தமிழ்மணி

பஃறொடை வெண்பாப் புதிர்!

17th Nov 2019 06:13 AM | -வயலாமூர் வீ.கிருஷ்ணன்

ADVERTISEMENT

கவிஞன் என்பவன் கற்பனை வளமும் கருத்துச் செறிவும் கொண்ட கவிதைகளை எழுதுபவன். புலவன் என்பவன் கற்பனை வளம், கருத்துச் செறிவு மட்டுமன்றி, கட்டுப்பாட்டுடனும் கவிதைகளை எழுதுபவன். இலக்கணத் தடம் பிறழாமல்  எழுதுபவன்.   அவற்றுள் ஒன்று புதிர்க் கவிதைகள். அக்கவிதைகளைப் படித்து இன்புற்றதன் விளைவாக இயற்றப்பட்டதுதான் இந்தப் "பஃறொடைப் புதிர் வெண்பா'!  

"ஆதியூரொன் றாறெழுத்து அத்துடன் சொல்லெட்டாம்
ஆதியிரண் டோடுமூன் றின்மெய்யால் புள்ளாகும்
நீதியினால் மூன்றினுயிர் நான்கொடு மேடமாகும்
ஓதிடின் அவ்வுயிரோ டீறுமூன்று ஊராகும்
தீதிலா தோர்பகுப்பு ஈறிரண்டும், அம்மூன்றின்
ஆதியி லாதிசேர்ந்து ஆம்மடு, ஆம்மது
ஆம்மறை ஆகமுச்சொல் லோடுமொத்தம் எட்டாகும்
ஆன்றோரே அவ்வூர்காண் பீரே!'

இவ்வெண்பாவின் விளக்கமானது:

1. ஆதியூரொன்று ஆறெழுத்து:  மிகப் பழைமையான ஓர் ஊரின் பெயர் ஆறெழுத்தாலானது.
2. அத்துடன் சொல் எட்டாம்: அந்த ஊரின் பெயருடன் அதில் அடங்கியுள்ள சொற்கள் மொத்தம் எட்டாகும்.
3. ஆதி இரண்டோடு மூன்றின் மெய்யால் புள்ளாம்: முதல் இரண்டு எழுத்துகளுடன் மூன்றாம் எழுத்தின் மெய்யெழுத்து சேர்ந்து ஒரு பறவையாகும்.
4. நீதியினால் மூன்றினுயிர் நான்கொடு மேடமாகும்: முறைப்படி அம்மூன்றாம் எழுத்தின் உயிர் எழுத்துடன் மேடமாகும்.
5. ஓதிடின் அவ்வுயிரோடு ஈறு மூன்றும் ஊராகும்: படித்துப் பார்த்தால் அவ்வுயி
ரெழுத்துடன் கடைசி மூன்றெழுத்துகள் சேர்ந்தால் ஓர் ஊராகும்.
6. ஈறிரண்டும் தீதிலாதோர் பகுப்பு: கடைசி இரண்டெழுத்துகள் குற்றமற்ற ஒரு பகுப்பைக் குறிக்கும்.
7. ஈறு மூன்றின் ஆதியிலாதி சேர்ந்து ஆம்மடு, ஆம்மது ஆம்மறை: கடைசி மூன்றெழுத்துகளான டு, து, றை 
ஆகிய மூன்றெழுத்துகளின் முன்னே முன் சொல்லான முழுச் சொல்லின் முதல் எழுத்தான "ம' சேர்ந்து முறையே மடு, மது, மறை ஆகிய சொற்கள் ஆகும்.
8. ஆகஇம்முச் சொல்லொடு மொத்தம் எட்டுச் சொற்களாம்: ஆக இந்த மூன்றுச் சொற்களுடன் முதல் முழுச் சொல்லும் சேர்ந்து மொத்தம் எட்டுச் சொற்களாம்.
9. சான்றோர்களே அவ்வூர் காண்பீரே: சான்றோர்களே! அந்த ஊர் எது என்று கண்டு சொல்லுங்கள்.

ADVERTISEMENT

இப்பாடலின் தெளிவுரை வருமாறு: 

1. மிகப் பழைமையான ஓர் ஊரின் பெயர் ஆறு எழுத்துகளால் ஆனது அது "மயிலாடுதுறை'.  
2. அந்த ஊரின் பெயரோடு அதில் அடங்கியுள்ள சொற்கள் மொத்தம்  எட்டாகும். மயிலாடுதுறையில்,  மயிலாடுதுறை, மயில், ஆடு, துறை, ஆடுதுறை,  மடு,  மது,  மறை என மொத்தம் எட்டுச் சொற்கள் அடங்கியுள்ளன.
3. மயிலாடுதுறை என்ற சொல்லில் முதல் இரண்டு எழுத்துகளான ம, யி  ஆகியவற்றுடன் மூன்றாம் எழுத்து "லா' என்ற உயிர்மெய் எழுத்தில் உள்ள "ல்' 
என்ற மெய்யெழுத்து சேர்ந்தால் "மயில்' 
என்ற பறவையாகும்.
4. முறைப்படி  அந்த மூன்றாம்
 உயிர்மெய்யான "லா' விலுள்ள உயிரெழுத்து ஆகிய "ஆ' எழுத்துடன் நான்காம் எழுத்தாகிய "டு' சேர்ந்தால் மேடம் 
அதாவது ஆடு ஆகும்.
5. அந்த உயிர் எழுத்தான "ஆ' வுடன் கடைசி மூன்று  எழுத்துகளான "டு, து, றை' ஆகியவை சேர்ந்து ஆடுதுறை என்ற ஊராகும்.
6. கடைசி எழுத்துகளான து, றை 
சேர்ந்து ஒரு பகுப்பாகும்.
(அதாவது கல்வித்துறை, நிதித்துறை சுகாதாரத்துறை... போன்று)
7. கடைசி மூன்று எழுத்துகளான  டு, து, றை ஆகிய எழுத்துகளின் முன்னே முதல் சொல்லான "ம' 
வந்து முறையே மடு, மது, மறை என்ற சொற்களாகும் 
8. ஆக, இம்மூன்று சொற்களோடு மொத்தம் எட்டுச் சொற்கள் இதில் அடங்கும் என்பது கருத்து.

ADVERTISEMENT
ADVERTISEMENT