தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன்

20th Oct 2019 05:29 AM

ADVERTISEMENT

 

முன்னிலை கண்ட முனிவன், மண்ணிலை கண்ட மகான், தன்னிலை கண்ட தவசி, மெய்நிலை கண்ட மேதை, சமரச சன்மார்க்கச் சங்கத் தலைவர்,  கருணையானந்த குருகுலத் தொண்டர், புலவர் நாச்சிகுளத்தார் என்பவர் யார் என்பது குறித்து சில ஆண்டுகளாகவே நான் யோசித்து வியந்திருக்கிறேன்.

நாகை செல்லும்போதும், திருவாரூர் செல்லும்போதும், அகவை 86 கடந்தும் தமிழ்ப் பணியாற்றும் புலவர் நாச்சிகுளத்தார் என்று அறியப்படும் எம். முகம்மது யூசுப்பை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற எனது எண்ணம் இன்னும் ஈடேறாமல் தொடர்கிறது.

சுவாமி சுத்தானந்த பாரதியாரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் புலவர் நாச்சிகுளத்தார். அவரது ஆசிரமத்தில் தங்கி, சுத்தானந்த பாரதியாரின் அறிவுரைப்படி "பன்முக சமயம்' என்கிற அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணியாற்றி வருபவர்.

ADVERTISEMENT

ஒரு  நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்  முகம்மது இபுறாகீம் என்கிற இயற்பெயர் கொண்ட  குரு கருணையானந்த ஞானபூபதி என்கிற சமய சமரசத் துறவி. கருணையானந்த ஞானபூபதியின் சீடராக இருந்தவர்களில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தந்தையும் ஒருவர். அவரது நினைவாகத்தான் தனது மகனுக்குக் கருணாநிதி என்று பெயர் சூட்டினார். கருணையானந்த பூபதியின் மகன் கருணை எம். ஜமால்தான், முதன்முதலில் கருணாநிதிக்கு "முரசொலியை' அச்சிட்டுக்  கொடுத்து உதவியவர். 

இஸ்லாமிலும் இந்து மதத்திலும் ஆழங்காற்பட்ட புரிதலும், மத நல்லிணக்கத்தைத் தனது வாழ்க்கையின் நோக்கமாகவும் கொண்டு வாழ்ந்தவர் கருணையானந்த பூபதி. அவரால் இயற்றப்பட்டதுதான் "வேதாந்த பாஸ்கரன்' என்கிற நூல்.

""மானிடர்களின் மனதிலுள்ள அந்தக்காரப் படலத்தைப் பிளந்து, அவர்கள் புத்தியைப் பிரகாசிக்கச் செய்யும் அருமையான வசனங்கள் நிறைந்திருப்பதால்தான் இந்நூலுக்கு "ஷம்சுல் ஹகாயிக்' ஆகிய "வேதாந்த பாஸ்கரன்' பெயர் மிகவும் பொருத்தமானது. கன்சுல்மக்பியா என்னும் புதையலாகிய கலிமாப் பொருளை அறிவதற்கு இந்நூலானது ஓர் சிறந்த அஞ்சனமும், ஈமான் இஸ்லாம் உடையவர்கட்கு திருமந்திர வசனமுமாகும்'' என்று தனது அணிந்துரையில் எழுதுகிறார் அல்காலி செய்யிது ஷாஹ் முஹம்மது இனாயத்துல்லா காதிறி.

1918-ஆம் ஆண்டில் "வேதாந்த பாஸ்கரன்' வெளிவந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கடவுளியலைச் சொல்லும்  "வேதாந்த பாஸ்கரன்', தாயுமானவர், வள்ளலார், திருக்குர்ஆன் என்று பல்வேறு மேற்கோள்களுடன் வணக்கத்தின் ஒழுங்குகள், தொழுகையின் சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது. அதைத் தொடர்ந்து ஆசிரியரியல், சீடரியல் போன்றவற்றைத் தெளிவுபடுத்துகிறது.

அடிப்படையில் "வேதாந்த பாஸ்கரன்'  ஒரு யோக சாஸ்திர நூல். சரியை, கிரியை, யோகம், ஞானம் உள்ளிட்ட அனைத்து குறித்தும் குரு கருணையானந்த ஞானி தெளிவுபடுத்தி இருக்கிறார்.  

