தன் சமூகத்தின் மூடுதிரையை இலக்கியத்தால் விலக்கியவர்!  பொன்னீலன்

கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமாக எழுதி, தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர் தோப்பில் முஹம்மது மீரான். அவருடைய முதல் நாவல்
தன் சமூகத்தின் மூடுதிரையை இலக்கியத்தால் விலக்கியவர்!  பொன்னீலன்

கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமாக எழுதி, தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர் தோப்பில் முஹம்மது மீரான். அவருடைய முதல் நாவல் "ஒரு கடலோர கிராமத்தின் கதை'யே! தன் இலக்கிய அழகாலும், அது காட்டும் அபூர்வமான வாழ்க்கை வளத்தாலும், தமிழ் இலக்கிய உலகில் அவருக்கு ஒரு நிலையான இடம்பிடித்துத் தந்தது.
 மிக நீண்ட காலமாக ஒரு மூடிய சமூகமாகக் கருதப்பட்ட சிறுபான்மைத் தமிழ் இஸ்லாமின் உள் முரண்பாடுகளையும், அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த சிக்கல்களையும் நெகிழ்த்தி, அவிழ்த்து சமூக வளர்ச்சியைத் தூண்டிய அருமையான படைப்பாளி அவர்.
 தமிழ்ச் சிறுபான்மை இலக்கிய வளர்ச்சிப் போக்கின் ஓர் அழுத்தமான கணுவாக அமைந்தவர் தோப்பில் முஹம்மது மீரான். தேங்காய்ப்பட்டினம் என்னும் கடலோர கிராமத்தைச் சார்ந்தவர் அவர். அந்த ஊரின் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியரின் வாழ்வியலை புனைக்கதைகளாக எழுதி, மைய நீரோட்டத்தில் கொண்டு சேர்த்தவர் அவர்.
 1980-களுக்குப் பிறகு தமிழின் நவீன இலக்கியம் புதிய புதிய திசைகளில் பயணிக்க ஆரம்பித்தது. அதுவரை நவீனம் பேசிய படைப்பாளிகள் தங்கள் படைப்புகளுக்குள் கவனப்படுத்தாத மற்றவை - தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடிகள், பெண்கள் முதலிய சமூகத் திரட்சிகளில் இருந்து புதிய புதிய படைப்பாளிகள் உருவாகத் தொடங்கினார்கள். இவர்களின் சொல் புதிதாக, பொருள் புதிதாக, சுவையும் புதிதாக இருந்தது.
 அழகியல் பார்வை கூடப் புதிதாக இருந்தது.
 இந்த வரிசையில் வந்தவர்தான் தோப்பில் முஹம்மது மீரான். தேங்காய்ப்பட்டினம் என்னும் தன் கடலோரச் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வியலை அதன் முழு அழகோடும், ஆழத்தோடும் மைய நீரோட்டத்தில் கொண்டுவந்த சாதனையாளர் இவர்.
 இந்தக் கடலோர கிராமம்தான் தோப்பில் முஹம்மது மீரானின் மிகப் பெரும்பான்மையான படைப்புகளின் களம். ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, எல்லாமே அந்தச் சிறிய வட்டாரத்தில் இருந்து அவர் உயிரும், உடம்பும், உணர்வுமாக உருவாக்கி எழுப்பியவையே.
 "ஒரு கடலோர கிராமத்தின் கதை'யை முதன் முதலில் வாசித்தபோது பிரம்மித்துப் போனேன். இஸ்லாமிய மனிதர்களின் முரண்பட்ட தன்மைகள், இறுக்கங்கள், இஸ்லாமிய பெண்களின் ஒடுங்கிப்போன நிலை, எல்லாமே என்னை அதிர வைத்தன. முழு நிலவு தரையில் வீழ்த்தியிருக்கும் வெள்ளிக்காசுகளை அவர் வரைந்து காட்டும் அற்புதம் தமிழ்ப் படைப்புலகில் வேறு எவரிடமும் நான் அதுவரை பார்த்ததில்லை.
 ஒரு கடலோர கிராமத்தின் கதையில் வள்ளியாறு நீர் நிறைந்து மதமதத்துக் கடலைத் தழுவிக் கொள்ளும் அற்புதம், ஆற்றின் திமில்கள் போன்ற அலைகள் கடலை ஏறித் தழுவும் மாட்சி.... இந்த அழகுக்காகவே தோப்பில் மீரானின் படைப்புகளைப் பல முறை வாசித்திருக்கிறேன். சி.எம்.முத்துவின் கதைகளைப் போல இவர் படைத்துத்தரும் காட்சிகளும் மனதை விட்டு விலகாதவை.
 இந்தப் படைப்புகளை மிகுந்த உட்கட்டமைப்பு நுட்பங்களோடும், பண்பாட்டு அழகோடும், ஆழத்தோடும் அழகிய சிற்பங்களாக வரைந்திருக்கிறார் தோப்பில்.சாதாரண வரைவுகள் அல்ல அவை. தன் மொழியின் மீது அவர் செலுத்திய ஆளுமை அபாரம். குமரி மாவட்டத்தில் அவர் அளவுக்கு மொழியைக் கலை நேர்த்தியோடு பயன்படுத்தியவராக வேறு யாரையும் சொல்ல முடியவில்லை.
