வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!

வண்டைப் பார்த்து அதனிடம் வஞ்சியர் தோற்பதா? ஆம்! அவர்கள் தோற்றனர் என்று உறுதியாகச் சொல்கிறார் மருதக்கலியின் 27-ஆவது செய்யுளில்  மருதனிளநாகனார் என்னும் புலவர்.
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!

வண்டைப் பார்த்து அதனிடம் வஞ்சியர் தோற்பதா? ஆம்! அவர்கள் தோற்றனர் என்று உறுதியாகச் சொல்கிறார் மருதக்கலியின் 27-ஆவது செய்யுளில்  மருதனிளநாகனார் என்னும் புலவர்.   

பரத்தைமையில் தலைவன் திளைத்திருக்கும் செய்தி அறிந்த தலைவி, அவனிடம் ஊடல் கொண்டிருந்தாள். அவளது ஊடலைப் போக்க அவன் "தெய்வ மகளிர்' விளையாடிய விளையாட்டைக் கனவில்  கண்டதாக உரைத்தான். அதைக்கேட்ட தலைவி அவனது நனவு நிகழ்வுகளே கனவு என்று உரைத்து, தொடர்ந்து ஊடல் கொண்டாள். அவன், அவளை அமைதிப்படுத்தினான். அக்கனவை மருதனிளநாகனார் விவரிக்கிறார். 68 வரிகள் உடைய இப்பாடல் ஒரு நாடகம்போல் நம் கண்முன் நிகழ்கிறது.

தலைவி: எத்தனை முறை பார்த்தாலும் இனிமையும், மென்மையும் உடைய பெருமகனே! அங்கு நீ கண்டது என்ன? அதைச் சொல்?

தலைவன்: "அன்னங்கள் தமது கூட்டத்தோடு அந்தி நேரத்தில் தாம் இருந்த இடத்தை விட்டுப் பறந்து இமயமலையில் ஒரு பக்கத்தில் தங்கியதைப் போல, வையைக் கரையில் நீர்த்துறைக்கு அருகில் உள்ள மணற் குன்றின் மேல் மகளிர் கூட்டமாகச் சேர்ந்து இருந்ததைக் கண்டேன்' எனக்கூறி, தாம் கண்ட கனவை விரித்துரைக்கிறான். 

" ...    ....  அக் காவில் 
துணை வரிவண்டின் இனம்
மற்றாங்கே நேரிணர் மூசிய வண்டெல்லாம் அவ்வழிக் 
காரிகை நல்லார் நலங்கவர்ந்து உண்பபோல் ஓராங்குமூச அவருள்
ஒருத்தி, செயலமை கோதை நகை; 
ஒருத்தி, இயலார் செருவில் தொடியொடு தட்ப;
ஒருத்தி, தெரிமுத்தம், சேர்ந்த திலகம்; 
ஒருத்தி, அரிமாண் அவிர்குழை ஆய்காது வாங்க,
ஒருத்தி, வரியார் அகல் அல்குல் காழகம்; 
ஒருத்தி, அரியார் ஞெகிழத்து அணிசுறாத் தட்ப;
ஒருத்தி, புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று 
வண்டினம் ஆர்ப்ப, இடைவிட்டுக் காதலன் 
தண்தார் அகலம் புகும். 
ஒருத்தி, அடிதாழ் கலிங்கம் தழீஇ, ஒருகை  
முடிதாழ்  இருங்கூந்தல்  பற்றி, பூவேய்ந்த
கடிகயம் பாயும்  அலந்து. 
ஒருத்தி, கணங்கொண்டு அவைமூசக் கையாற்றாள், பூண்ட 
மணம்கமழ் கோதை பரிபுகொண்டு ஓச்சி 
வணங்குகாழ் வங்கம் புகும். 
ஒருத்தி, இறந்த களியான் இதழ்மறைந்த கண்ணள் 
பறந்த அவை மூசக் கடிவாள், கடியும் 
இடம்தேற்றாள் சோர்ந்தனள் கை.  (மருதக்கலி: 92. 28-50)

ஒரு பொழிலில் காரிகை நல்லார் பூங்கொடிகளை வளைத்துப் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, சோலையிலிருந்த வண்டுகள் நங்கையரின் நலங் கவர்ந்து உண்பது போல் வந்து அவர்களை மொய்த்துக் கொண்டன. அது  பாண்டியன் போர் புரிந்த போர்க்களம்  போல இருந்தது.

வண்டுகளின் கூட்டத்தைக் கண்டு அவர்கள் பயந்தோடியதில், ஒருத்தியின் மலர் மாலையும்,  முத்துமாலையும் வேறொருத்தியின் அசையும் தொடியில் மாட்டிக் கொண்டன; ஒருத்தி நெற்றியில் திலகமிட்டு அணிந்திருந்த முத்துவடத்தை இன்னொருத்தியின் காதில் அணிந்திருந்த மாட்சிமைப்பட்ட மகரக் குழையில் மாட்டிக் கொண்டது; ஒருத்தியினது தேமலையுடைய அகன்ற அல்குலின்  துகிலை வேறொருத்தியின் சிலம்பில் கிடந்த சுறா வடிவுடைய மூட்டுவாயில் சிக்கிக் கொண்டது.

புலவியால் கணவனைத் தழுவாதிருந்த ஒருத்தி, வண்டினம் மொய்த்து ஆரவாரம் செய்வதால் வருத்தமடைந்து, புலவியைக் கைவிட்டு கணவன் மார்பில் உடனே பொருந்தலானாள்; ஒருத்தி, அடியில் தொங்கிய ஆடையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்ற கையாலே, முடிக்கப்பட்ட முடி குலைந்த கரிய கூந்தலைப் பிடித்துக்கொண்டு மலர்கள் நிறைந்த அக்குளத்தில் பாய்வாள்; ஒருத்தி, மொய்க்கும் வண்டுகளைக் கையால் ஓட்ட மாட்டாதவளாய், நறுமணம்  கமழும் மாலையைத் துண்டித்துக்கொண்டு ஓடினாள். இவ்வாறு மங்கையரெல்லாம் வண்டுகளுக்குத் தோற்றார், யான் இப்படியொரு கனவைக் கண்டேன் என்றான் தலைவன். 

தலைவி: நீ விரும்பும் பரத்தையர் உன்னிடம் கோபம் கொண்டதையும், நீ அவர்களை வணங்கி அக்கோபத்தைத் தணித்ததையும் பலவழிகளில் நீ கனவின்மேல் வைத்துக் கூறுவது... நான் கோபித்து ஒன்றும் செய்யமாட்டேன் என்பதற்காகவா?

தலைவன்: நான் பொய் சொல்ல மாட்டேன்!  அரும்புகள் மலர்கின்ற மரக்கிளைகள்தோறும் குயில்கள் அமர்ந்து, "பல சிறப்புகளோடு இணைந்தவர்களே! பிரியாதீர்! நீண்ட காலம் பிரிந்திருப்போர் விரைந்து இணைக' என்பதுபோல, இடைவிடாது கூவும் இளவேனிற் காலம் வருகிறது. அப்போது, மன்மதன் விழா நடைபெற இருக்கிறது. அதை வரவேற்று, மதுரையில் மகளிரும் ஆடவரும் வண்டுகள் ஒலிக்கும் சோலைகளில் கூடியிருந்து விளையாட, மிக்க விருப்பத்தோடு அணிகளை அணிந்து கொள்வர். நான் கண்ட கனவு அந்தவகையில் உண்மையாவதை நீ பார்க்கத்தான் போகிறாய் தலைவி'!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com