தமிழ்மணி

அருந்தமிழ் மருத்துவ அறிவுரைப்

17th Nov 2019 06:15 AM

ADVERTISEMENT

மக்களின் நோயை இல்லாமல் செய்வதில் நாட்டுப்புற மருத்துவத்திற்கு முக்கியப் பங்குண்டு. அலோபதி, ஹோமியோபதி, ஆயுர் வேதம், யுனானி, சித்த மருத்துவம் முதலிய பல மருத்துவ முறைகள் சொல்லப்பட்டாலும், நாட்டு மருத்துவத்தின் மீதான நம்பிக்கை இன்னும் மக்கள் மத்தியில் குறையவில்லை.

நோய் நீங்க பல நாள்கள் ஆனாலும் பக்க விளைவு இல்லாதது. செலவு குறைந்தது; தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பூரணகுணம் கொடுப்பது. நாட்டு வைத்தியம், கை மருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம் என வெவ்வேறு வகைகளில் நாட்டு மருத்துவம் மக்கள் மத்தியில் வலம்வந்த வண்ணம் உள்ளது.

விநோதமான காய்ச்சல்கள்வந்தபொழுது நிலவேம்பு கஷாயம் குடித்தால் மீட்சி நிச்சயம் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்த பிறகு மக்களின் கவனம் நாட்டு மருத்துவத்தின் பக்கம் செல்லத் தொடங்கியிருக்கிறது. தீராத மூட்டு வலியைத் தீர்க்கும் சக்தி கொண்டதாக வெது வெதுப்பான நல்லெண்ணெயில் எலுமிச்சையை துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் வலி இருந்த இடம் இல்லாமல் காணாமல் போகிறது. தூங்கச் செல்லுமுன் பசும்பாலில் நான்கு பூண்டுப் பற்கள், ஒரு துண்டு இஞ்சியைப் பொடியாக நறுக்கிப் போட்டு நான்கு மிளகு, எட்டு துளசி இலையைப் போட்டு சுண்டக் காய்ச்சி மென்று தின்று பூண்டுப் பாலைக் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும். அடைப்பு நீங்கும், மூட்டுவலி அகலும், வாயுக் கோளாறு நீங்கும் மேலும், சர்க்கரையின் அளவு குறையும் என்பது மட்டுமல்ல, நிம்மதியான தூக்கத்தையும் தரும். ஏலக்காயின் ஒன்று அல்லது இரண்டு விதைகளை மென்றுதின்றால் அனைத்துவித வறட்டு இருமலும் நீங்கும்.

"அருந்தமிழ் மருத்துவம் 500' என்ற பாடல் மூலம் சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் (பிரதாபசிம்மன் என்பவரால் இயற்றப்பட்டு, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 2018-இல் பதிப்பிக்கப்பட்டது) தரும்
"மருத்துவ அறிவுரைப் பா' இதுதான்:

ADVERTISEMENT

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலி நெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்புக்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்கு சீரகமிஞ்சி
கல்லீரலுக்குக் கரிசாலை
காமாலைக்குக் கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியா வட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகு வேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர் முள்ளி
முகத்திற்கு சந்தன நெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணெய்
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ் தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப் பூ
சிறுநீர்க் கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்கு மிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக் குடிநீர்
வேர்க்குருவிற்கு பனைநுங்கு நீர்
வெட்டைக்கு சிறு செருப்படையே
தீப்புண்ணா குங்கிலிய வெண்ணெய்
சீழ் காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலா வேலன்
நஞ்செதிர்க்க அவரி எட்டி
குருதி கழிச்சலுக்கு துத்தி தேற்றான்
குருதிக் கக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்தி நாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சை ஏலம்
கழிச்சலுக்கு தயிர் சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சி விதை
புண்படைக்கு புங்கன் சீமையகத்தி
புழுகுடற்கு வாய் விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணி கிளிஞ்சல்
கரும்படை வெட்பாலை சிரட்டை
கால் சொறிக்கு வெங்கார பனிநீர்
கானா கடிக்கு குப்பைமேனி உப்பே
உடல் பெருக்க உளுந்து எள்ளு
உளம் மயக்க கஞ்சா கள்ளு
உடல் இளைக்க தேன் கொள்ளு
உடல் மறக்க இலங்க நெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம் சிறு பிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!

ADVERTISEMENT
ADVERTISEMENT