மூன்று லட்சத்துக்கும் அதிகமாகக் கவிதைகள் புனைந்தவரும்,  அறுபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருப்பவருமான புலவர் நாச்சிகுளத்தாரால் "வேதாந்த பாஸ்கரன்' 2012-இல் 
மறுபதிப்பு செய்யப்பட்டு, இப்போது அது மீண்டுமொரு பதிப்பையும் கண்டுவிட்டது.

நரஹரி நாராயண் பாவே என்கிற வினோபா பாவேயும் அவரது பூதான இயக்கமும் இந்தியாவின் கிராமப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. முனைவர் நா.பாஸ்கரன் வினோபா பாவேயைத் தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அமைந்த அவரது முனைவர் பட்ட ஆய்வைத் தமிழாக்கம் செய்து, "ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும்' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். வினோபா பாவே என்கிற மிகப்பெரிய ஆளுமை குறித்த பிரமிப்பைப் பலமடங்கு அதிகரிக்கிறது நா.பாஸ்கரனின் பதிவுகள்.

""உலகின் முழுமுதல் அரசியல் முனிவர் அண்ணல் காந்தியடிகள் எனது சமுதாயப் பார்வையிலும், ஆன்மிகத் தேடலிலும் புதிய பரிமாணங்களைக் காட்டினார்'' என்பார் வினோபா.  காந்தியடிகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பாரத மண்ணில் தழைத்து வளர்ந்திருந்த உயரிய மனித வாழ்வியல் கோட்பாடுகளைக் காலத்துக்கேற்ப மெருகேற்றி, ஆசிரமத்தில் செயல்படுத்திப் பார்த்தார். சுதந்திரப் போராட்டத்தின் இடர்ப்பாடுகளுக்கிடையே பல்வேறு நிர்மாணத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு காந்தியடிகளின் ஆன்மிக வாரிசாக ஏற்கப்பட்ட ஆச்சார்ய வினோபாஜி மகாத்மாவின் அனைத்து நிர்மாணத் திட்டங்களும் ஒரே கூரையின்கீழ் செயல்பட "சர்வோதயம்' என்கிற திட்டத்தை வகுத்தார்.

""எல்லா உற்பத்திகளுக்கும் நிலமே அடிப்படை. எனவே, கிராமத்தில் நிலம் யாவும் அந்தக் கிராம மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். "நில உரிமை', "நில உடைமை' கிராமத்தின் பொதுச் சொத்தாக வேண்டும்'' என்பதுதான் வினோபாவின் "பூதானம்' இயக்கம், என்கிற புரட்சிகரமான திட்டத்தின் எதிர்பார்ப்பு. துவேஷத்தை விதைக்காமல், வெறுப்பை வளர்க்காமல் கிராம  சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ அணுகுமுறை அது.

""கிராமப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் அரசியல் நிர்வாகமோ, வேறு எந்த  அமைப்போ கிராமத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.  ஆட்சி அமைப்பின் கட்டுமானம் கிராமத்தையே ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும்'' என்று  உணர்ந்த ஆச்சார்ய வினோபா பாவேயின் சிந்தனையில் உதித்ததுதான் "பஞ்சாயத்து ஆட்சி முறை'.
தனது முனைவர் பட்ட ஆய்வைத் தமிழில் புத்தகமாக்கி, வினோபாஜி குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வழிகோலியதற்கு, முனைவர் நா.பாஸ்கரனுக்கு நாம் நன்றிகூறக் 
கடமைப்பட்டிருக்கிறோம்.

குமரி எஸ். 
நீலகண்டன் எழுதிய கவிதைத் தொகுப்பு 
"ஒரு சூரியனும் 
ஐம்பத்தோரு நிலாக்களும்'.  அதிலிருந்து  ஒரு கவிதை. 
    நிலா சொன்னது..
    அப்போதெல்லாம்
    இந்த இடத்தில்
    ஒரு பெரிய குளம்
    இருந்தது
    மீன்கள் இருந்தன
    மரங்கள் இருந்தன
    கொக்கும் நாரையும்
    குதூகலமாய் இருந்தன
    தினமும் குளித்துக்
    கொண்டிருந்தேன்
    இப்போது 
    எப்போதாவது
    பெய்யும்
    தூறலில் மட்டும்
    இந்த மொட்டை மாடியில்
    தரை பூசிய நீரில்
    என் உடலைத் 
    தேய்த்துக் கொள்கிறேன்...

ADVERTISEMENT
ADVERTISEMENT