தமிழ்மணி

முல்லையும் பூத்தியோ? செர்ரியும் சிரித்ததோ?

20th Oct 2019 05:18 AM | -முனைவர் இராம.குருநாதன்

ADVERTISEMENT

கவிஞர்கள் தம் உள்ளத்துணர்ச்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவிப்பர்.  உணர்ச்சியின் மொழி பாடலாகப்  பிறப்பெடுப்பதற்குக் கவிஞரின் கூரிய பார்வை ஒரு காரணம். 

தாம் வாழ்ந்த காலம்,  தாம் பழகிய இடம், தம் காலத்தில் வாழ்ந்தவர்கள், நிகழ்கால உணர்வு, எதிர்கால எண்ணம் இவைபோல்வனவற்றைக் கவிஞர்கள் தம் கவிதைகளில் பதிவு செய்வது அவர்தம் இயல்பு. இன்ப, துன்ப நிகழ்வுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்து கருத்தை வெளிப்படுத்துவது என்பது கவிஞர்களுக்குக் கைவந்த கலை. 

கவிஞர்கள், துன்ப உணர்ச்சியைப் பாடும்போது இரக்கமும் வருத்தமும் தோன்றப் பாடுவர். இறந்தவர்களைப் பாடும் கையறுநிலைப் பாடல்களில் இத்தகைய உணர்ச்சிகளைக் காணலாம்.

 இறந்த மன்னர்களைப் பாடும்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் தம் துயரத்தைப் பகிர்ந்து,  அதனைப் பாடலில் வடித்துக்காட்டுவர். தாம் அடைந்த மிகுதியான வருத்தத்தைப் பிற பொருள் மீது ஏற்றித் தம் துயரத்தை வெளிப்படுத்துவர்.

ADVERTISEMENT

சங்கப் புலவரான குடவாயில் கீரத்தனார், சாத்தனார் என்ற வள்ளல் இறந்ததைப் பாடுகிறார். அதனால், தான் அடைந்த துன்ப உணர்ச்சியை நேரடியாகக் கூறாது வேறொன்றின் மீது ஏற்றிப் பாடுகிறார். இளையோர், பாணர், பாடினி ஆகியோரும் வள்ளல் சாத்தன் இறந்ததை அறிந்து பெரிதும் வருத்தமடைந்தனர். இவ்வாறு எல்லோரும் கவலை கொள்ளவும், சூடுதற்குரிய முல்லைப்பூ மட்டும் மலர்ந்திருப்பதைக் கண்டு, 

"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்  
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் 
பாணன் சூடான் பாடினி அணியாள் 
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த 
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை 
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?' 
(புறநா.242)

எனப்பாடி, தம் துயரத்தை மிகுவிக்கிறார். இது புறநானூற்றில் இடம்பெறும் கையறு நிலைப் பாடலாகும். 

இந்தப் பாடலை எதிரொலிப்பது போல ஒரு ஜப்பானியப் பாடல் ஒன்று உண்டு.  அந்தக் கையறுநிலைப் பாடலில் மன்னனுக்குரிய தலைநகர் அழிந்ததைக் கண்டு மனம் வருந்திப் பாடுகிறார் தைரோ தடா நொரி (1149)  என்ற  ஜப்பானிய கவிஞர். 

"கடற்கரையின் பழைய தலைநகர் ஷிகா
அந்தோ! அழிந்து பாழ்பட்டதே!
ஆனால், செர்ரிப் பூக்கள் மட்டும்
இன்னும் தன்அழகைக் காட்டிய வாறே!'

"ஷிகா' என்னும் நதிக்கரையில் இருந்த பண்டைய தலைநகர் அழிந்துவிட்டது. இந்த அழிவு அக்கவிஞரை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இதனைக் கண்டு அவர் மனம் வாடிட, "இந்த நேரத்தில் செர்ரி மலர்கள் மட்டும் தலைநகர் அழிந்தது கண்டு வருந்தாமல் பூத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறதே...' என்று குறிப்பாக அம்மலர் மீது தன் கருத்தை ஏற்றி ஒருவகையில்  ஆறுதல் அடைகிறார்.  செர்ரிப் பூக்கள், அந்தச் சூழலில் பூத்துப் பொலிவுடன் மலர வேண்டுமா? என்று தன் கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்.  

"முல்லையும் பூத்தியோ?' என்ற அடிகளில் துயரத்தின் ஆழம் வெளிப்படுவதுபோல, "செர்ரியும் அழகைக்காட்டி இன்னும் சிரித்தவாறே இருக்கிறது' (Still bloom in beauty exquisite) என்பதிலும் துயரம் மிகுந்துள்ளது. இவ்விரு கவிஞர்களின் மனநிலைகள் ஒப்பீட்டால் சிறந்து நிற்பன. உளவியல் நோக்கில் தாம் அடைந்த உணர்ச்சியை வேறொன்றின் மீது ஏற்றிக் கூறுவதை இடப்பெயர்ச்சி (Displacement) என்று குறிப்பிடுவர். இதற்கு இலக்கியச் சான்றாக இவ்விரு பாடல்களும் அமைந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT