தமிழ்மணி

முன்புறக் கண்டிலென் - கேள்வி முன்பிலென்!

27th Dec 2020 09:35 PM | முனைவர் இரா. மாது

ADVERTISEMENT

 

இராவணன் அவையில் அவனுக்கு நல்லறிவு புகட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்ததை உணர்ந்தான் வீடணன். "என் விழிமுன் நின்றால் உன்னைக் கொல்லுவேன்' என்று ராவணன் கூற, அவனிடமிருந்து விலகி, "எங்கு செல்வது?' என்று உடன்வந்த அன்பர்கள் நால்வருடன் விவாதித்து, ராமனைச் சென்று அடைவதே சாலச் சிறந்தது என்று புறப்பட்டபோது, வீடணன் கூற்றாக அமைந்த பாடல் இது.

"முன்புறக் கண்டிலென் கேள்வி முன்பிலென்
அன்புறக் காரணம் அறிய கிற்றிலேன்
என்புறக் குளிரும் நெஞ்சு உருகுமேல், அவன்
புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால்'

"எல்லையற்ற பெருமை வாய்ந்த ராமனை நேரில் இன்றுவரை கண்டேன் இல்லை. அவன் பெருங் குணங்களை அறிந்தோர் சொல்லிக் கேட்டுத் தெரிந்தேன் இல்லை. அவனைக் கருதி நிற்கின்ற பொழுது என் எலும்பு குளிர்ந்து, நெஞ்சு உருகுகின்றது. அவன்மேல் இனம்புரியாத காதல் என் உள்ளத்தில் வந்து அமர்ந்து கொள்கிறது. மாயத் தொல்வினையறுத்து, இனி பிறவி என்ற ஒன்றினை அடையாதவாறு காக்கும் பரம்பொருளோ?' என்று வீடணன் கூறுகின்றான்.

ADVERTISEMENT

ராமனை வீடணன் இதுநாள்வரை நேரில் கண்டதில்லை என்பது சரியே. ஆனால், ராமனைக் குறித்து இதுநாள் வரையில் கேட்டதில்லை என்று கூறுவதில்தான் சிக்கல் எழுகின்றது. ஏனெனில், அசோக வனத்தில் சீதையைக் கண்ட பிறகு அனுமன், ராவணனைக் காணும்பொருட்டு அசோக வனத்தை அழிக்கிறான். இந்திரசித்தனால் சிறைபிடிக்கப்பட்டு ராவணன் முன்னால் நிறுத்தப்படுகிறான். 

அப்போது அவையில் கும்பன், வீடணன் மற்றும் பலர் கூடியிருக்க,  ""மூலமும் நடுவும் ஈறும் இல்லாத,  காலமும் கணக்கும் நீத்த காரணன், கைவில் ஏந்தி, அறத்தை நிலைநிறுத்தவும் தீயோர்களைக் காய்ந்து, தக்கோர் இடர் துடைப்பதற்காகவும் இப்புவிக்கு ராமன் என்னும் நாமம் தாங்கி வந்த பரம்பொருளின் பொருட்டுத் தூதாக வந்தவன் நான்'' என்று பேசுகின்றான்.     

அப்படியெனில், "கேள்வி முன்பிலென்' என்னும் வீடணன் கூற்றாகக் கம்பர் கூறுவதன் பொருள்தான் என்ன? 

பாடலின் முதலடியை முன்நோக்காது, பின்வரும் அடிகளை முன்நோக்கிப் பொருள்கொண்டு, பின் முன்னடியைச் சிந்தித்தால் தக்க பொருளினைக் காண 
இயலும்.

மணிவாசகரின் வாசகத்திற்கிணங்க, ராமன் குறித்தான அற்புதமான அமுத தாரைகளை வீடணனின் எற்புத் துளைதொறும் ஏற்றினான் அனுமன். அன்றே அவன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் ராமன் ஆட்கொண்டான். முன்பு செய்த தவத்தால், முழுதும் பக்குவப்பட்ட நிலையில் நிற்கும் ஓர் ஆன்மா பரம்பொருளை நாடும்போது, உடம்பில் சில மெய்ப்பாடுகள் தோன்றுவது உண்டு. 

அதனைக் கருத்தில் கொண்டு வீடணன் கூற்றினை நோக்க வேண்டும். "என்னுடைய எலும்பு குளிர்கின்றது. உள்ளம் உருகுகின்றது. சாயா அன்பு ராமன்மேல் உண்டாகக் காரணம் நான் அறியகிற்றிலேன். இவன்  என்னைக் கரையேற்ற வந்த பரம்பொருளே! இதில் யாதொரு ஐயமுமில்லை' என்ற எண்ணம் வந்த நிலையில் வீடணன் உடம்பில் தோன்றிய மெய்ப்பாடுகள் அனைத்தும் அவனுக்குப் புதியவை. 

"இப்படியோர் ஆனந்தப் பரவச நிலையை இதற்குமுன் நான் என் அனுபவத்தில் கண்டதில்லை' என்பதைத்தான் "முன்புறக் கண்டிலென்' என்கிறான் வீடணன். 
சரி, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருந்து, இந்த ஆனந்தநிலை இப்படித்தான் இருந்திருக்கும் என்று சொல்லியும் கேட்டதில்லை என்பதையே "கேள்வி முன்பிலென்' என்கிறான்.

Tags : தமிழ்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT