22 செப்டம்பர் 2019

நட்சத்திர நாளைக் கொண்டாடுவதுதான் நமது மரபு!

By -சாமி. தியாகராசன்| DIN | Published: 19th May 2019 03:27 AM


கழிந்தது, கழிகின்றது, கழிவது என்னும் விவகாரத்திற்குக் காரணமாயிருப்பது காலம் எனப்படுகிறது. இந்தக் காலத்தை நாழிகை, மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு எனப் பல கூறுகளாகக் கணக்கிடுவதற்குச் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இயக்கங்களை அளவுகோலாகக் கொண்டு உலக வாழ்வை மேற்கொள்கிறோம். இம்மூன்றுள்ளும் சூரியனே அடிப்படையானதும், முதன்மையானதாகவும் இருக்கின்றது.

பலநூறு ஆண்டுகட்கு முன்பே விண்ணில் ஏற்படும் அற்புத மாற்றங்களை மண்ணிலிருந்தே வெறும் கண்களால் கண்டு நாம்தான் சூரியச் செலவை (செலவு -வீதி, வழி) நோக்கி காலை, மாலை, மதியம், மாலை, இரவு எனக் கணக்கிட்டிருக்கிறோம். 

இவ்வாறு கணக்கிடும் ஆற்றலை நம் பண்டைத் தமிழர் பெற்றிருந்தனர் என்பதை,  "செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்' (புறநா: 30: 1-6.) என்கிற புறநானூற்றுப் பாடல் கொண்டு அறியலாம்.

சூரியன் முதலான கிரகங்களை கோள்மீன் என்றும், நட்சத்திரங்களை நாள்மீன் என்றும் சொல்வது பண்டைத் தமிழ் மரபு. சூரியன் செல்லும் வீதியில் 12 ராசிகள் (வீடுகள்) வகுக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றுள் மேட ராசியே முதலில் உள்ளது என்றும் "நெடுநல்வாடை' சொல்கிறது. 

சூரிய வீதியில் நிற்கும் பிற கோள்களை (வியாழன், வெள்ளி போன்றவை) அளந்தறிய 27 நிலைகளைக் குறித்துள்ளனர். இந்த நிலைகளே நட்சத்திரங்கள் (நாண்மீன்கள்) எனப்படும்.

ஒரு ராசிக்கு இரண்டே கால் (2 1/4) நட்சத்திரம் என்ற வகையில் 27- நட்சத்திரங்களை 12 ராசியில் அடக்குகின்றனர். ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்கள்  (பாகங்கள்) கொண்டவை எனக் கணக்கிட்டுள்ளனர்.கோள்மீன், நாள்மீன் என நம் முன்னோர் காலத்தைக் கணக்கிட்டு, நாண்மீனாகிய நட்சத்திரக் கணக்கையே தங்கள் பிறப்புக்கும், இறப்புக்குமாகிய காலமாகக் கைக்கொண்டுள்ளனர். முதலில் பிறப்புக்கான சான்றினைப் 
பார்ப்போம்.

"கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர்நின் பகைவர் மீனே'
(புறம்:  24)
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்தும் பகுதி இது. "வெற்றியுடைய புகழ் பொருந்திய குடையையும், மீன் கொடியால் விளங்கும் தேரையும் உடைய செழியனே! நின்நாளாகிய மீன் (பிறந்த நாளுக்கான நட்சத்திரம்) நிலைத்து நிற்பதாகுக! நின் பகைவரின் நாளுக்குரிய நட்சத்திரம் நில்லாது பட்டுப்போவதாகுக' என்பது பாடலின் பொருள். இப்பாடலிலிருந்து அரசர்களுக்கான பிறந்த நாள்,  நட்சத்திரம் கொண்டே கணிக்கப்பெற்றுள்ளது என்பதைத் தெளியலாம்.

