தமிழ்மணி

எந்தாய்!

27th Dec 2020 09:32 PM | முனைவர் பா.சக்திவேல்

ADVERTISEMENT


தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக, சைவ சமய இலக்கியங்களில், "எந்தாய்' என்கிற சொல் ஆண்}பெண் பேதமின்றி சமநிலை வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது.

"பொன்னம்பலத்தாடும்  எந்தாய், இனித்தான் இரங்காயே!' என்று கோயில் மூத்த திருப்பதிகத்தில் மணிவாசகர் பொன்னம்பலத்து நாயகனைப் போற்றுகிறார்.

"மாறுசேர்படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப்போர்  பண்ணி நீறு செய்த எந்தாய்!' (பா.4, ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி) என்று நம்மாழ்வார் கண்ணனின் பெருமையை நயம்பட உரைக்கின்றார். இந்த இரண்டு பாடல்களிலும் எந்தாய் என்பது ஆண்பாலைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பதினேழாம் நூற்றாண்டில்  வாழ்ந்த குமரகுருபரர் "சிதம்பர செய்யுட் கோவை' என்னும் நூலில்  "எந்தாய்' என்கிற சொல்லை இருபாலும் சேர்ந்து  ஒருங்கே அமைகின்ற மாதொருபாகனை அழைக்க இலக்கண விதிப்படி  பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

"ஐயிறு பொதுப்பெயர்க் காயும் ஆவும் 
உருபாம் அல்லவற் றாயும் ஆகும்'

என்ற நன்னூலின்படி (நூற்பா}306)  ஈண்டு  ஐகாரம் "ஆய்' எனத் திரிந்து வருதல்  உருபாகும்.  எந்தாய் - எம்தாய் என அம்மையைக் குறிப்பதாகவும்;  எம் தந்தையின் } ஐகாரம் "ஆய்'  எனத் திரிந்து   "எந்தாய்'  - தந்தையைக் குறிப்பதாகவும்  உள்ளது.

"செவ்வாய்க் கருங்கண் பைந் தோகைக்கும்
வெண்மதிச் சென்னியர்க்கும் 
ஒவ்வாத் திருவுரு ஒன்றே உளது
 அவ்வுருவினை மற்று 
எவ்வாச்சியம் என்று எடுத்திசைப்போம்
இன்னருட் புலியூர்ப் 
பைவாய் பொறியரவு அல்குல்
எந்தாய் என்று பாடுதுமே!'

"தந்தையாக உள்ள சிவபெருமான் தாயுமாகவும் அருள் பாலிக்கிறார்.  அவரைப்   புகழ்ந்து பாடுவதற்கு அம்மையே! அப்பா! என்றாலும் என் தாயே! என் தந்தையே! என்றாலும் தனித்தனியே இரண்டு சொற்களை வைத்து அழைப்பதாகும். ஒரே விளிப்பில் இறைவனைப் பொதுப்பாலில் அழைப்பதற்கு குமரகுருபரர்  எடுத்தாண்ட சொல் "எந்தாய்' என்பதாகும்.

இதுபோல, "எந்தாய்' என்கிற சொல் சமய இலக்கியத்தில் பரவலாகவே கையாளப்பட்டிருக்கிறது.

Tags : தமிழ்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT