மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!

தமிழ்ப் பேரகராதியின் அங்கீகாரமே பெற்றுவிட்டாற்போல, "சிற்றிலக்கியம்' என்னும் சொற்றொடர் தமிழ்மொழியில் புகுந்துவிட்டது. க்ரியாவின் "தற்காலத் தமிழகராதி'யிலும்,
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!


தமிழ்ப் பேரகராதியின் அங்கீகாரமே பெற்றுவிட்டாற்போல, "சிற்றிலக்கியம்' என்னும் சொற்றொடர் தமிழ்மொழியில் புகுந்துவிட்டது. க்ரியாவின் "தற்காலத் தமிழகராதி'யிலும், "சிற்றிலக்கியம்' என்னும் சொற்றொடர் "பிரபந்தம்' என்னும் பொருளில் உள்ளது. ஆயினும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான "தமிழ்ப் பேரகராதி'யின் இலக்கிய முத்திரை "சிற்றிலக்கியம்' என்னும் சொற்றொடருக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில், "சிற்றிலக்கியம்' என்னும் சொற்றொடர், "தமிழ்ப் பேரகராதி'யில் இடம்பெறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நூலுக்கான செய்யுட்களின் எண்ணிக்கைக் குறைவையே தற்போது "சிற்றிலக்கியம்' என்கின்றனர். செய்யுட்களின் எண்ணிக்கைக் குறைவே "சிற்றிலக்கியம்' என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்றால், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் வெளியீடாக 
பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளையால் 1974-இல் பதிப்பிக்கப் பெற்றதும், 170 செய்யுட்களே கொண்டதுமான "நாககுமார காவியம்' தமிழில் தோன்றிய சிறுகாப்பியங்களில் ஒன்றாயினும், காப்பிய வகையைச் சார்ந்ததால், பேரிலக்கியமாகவே கருதப்படுகிறது. அந்நூல் சிற்றிலக்கிய வகையில் சேர்க்கப்படவில்லை என்பதும் கருதத்தக்கது.

நாககுமார காவியத்தினும் - 230 

செய்யுட்கள் மிகுதியான அதாவது, 400 செய்யுட்கள் கொண்ட கோவைப் பிரபந்தத்தை "சிற்றிலக்கியம்' என்பதும் பொருந்தவில்லை. அந்தாதி, உலா, தூது  முதலியவை இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்றனவே அன்றி, அந்தாதி சிற்றிலக்கியம் என்று சொல்லப்படவில்லை. 

மற்றும் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடும், பேராசிரியர் மு.அருணாசலம் பிள்ளையால் 1976-இல் பதிப்பிக்கப்பெற்றதும், பிரபந்த இலக்கணங்களைக் கூறுகின்றதுமான "பிரபந்த மரபியல்' என்னும் இலக்கண நூல் புராணமும் பிரபந்தமே என்று வரையறை செய்கின்றது. எனவே, ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட செய்யுட்களைக் கொண்டதும், நெல்லையப்பப் பிள்ளை இயற்றியதுமான திருநெல்வேலி புராணமும், பொன்விளைந்த களத்தூர் ஆதியப்ப நாவலர் இயற்றிய பழைய மாயூர புராணமும் பிரபந்த இலக்கியமேயன்றி, சிற்றிலக்கியம் அன்று என்பது திண்ணம்.

"பிரபந்தம்' என்னும் வடமொழிச் சொற்றொடர் "நன்கு கட்டப்பெற்றது; நன்றாக யாக்கப்பெற்றது' என்னும் பொருள் தருகின்றதேயன்றி, ஒரு நூலுக்கான செய்யுட்களின் எண்ணிக்கைக் குறைவை குறிப்பிடவேயில்லை. சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவிலும், "தொண்ணூற்றாறு கோலப்பிரபந்தங்கள்' என்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. 

இரண்டு தர்மங்களுக்கு இடையே எதைக் கடைப்பிடிப்பது? என்று ஏற்படும் சங்கடமாகிய திகைப்புக்குத்தான் "தர்மசங்கடம்' என்று பெயர். இந்தத் தர்ம சங்கடத்தைத்தான் பிரபல நாவலாசிரியரான கோ.வி.மணிசேகரன், "அறத்துன்பம்' என்று மொழிபெயர்த்திருக்கிறார். "தர்மசங்கடம்' என்னும் வடமொழிச் சொற்றொடரில் வரும் "சங்கடம்' என்னும் சொல்லுக்கு,  "துன்பம்' என்று அவர் தவறாகப் பொருள் கொண்டுள்ளார். எனவே, மொழிபெயர்ப்பின் பொருள்வரம்பு கடந்த "அறத்துன்பம்' தமிழ்மொழிபெயர்ப்பும் அன்று; தமிழும் அன்று. 

"தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் "தர்மசங்கடம்' என்னும் தலைப்பிலேயே ஒரு கட்டுரை எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திருநாவுக்கரசரின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருப்பழனம் வடமொழியில் "பிரயாணபுரி' என்று மிகவும் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பழனம்' என்னும் தமிழ்ச் சொல்லுக்கு "வயல்' என்றே பொருள். ஆயினும் பழனத்தைப் பயணமாகக் கொண்டு அதனைப் "பிரயாணபுரியாக்கி' விட்டனர்!

"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்' என்று திருஞானசம்பந்தர் அண்ணாமலையானைப் பாடியிருப்பது, "அபீதகுசாம்பா சமேத அருணாசலேசுவர சுவாமி' என்று மிகவும் செம்மையாக வடமொழியில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது. நாகைப்பட்டினத்துக்கு அருகிலுள்ள திருச்சிக்கலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, 
"வெண்ணெய்ப்பிரான்' என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். இந்த வெண்ணெய்ப்பிரானை வடமொழியில் 
"நவநீதேசுவரசுவாமி' என்று மிகவும் பொருத்தமாகச் சொல்கின்றனர். 
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் ஆத்மநாத சுவாமியை மணிவாசகர், 
"என் உயிர்த் தலைவா' என்று மிகவும் தெளிவாக மொழிபெயர்த்திருக்கின்றார். "ஓலமறைகள்' என்னும் திருவானைக்கா திருப்புகழில், அருணகிரிநாதர் "அகிலாண்ட நாயகி'யை, 
"ஞால முதல்வி' என்று செம்மையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
புராணத் திருமலைநாதர் (திருமலை நயினார் சந்திரசேகர புலவர்)  தாம் இயற்றிய "இறைவாசநல்லூர்' புராணத்தின் 79-ஆவது செய்யுளில், அசரீரி வாக்கை,
"ஆக்கையில்லா மாற்றம்' என்று மிகத் திறம்பட மொழிபெயர்த்திருக்கின்றார். இதில் வரும் "மாற்றம்' என்பது மொழியாகும். எனவே, "ஆக்கையில்லா மாற்றம்' என்னும் அருஞ்சொற்றொடர் சரீரமாகிய ஆக்கை (யாக்கை) இல்லா மொழியான "அசரீரி' வாக்காகிய "வானொலி'யைக் குறிக்கின்றது. 

இறைவாசநல்லூர் புராணத்தின் உரையாசிரியரான திருமுதுகுன்றம் வீரசைவ சுப்பராய தேசிகரும் "ஆக்கையில்லா மாற்றம்' என்னும் அருஞ்சொற்றொடருக்கு "அசரீரி' என்றே பொருள் தருகின்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com