 முஸ்லிம் ஆகட்டும், நாடார் ஆகட்டும், பிற சாதிகள் ஆகட்டும், எல்லாரும் பேசும் மொழியை எதார்த்தமாக, அப்படி அப்படியே கையாண்டிருக்கிறார் தோப்பில். இதற்கு அவர் எல்லாச் சமூகங்களையும் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். வட்டார மொழிகளின் தனித்தன்மைகளையும் தனித்தனியான அவற்றின் அழகையும் பிசிறின்றி உள்வாங்கிச் சேகரித்திருக்க வேண்டும்.
 இலக்கியக் கூட்டங்களுக்காக தோப்பில் முஹம்மது மீரானும் நானும் பல ஊர்களுக்கு சேர்ந்து பயணித்திருக்கிறோம். ஒரு தடவை குழித்துறை என்னும் ஊரில் பேருந்துக்காக நாங்கள் நின்று கொண்டிருந்த போது, கடை ஓர நிழலில் பெண்கள் சிலர் முந்திரிப் பருப்பு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
 அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்ததைக் கூர்ந்து கவனித்து, ""பார்த்திங்களா... பார்த்திங்களா, ஒரு தெய்வத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதாக நாம் சொல்வோம். நிறுவுதல் என்றும் சொல்லுவோம். எவ்வளவு எளிமையாக "இருத்துதல்' என்று சொல்கிறார்கள் பாருங்கள்'' என்றார். "இப்படிப்பட்ட சொற்களை இவர்களின் வாய்களிலிருந்துதான் பொறுக்கிச் சேகரிக்க வேண்டும்' என்றார். இந்த மொழியை நாம் கற்பனை செய்ய இயலுமா?
 குமரி மாவட்டத்தில் தோப்பில் மீரான் அளவிற்கு மொழியை நுட்பமாகக் கையாண்டவர்கள் மிக அபூர்வமே. முஸ்லிம் ஆகட்டும், நாடார் ஆகட்டும், பிறர் ஆகட்டும் எல்லாரின் மொழியும் அவர் படைப்புகளில் அப்படி அப்படியே வந்திருக்கும். இது சாதாரணமாக வாய்த்த திறமை அல்ல. சமூகங்களை அவ்வளவு நுட்பமாக அவர் கவனித்திருக்கிறார். இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், மொழியைத் தான் கையாளும் விதத்தைப் பற்றியே அவர் அதிகம் பேசுவார். இன்ன மொழியை இப்படி இப்படிச் சொல்லலாம், நாம் இப்படியும் சொல்லுகிறோம் என்பார்.
 கடைசி வரை தோப்பில் முஹம்மது மீரான் எழுதிக்கொண்டே இருந்தார். தன் சமூகத்தைச் சுயபரிசீலனை செய்தார். விமர்சிக்கவும் செய்தார். எல்லாம் கலந்த, கவனித்து அழகிய புனைவுகளை உருவாக்கிய சிறுபான்மைப் படைப்பாளி அவர். இதில் அவருக்கு நிகராகச் சொல்லத்தக்க பெண் சல்மா.
 மூடிக்கிடந்த தன் சிறுபான்மைச் சமூகத்தைப் பொது வெளிக்குச் சுய விமர்சனத்தோடு திறந்துகாட்ட அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சம் அல்ல. தலித் இலக்கியத்தில் இருந்தும், பெண்ணிய இலக்கியத்தில் இருந்தும் சிறுபான்மை இலக்கியம் வேறுபடுகிறது. மற்ற இலக்கியங்கள் தன் சமூகத்துக்கு எதிர் எதிர் நிலையாக வேறு சமூகங்களை முன் நிறுத்துகிறது. தோப்பிலோ, தன் சமூகத்தின் இறுகிப்போன சட்டங்கள், அதிகார மையங்கள், பெண் ஒடுக்கு முறைகள்,
 மத குருமார்கள் அதிகாரங்கள் இவற்றிற்கு எதிராகத் தன் மனசாட்சியையே நிறுத்துகிறார்.
 இத்தனைக்கும் அவரின் கதைக்களம் கடலோரத்தில் உள்ள ஒரு சின்னஞ் சிறிய கிராமமே. அந்தச் சின்னஞ் சிறிய கிராமத்தில் இருந்தே தன் பெரும்பான்மைப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ளார் தோப்பில். கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, எல்லாவற்றின் களமுமே அந்தச் சின்னஞ்சிறியகிராமமே.
 எல்லா மக்களிடமும் இணக்கத்துடன் பழகுபவர் தோப்பில் மீரான். வேறுபாடு காட்டாதவர் அவர். மலையாளம் கற்றுத் தேறியவர். சொந்தமாக முயன்று தமிழ் கற்று, தமிழ் எழுதப் பழகியவர்.
 தமிழிலும் மலையாளத்திலும் எழுதும், பேசும் ஆற்றல் பெற்றவர். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அவர் பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டவர். வெள்ளை வேட்டி, அரைக்கைச் சட்டை திடகாத்திரமான கழுத்தின் மீது பொலிந்து நிற்கும் வட்டமான முகம், அழகிய அகன்ற நெற்றி, பின்னோக்கி வாரிச் சீவப்பட்ட பாதி நரைத்த அடர்த்தியான தலை, தேன் வண்டு பாடுவது போல் காதில் இனிமை சேர்க்கும் குரல், எல்லாம் கனவாகி விட்டதே...
 அவருடைய இலக்கியப் படைப்புகள் தங்களுடைய தனித்தன்மையான அழகால், ஆழத்தால், கலை நேர்த்தியால், தோப்பில் முஹம்மது மீரானை என்றென்றும் நிலை நிறுத்தும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com