போர் உலகுக்குப் புதிதன்று. அது தொன்றுதொட்டே இருந்து வருவதாகும். இவ்வுண்மையை,
ஒருவனை யொருவ னடுதலும் தொலைதலும்
புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை (புறம். 76:1-2)
என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே புலவர் இடைக்குன்றூர் கிழார் குறிக்கிறார். தமது ஆளுமை எல்லா நாடுகளிலும் இருக்க வேண்டும் என்ற பெருமிதத்தால் எழும் பேராசையே போராசையாகிறது.
மாற்று வேந்தர் குடிமக்களை வருத்தும் கொடுங்கோலராயின் அக்குடிமக்களைக் காக்க வேண்டியும், தம் ஆளுமையின் கீழ் எல்லா நாடுகளும் அடங்கிக் கிடக்க வேண்டியும். தம் குடிமக்கள் வறுமையின்றி வாழச் செய்ய பொருள் வேண்டியும், விரும்பிய பெண்களை அடைய வேண்டியும் ஆகிய இந்நான்கு காரணங்களுக்காக பழங்காலத்தில் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பாக, புறநானூறு சித்தரிக்கக் காணலாம். ஆனால், அண்மைக் காலங்களில் முதலிலிரு காரணங்களுக்காகவே போர்கள் நிகழ்ந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
பழங்கால தமிழகத்தில் போருக்கான காரணங்கள் பல இருந்தாலும் அப்போர் அறத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்தன. போர் என்பது அறத்திற்கு மாறுபட்ட மறமாக இருந்தாலும், மறத்திலும் அறம் போற்றப்பட்டது. அதனால்தான் அக்காலப்போர் "நல்லமர்' (புறம் 270) "அறத்தின் மண்டிய மறப்போர்' (புறம் 62:7) "அறத்தாறு நுவலும் பூட்கை மறம்' (புறம் 9) எனக் கொள்ளப்பட்டது. "அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை' (குறள் 76) என்ற திருவள்ளுவர் கூற்றும் அதற்கு அரண் சேர்க்கும்.
இக்காலப் போர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென தீங்கற்ற உயிரினங்களையும் (மக்கள் உட்பட) அழிக்கும் நோக்கோடு நிகழ்வனவாய் உள்ளன. ஆனால் அன்று, நாட்டின் மீது போர் தொடுக்கக் கருதும் வேந்தன் பகை வேந்தனுக்கு முன்கூட்டியே ஓலை அனுப்பி, அறிவித்து எச்சரிக்கும் இயல்புடையவனாக இருந்திருக்கிறான். எச்சரித்த பின்னரும் வாளா இருப்பானாயின் பகை நாட்டின் தீங்கற்ற உயிரினங்களைக் கவர்ந்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று காப்பாற்றுவான். அப்போது வேந்தன் வெட்சி மாலை சூடுவதன் நோக்கமும் அதுவேயாகும்.
"பசுக்கள், பசுவின் இயல்பு கொண்ட பார்ப்பனர்கள், தவசீலர்கள், பத்தினிப் பெண்டிர், நோயுற்றோர், முன்னோர்க்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்வதற்கான குழந்தைகளைப் பெறாதவர் ஆகியோர் போருக்குப் பலிலியாகாமல் பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லுங்கள்' என்று அறநெறி போற்றும் போரை (புறநா, பா.9) குறிப்பார் புலவர் நெட்டிமையார்.
"போரே வேண்டாம்' என்ற நெறியோடு வாழும் மன்னனும் சிலபோது தம் குடிமக்கள் வறுமை நீங்க, பகை நாட்டுப் பொருளுக்காக போர் தொடுக்கக் கருதுவான் என்பதனை மாடலன் மதுரைக்குமரனார் எனும் புலவர் கூற்றால் அறியலாம்.
இரவலன் வறுமை போக்க தன்னை இரந்து நிற்கும் காலத்து, மன்னனும் அவ்வூரின் படைக் கலங்கள் செய்து தரும் கொல்லனிடம் இரவலர்தம் உண்ணாத வயிற்றைக் காட்டி, "அவர் வறுமை நீங்கப் போர் செய்ய வேண்டும்; உடனே திருந்திய நல்ல வேல் போன்ற கருவிகளை வடித்துத் தா' என இரந்து நிற்பதாக அப்புலவர் (புறம். 180) பாடல் உணர்த்துகிறது.
போர் புரியும் வீரர்கள் அக்காலத்தில் களத்தில் மேற்கொள்ள வேண்டிய அறத்தை ஆவூர் மூலங்கிழார் பாடல் வழி அறியலாம். களத்தில் பகைவர் தம்மைத் தாக்காதவரை சுத்த வீரன் தாக்கக்கூடாது. தாக்கினாலும் தம்மொடுவொத்த வலிமையுடையவனாக இல்லாதிருந்தால் தாக்கக்கூடாது (புறம்.301) என்று குறிப்பிடுவார் புலவர்.
பகைவர் முற்றுகைக்கு அஞ்சி ஒடுங்கியிருக்கும் வேந்தனோடு போர் புரிவதும் அக்காலத்தில் அறத்திற்கு முரணானது (புறம். பா.36) எனக் கருதப்பட்டது. அறநெறி நின்று போரில் மடிந்த வீரர்கள் வாடாப் பூவின் இமையா நாட்டத்தவர்கள் (தேவர்கள்) வாழும் அரும்பெறல் உலகிற்கு விருந்தினராகச் செல்வர் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்ததால் (புறம்.62) போரில் அறம் பெரிதும் போற்றப்பட்டதாகக் கொள்ளலாம்.
உயிர்களையும் நாட்டையும் அழிவுப் பாதைக்குக்கொண்டு செல்லும் போர் மறமாகக் கருதப்பட்டாலும், பழங்காலத்தில் அறத்தின் மண்டிய (திரண்ட) போராக "அறத்தாறு நுவலும் பூட்கை மறமாகக் கண்டது' நம் பண்டைத் தமிழ்ச் சமூகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.