தொல்காப்பியர், அரசர்களுக்கான பிறந்த நாளை "பெரு மங்கல விழா' என்றும், "நாளணி' என்றும் (தொல்: புறத், நூ.92) குறிப்பிடுகின்றார். அன்றைய நாளில் அரசர்கள் சினம் கொள்ளாதிருப்பர் என்றும் (முத்தொள்ளாயிரம் -"கண்ணார் கதவம் திறமின்'- பா.7)  சொல்கிறார். பெருமங்கல நாளில் 
அரசன் வெள்ளுடை உடுத்து, முத்துப் போன்ற வெண்மையான அணிகலன்களைப் பூண்டு திகழ்வானாதலின், அதனை 
நாளணி என்றும், வெள்ளணி என்றும் வழங்குதல் வழக்கம்.  இந்தப் பெருமங்கலத்தை "நாண்மங்கலம்' எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.

பாண்டியனுக்கு மட்டுமா நட்சத்திர நாள், சோழனுக்கும் சொல்லப்படுகிறது. "என் தலைவனாகிய கிள்ளிவளவன் பிறந்த நட்சத்திரமாகிய ரேவதி நாளில், அந்தணர் பசுக்களுடன் பொன்பெற்றுச் செல்கின்றனர், புலவர்கள் மலைபோன்ற யானைகளைப் பரிசாகப் பெற்று அதன் மீது ஏறிச் செல்கின்றனர்' என்று (முத்தொள்) அரசனுக்கான ரேவதி மீன் சுட்டப்படுகிறது. இவ்விலக்கியம், அரசர்களுக்கு மட்டுமன்று, ஆண்டவனுக்கும் (கடவுள் வாழ்த்து) நட்சத்திரம் சொல்கின்றது.

நம் முன்னோர் தங்கள் பிறப்பு - இறப்புக்கு நட்சத்திரங்களையே காலக் கணக்கீட்டுக்குக் கொண்டனர். இவ்வாறு காலத்தைக் கணக்கிடுபவர்களைக் "கணியன்' என்ற சொல்லால் சுட்டினர். இவ்வாறு நாள்மீன்களைக் கொண்டு கணிக்கும் மரபில் தோன்றியவர் திருவள்ளுவர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருவள்ளுவர் பிறந்த நாள் நட்சத்திர பெயரிலேயே அமைந்திருக்கும் என்பதில் எள்ளவும் ஐயம் கொள்ள இடமில்லை. எனினும் பழைய நூல்களிலோ, கல்லெழுத்து, செப்பேடு முதலிய ஆவணங்களிலோ அவர் பிறந்த நட்சத்திர நாள் கிடைக்காதது நமது பாக்கியக் குறைவே.
இந்தக் குறைபாட்டிற்கிடையேயும் நமக்கு ஆறுதல் தருவது, சென்னை - மயிலாப்பூரில் இருக்கும் திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவர்அவதார மாதம் வைகாசி எனவும், நட்சத்திரம் அனுடம் எனவும் கொள்ளப்பட்டுள்ளதே. 

அந்தக் கோயிலின் அகழ்வாய்வின்போது கிடைத்த திருவள்ளுவரின் பழைய படிமம் ஏறக்குறைய 400-ஆண்டு பழைமை உடையது எனத் தொல்லியல் துறையைச் சேர்ந்த  எஸ்.இராமச்சந்திரன் கூறுகிறார். 

இந்து சமய அறநிலையத்துறையின் ஆவணத்தில் திருவள்ளுவர் அவதார தினம் வைகாசி அனுடம் என்றும், அவர் அடைந்து போன  நாள் மாசி உத்திரம் என்றும் பதிவாகியுள்ளது.  இந்நாளே திருவள்ளுவர் பிறந்த நாள் எனத் தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டாடினர். 

பிறந்த நாளைக் கொண்டாடுவது அந்நியர் வழக்கம். பிறந்த நட்சத்திரத்தைக் கொள்வதுதான் - கொண்டாடுவதுதான் நமது மரபு, வழக்கம். நம் முன்னோர் மரபு வழியில் கொண்டாடிய வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாக நாமும் தொடர்ந்து கொண்டாடுவோம்.

இன்று: வைகாசி 5, அனுட நட்சத்திர நாள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்