ஆளுவோரைத் தேர்ந்தெடுக்கும் ஆட்டம்

"பல்லாங்குழி' என்ற ஆட்டம் தமிழ்நாட்டுச் சிற்றூர்ப் புறங்களில் சிறுவர் - சிறுமியரில் இருந்து பெண்கள் வரை ஆடப்பெறுகிறது. தெளிவான இலக்கியச்
ஆளுவோரைத் தேர்ந்தெடுக்கும் ஆட்டம்


"பல்லாங்குழி' என்ற ஆட்டம் தமிழ்நாட்டுச் சிற்றூர்ப் புறங்களில் சிறுவர் - சிறுமியரில் இருந்து பெண்கள் வரை ஆடப்பெறுகிறது. தெளிவான இலக்கியச் சான்றுகள் இல்லையாயினும் சில இலக்கண -இலக்கிய வரிகளால் பல்லாங்
குழிச் சான்றுகளை உய்த்துணரலாம். 

வல், வல்லுப்பலை என்பன விளையாட்டுக் கருவிகள். இவை இலக்கியங்களில் 
பயிலும் இடங்கள்:
"வல்'லென் கிளவி தொழிற் பெயரியற்றே 
(தொல்-373)
நாயும் பலகையும் வரூஉம் காலை 
(தொல் -374)
நரைமூதாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல் ... ....     (புறம்-32)
நரை மூதாளர்  ....
கவை மனத்திருத்தும் வல்லு  (அகம்- 377)
வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
(கலி- 94)
முதலிய இலக்கண வரிகள் பல்லாங்குழி தொடர்பானவை என்று ஊகிக்கலாம். பல்லாங்குழி பலகையே எடுத்து நிறுத்தியதைப் போன்ற உருவத்தைக் குறளனுக்குக் கலித்தொகை உவமைப்படுத்துகிறது. இவ்வாட்டத்தைப் பற்றிய பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள் தமிழில் வழங்குகின்றன. கன்னடத்தில் "சென்னமனா' என்ற பெயர் பல்லாங்குழிக்கு வழக்கத்தில் உள்ளது.

ஆப்பிரிக்காவில் பல்லாங்குழி:
ஆப்பிரிக்க நாடுகள் எல்லாவற்றிலும் பல்லாங்குழி ஆடப்பட்டு வருவது மிக வியப்பானதே! ஐவரி கோஸ்ட் நாட்டில் வாழும் அல்லாதியர்கள் பல்லாங்குழி ஆட்டத்தைக் கொண்டே ஊர்த்தலைவரை நியமனம் செய்தனராம்.  காங்கோ நாட்டிலுள்ள புசாங்கோ மக்களின் அரசனின் பெயர் சாம்பா (படம்-1) 1600-1620 வரை காங்கோவை ஆண்டவன். அவன் பல புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவன். அவன் தன் நாட்டில் அமைதி காக்க விழைத்தவன். அவன் போரையும் படையையும் நீக்கினான். பதிலுக்குப் பல்லாங்குழி ஆட்டத்தை அறிமுகப்படுத்தினான். ஆட்டத்தில் வெற்றி பெற்றவர், நாட்டை ஆளத் தகுதி பெற்றவர் ஆவர். 

ஆப்பிரிக்க நைஜீரியத் தலைநகரான இலாகோசில் பெரும் அரும்பொருள் காட்சியகம் (மியூசியம்) உள்ளது. அங்கே பல்லாங்குழிப் பலகைகளில் பல்வேறு வகைகளைக் காட்சியில் வைத்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கச் செனகால் நாட்டில் (படம் -2) ஓலப்,  செரோ, புலார், மாந்திங்கே, சோலார் மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் இவ்வாட்டத்தை ஆடுகின்றனர். ஓலப் மக்கள் "ஊரே' என்ற சொல்லை இவ்வாட்டத்திற்குப் பெயராக வைத்துள்ளனர். 
நம் தமிழிலக்கியத்தில் "ஓரை' என்ற சொல் விளையாட்டைக் குறிக்கும். செனகாலில் வாழும் "பேள்' இனத்தார் பல்லாங்குழிக் காயைக் "காயெ' என்று அழைப்பர். தமிழர்களும் "காய்' என்று விளையாட்டு விதையை அழைப்பர். ஆப்பிரிக்கத் தெருக்கடைகளில் இரண்டு அரசர்கள் அல்லது தலைவர்கள் அமர்ந்திருப்பது போலவும், நடுவில் பல்லாங்குழிச் சிற்பம் அமைந்திருப்பது போலவும் மரச் சிற்பங்களும் உலோகச் சிற்பங்களும் விற்கப் பெறுகின்றன. பல்லாங்குழியை யானைகள் அல்லது சிங்கங்கள் தாங்கி நிற்பது போன்ற சிற்பங்கள், வெள்ளி உலோகப் பல்லாங்குழிகள் காண வியப்பாக உள்ளன. தமிழ் நாட்டில் பித்தளையினாலான பல்லாங்குழி, மீன் வடிவப் பல்லாங்குழி இருப்பதை அறியலாம். பாண்டியாட்டம் என்றும் இதற்குப் பெயருண்டு.
அரேபியாவிலுள்ள "சிரியர்' இந்த விளையாட்டை மங்கலா அல்லது மாகலா என்று அழைப்பர். மேற்கு ஆசியாவைப் போல தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, போர்னியோ, வியட்நாம், சுமத்ரா முதலிய இடங்களில் இவ்வாட்டம் வழக்கத்தில் உள்ளது. தென் அமெரிக்காவிலும், வட அமெரிக்காவிலும் அவற்றையொட்டிய தீவுகளிலும் ஆடப்படுகிறது.

இவ்விடங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொண்டு செல்லப்பட்டபோது பல்லாங்குழி ஆட்டமும் அவர்களோடு சென்று பரவியிருக்கலாம். இராமனும் சீதையும் பல்லாங்குழி ஆடியதாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் நம்புகின்றனர். தமிழ் நாட்டிலும் சீதைப்பாண்டி என்ற ஆட்ட வகை உண்டு.

ஆப்பிரிக்காவிலிருந்து இவ்வாட்டம் பரவியதா?
* பழங்கால எகிப்திய சுவரோவியங்களில் இவ்வாட்டம் பற்றிய சான்று காணப்படுகிறது. ஆனால், பல்லாங்குழி ஆட்டம் போன்றதொரு ஆட்டமாகத் தெளிவாக அடையாளப்படுத்த முடியவில்லை. 

* 15-ஆம் நூற்றாண்டில் பல்லாங்குழி பற்றிய திட்டவட்டமான எழுத்து  மூலங்கள் ஆப்பிரிக்காவில் உண்டு. சான்று: அரசன் சாம்பா.

* அரசன் வெற்றி - தோல்விகளை உறுதி செய்யவும், தலைவரைத் தேர்ந்
தெடுக்கவும் இவ்வாட்டத்தை ஆப்பிரிக்காவில் கைக்கொண்டான்.

* ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றின் தேசிய விளையாட்டு பல்லாங்குழி ஆட்டம் என்பர்.

* ஆப்பிரிக்காவில் பல்லாங்குழிச் சிற்பங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. எனவே, ஆப்பிரிக்காவே இதன் தொன்மைப் பிறப்பிடமாக இருக்குமோ என்று  கருதத் தோன்றுகிறது.

-தாயம்மாள் அறவாணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com