அறமா? வீரமா? சாபமா?

தமிழருடைய வாழ்வியல் முறை எப்போதும் அறத்தோடும் வீரத்தோடும் தொடர்புடையது. இளையோராகட்டும் முதியோரா கட்டும் தமிழ் மக்கள் தம் மரபிலே ஊறிய உணர்வுகளாய்த் திகழ்கிறது அறமும், வீரமும்.  
அறமா? வீரமா? சாபமா?

தமிழருடைய வாழ்வியல் முறை எப்போதும் அறத்தோடும் வீரத்தோடும் தொடர்புடையது. இளையோராகட்டும் முதியோரா கட்டும் தமிழ் மக்கள் தம் மரபிலே ஊறிய உணர்வுகளாய்த் திகழ்கிறது அறமும், வீரமும்.  இதனைப் புறநானூற்றுப் பாடல் வழி  அறியலாம். அகவை ஆகுங்காலம் அறம் செய்ய இயலாது என்பதை வலியுறுத்தி, இளமையிலேயே அறஞ்செய்க என்கிறது இப்பாடல்.
"இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து 
தழுவுவழித் தழீஇ தூங்குவழித் தூங்கி
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறை உறத்தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிக 
கரையவர் மருள திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை,
அளிதோ தானே! யாண்டுஉண்டு கொல்லோ,
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இரும்பிடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?'     (புறம் -243)
அறம் செய்ய இயலாத கையறு நிலையை இப்பாடல் உணர்த்துகின்றது. அதாவது, குளம், குட்டைகளில்; ஏரி, நீர்நிலைகளில் குளிப்பவர்கள் நன்றிக் கடனாக அந்நீரில் மூழ்கி அடியில் கிடக்கும் மணலை ஒரு கை அளவு அள்ளிவந்து கரையில் கொட்டுவர். இவ்வாறு அவ்வூரிலுள்ளோர் அனைவரும் செய்ய, அக்குளம் ஆழமானதாய் நீர் நிரம்பியதாய் எப்போதும் திகழும். 
மேற்கண்ட பாடலின் கருத்தாவது: "இப்போது நினைத்தாலும் என் நிலைமை இரங்கத்தக்கதே! நான் சிறுவனாக இருந்தபொழுது நிறைய மணல்களைக் குவித்து, பாவை செய்து பூக்களைக் கொய்து வந்து அப் பாவைக்குச் சூட்டி, குளிர்ச்சி மிக்க அந் நீர்நிலையில் இளம் பெண்களுடன் கைகோத்துக்கொண்டு ஆடி ஓடி விளையாடினோம். கரையிலுள்ள வளைந்த மருத மரத்தின் கிளையில் ஏறி, கரையிலிருப்பவர்கள் கண்டுவியப்ப, நீர் அலைகள் நிரம்பி எழ, "திடு' மென்ற ஒலி எழத் துடுமெனப் பாய்ந்து அடிவரை சென்று கை நிறைய மணலை அள்ளிக்கொண்டு வந்து கரையில் போடுவோம். நான் முந்தி நீ முந்தி எனும் அந்த வீர விளையாட்டிலே இருந்த அறமும், வீரமும் இன்று எங்கு போனதோ தெரியவில்லை? தண்டூன்றித் தடுமாறி, நாக்குழறி இடையிடையே இருமிக்கொண்டு பேசும் இம் முது அகவையில் என் நிலையைக் காணின் மிக்க வருந்தி இரங்கத்தக்கதாய் உள்ளதே!' என்கிறார் புலவர்.
குளத்தில் மண்ணெடுத்துக் கரையில் போடுவது அச்சிறுவர்கள் அறியாத மரபு வழி அறமாகும். ஆனால், இத்தமிழ்ப் பண்பாட்டின் அறவழி வந்த நாம், சுயநலப் பேய்களாய் மாறி, குளங்களில் குப்பைகளைக் கொட்டி, நீர்நிலைகளை அசுத்தம் செய்தல்லவோ வருகின்றோம்?  இதுவா அறம்? நம் முன்னோர் ஒருவேளை சோற்றை உண்டு, பசியாறி, நீண்ட நெடிய, ஆழமான  நீர் நிலைகளை உண்டாக்கினார்கள். இதை நாம் கல்வெட்டுகளில், ஆவணங்களில் காண்கிறோம். இதுவல்லவோ அறம்! இதுவல்லவோ வீரம்? இனியேனும் நீர் நிலைகளைக் காப்போம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com