் வயதிலேயே கல்வி கேள்விகளில் வல்லவராக விளங்குவர் ஒருசிலர். அவர்கள் ஆண்டுகளால் இளையர் ஆயினும் அறிவினால் முதிர்ந்தவராவர். பாத்தியிட்டு, நீர் ஊற்றப் பின்னர் முளைவிடும் வித்துக்கள் உண்டு. ஆனால், இவை ஏதுமின்றித் தானே முளைக்கும் வித்தும் உண்டு. எனவே, இளையராயிருந்தும் கற்றறியும் திறன் அவர்கட்குத் தானே தோன்றுமாப்போல் பிறர் கற்பிக்கத் தேவை இராது. அதாவது, பலா முதலான மரங்கள் பூக்கள் இன்றியே காய்ப்பது போன்றது இவர்களின் தன்மை.
"பூத்தாலுங் காயா மரமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா துணர்வு'
வயதில் முதிர்ந்தவராக விளங்கும் ஒருசிலர் அறிவு முதிர்ச்சி பெறாதவர்களாக இருப்பர். நூல்களைக் கற்றும் தெளியாதவர் ஆண்டில் (வயதில்) முதிர்வாரே அன்றி, அறிவில் முதிராதவர். பாத்தி கட்டி விதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு. அதுபோன்றதே இவர்களது தன்மையுமாம். பாதிரி முதலான மரம் பூத்தாலும் காய்க்காத தன்மை போன்றதாம் இவர்களின் தன்மை.
- முனைவர் கு.ச. மகாலிங்கம்