தமிழ்மணி

சரபேந்திர வைத்தியச் சுவடியில் "காய்ச்சல்' சிகிச்சை!

9th Aug 2020 03:54 PM | -முனைவர் த. ஆதித்தன்

ADVERTISEMENT


"காய்ச்சல்' அனைவருக்கும் ஏற்படக்கூடிய சாதாரண ஓர் உடல் உபாதைதான். ஆனால், உலக வரலாற்றில் அவ்வப்போது புதிது புதிதான பெயரினைத் தாங்கிய காய்ச்சல் தோன்றி அச்சுறுத்துவதுண்டு.

இப்பொழுது பரவிவரும் நோய்த் தொற்றால் (கரோனா) உலகம் முழுவதும் மருத்துவத்துறை முடுக்கிவிடப்பட்டு,  ஆய்வுகள் நடந்து வருகின்றன. இருப்பினும், அனைத்து வகையான மருத்துவப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதா எனத் தெரியவில்லை. 


ஆனால், தஞ்சாவூரை மையமாகக்கொண்டு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னர் காலத்தில் அத்தகைய ஆய்வுகளைச் செய்துள்ளனர். இன்று சித்தா, யுனானி, ஆயுர்வேதம், அலோபதி போன்ற மருத்துவத் துறைகள் தனித்தனி நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. தன்னுடைய மருத்துவத்துறை ஆர்வத்தால் நம் நாட்டு மருத்துவ முறைகளை நன்கு அறிந்தவர்களையும், மேலை நாட்டு மருத்துவ முறைகளை செவ்வனே செய்பவர்களையும் ஒருங்கிணைத்து ஆய்வு மேற்கொள்ள வைத்துள்ளார் சரபோஜி மன்னர். அவ்வாய்வுகள் நடைபெறுவதற்காக அவர் உருவாக்கியதே
"தன்வந்திரி மகால்' என்கின்றனர்.

தன்வந்திரி மகாலில் பல்துறை சார்ந்த மருத்துவர்களும் இணைந்து ஒவ்வொரு நோய்க்கும் உரிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் நமது நாட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டே மருந்துகளை உருவாக்கியுள்ளனர்.  

ADVERTISEMENT

அவ்வாறு கண்டறியப்பட்ட நான்காயிரம் மருத்துவ முடிவுகளை சரபோஜி மன்னர் தனது அவையில் இருந்த தமிழ்ப் புலவர்களைக் கொண்டு செய்யுள்களாக இயற்றியுள்ளார். 

அம்மருத்துவ முடிவுகளைக் கொண்ட சுவடிகள் இன்றளவிலும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் அதனை தனித்தனி நூல்களாகவும் பதிப்பித்துள்ளனர்.  அவற்றுள் ஒன்றே "சரபேந்திர வைத்திய முறைகள் - ஜ்வர ரோக சிகிச்சை' என்னும் நூலாகும். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள காய்ச்சல் குறித்த தகவல்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.

உடல் அவயங்கள் மட்டுமின்றி உள்ளத்தையும் துன்புறுத்துவது காய்ச்சல். பல்வேறு உபாதைகள் தோன்றப் போகின்றன என்பதை அறிவிக்கும் முன் அறிவிப்பானாகவும் காய்ச்சல் திகழ்கிறது. உயிர் தோன்றும் போதும், பிரியும்போதும் காய்ச்சல் ஏற்படும் என்று "சரபேந்திர வைத்தியச் சுவடி' குறிப்பிடுகிறது. எனவேதான், காய்ச்சலை "நோய்களின் அரசன்' என்னும்  பொருளில் "ரோகபதி' என்கின்றனராம்.

இம்முறையில் காய்ச்சலின் தன்மையினைக் கொண்டும், அது உண்டாகும் காரணங்களைக் கொண்டும் காய்ச்சலை அடிப்படையான எட்டு வகைமையினுள் கொண்டு வருகின்றனர்.  அவை ஒவ்வொன்றுக்கும் பல உட்பகுப்புகளும் உள்ளன.

இயல்புகளின் அடிப்படையில் சரீரத்தில் ஆரம்பிக்கும் ஜ்வரம், மனத்தில் ஆரம்பிக்கும் ஜ்வரம், அதிகக் குளிர்ச்சியால் ஏற்படுவது (ஸெளம்யம்), அதிக வெப்பத்தால் ஏற்படுவது (ஆக்நேயம்), உள்ளுக்குள்ளேயே வெப்பம் இருப்பது (அந்தர்வேகம்), வெப்பம் விசிறியடிப்பது (பாகிர்வேகம்), இயற்கையாக ஏற்படுவது (ப்ராக்ருதம்), இயற்கைக்கு மாறாக ஏற்படுவது (வைக்ருதம்) என்றும் பகுத்துள்ளனர். இதேபோன்று காய்ச்சலுக்குக் காரணமான வெப்பம் உடலில் தங்கும் கால அளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாகவும், காய்ச்சல் தங்கியிருக்கும் தாதுக்களைப் பொறுத்து ஏழு வகைகளாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.

காய்ச்சல் எப்பொழுது வெளிப்படும், அதன் இயைபு எப்படி இருக்கும், அது வெளிப்படும்முன் எத்தகைய உடல்மாற்றம் இருக்கும் என்பன குறித்தும் இவ்வைத்திய முறையில் விவரித்துள்ளனர். சிறப்பம்சமாக எந்த வகையான காய்ச்சலுக்கு எந்த வகையான அறிகுறிகள் தோன்றும் என்பன குறித்து எடுத்துரைத்துள்ளமையைக் குறிப்பிடலாம்.

யூகிமுனி வைத்திய சிந்தாமணி, ஜ்வர கணிதம் - வைத்திய அட்டவணை, ஜ்வர கண்டிகை - அகத்தியர் 2000 உரை முதலிய சுவடிகளில் உள்ள தகவல்
களையும் "சரபேந்திர வைத்திய முறைகள்-ஜ்வர ரோக சிகிச்சை' சுவடிப் பதிப்பில் எடுத்தாண்டுள்ளனர். இச்சுவடிப் பதிப்பில் குறிப்பிட்டுள்ள "காய்ச்சலானது உடலில் தோன்றும் நேரம், எந்த நட்சத்திரம் என்பதைப் பொறுத்து அது உடலில் நீடிக்கும் காலமும் வேறுபடும்' என்னும் தகவல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

கசாயங்கள், குளிகைகள், தைலங்கள், பற்ப வகைகள், லேகியங்கள், சூரணம், வேது, வடகம் முதலிய - காய்ச்சலுக்கு இயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய 282 வகை மருந்துகள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. அவற்றை எவ்வாறு தயாரிக்க வேண்டும், உபயோகப்படுத்துவது எப்படி என்பன போன்ற தகவல்களும் காணப்படுகின்றன. 

காய்ச்சல் குறித்த இச்சுவடிப் பதிப்பில் உள்ள தகவல்களை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு உட்படுத்தினால் மருத்துவ உலகில் புதிய பல 
மருத்துவ முடிவுகள் கிடைக்கக்கூடும். அவ்வாறு கிடைத்தால், மருத்துவ 
உலகுக்கும், மனித சமுதாயத்துக்கும் நிச்சயம் நன்மை பயக்கும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT