பெருமழை பொழிய...

திருக்குறள் "வான்சிறப்பு' என்ற அதிகாரத்தின் மூலமாக மழையைச் சிறப்பித்துள்ளது.
பெருமழை பொழிய...

திருக்குறள் "வான்சிறப்பு' என்ற அதிகாரத்தின் மூலமாக மழையைச் சிறப்பித்துள்ளது. சிலப்பதிகாரம் "மாமழை போற்றுதும்' என்று மழையைப் போற்றுகின்றது. நான்மணிக்கடிகையோ "மழையின்றி மாநிலம் இல்லை' (47) என்கிறது.  கம்பராமாயணமும் "கல்லிடைப் பிறந்து போந்து' எனத் தொடங்கும் பாடலால் மழை கடவுளைப் போற்றுகிறது. திருவிளையாடற்புராணம் "பொழிந்த நீர் அமுதாயின் புவிக்கும் வானவர்க்கும்' என்னும் தொடரால் மழையை மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் அமுது எனக் குறித்துள்ளது. திருக்குற்றாலப் புராணம் "பொங்கு மாகடல்' 

எனத் தொடங்கும் பாடல் வழியாக மழையைத் "திருமகள்' எனக் குறித்துள்ளது.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் "மழை பெய்யப் புரிவாயே தெய்வமே நல்ல மழை பெய்யப் புரிவாயே' என்று மழைக் கீர்த்தனை பாடியுள்ளார்.  உமறுப்புலவர், " மழை யழைப்பித்த படலம்' (சீறாப்புராணம்) பாடி மழையைப் போற்றியுள்ளார். முக்கூடற்பள்ளு, கண்ணுடையம்மன் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, சிவசைலப்பள்ளு, மாந்தைப்பள்ளு, திருமலை முருகன் பள்ளு முதலிய பள்ளு நூல்கள் மழையைப் பற்றி பல்வேறு அரிய குறிப்புகளைத் தருகின்றன. தமிழ் இலக்கியங்களிலும் மழையைப் பற்றிய பல்வேறு அரிய கருத்துகள் பதிவாகியுள்ளன. 

தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. பெருமழை பொழிந்தால்தான் நாடும் மக்களும் அமைதியுறுவர். அவ்வாறு பெருமழை பொழிய  நாமென்ன செய்ய வேண்டும்?

ஐம்பூதங்களையும் படைத்த ஆண்டவனால்தான் மழையைப் பொழிவிக்க முடியும் என்பது சமயச் சான்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும், தொன்றுதொட்டே தமிழக மக்களும், மெய்யன்பர்களும் தமக்கு வேண்டுவன அனைத்தையும் கடவுளைத் தொழுதே பெற்று வந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கு வாழும் மக்கள் மழைக்காக ஒன்றுகூடி பல்வேறு சமயச் சடங்குகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வருகின்றனர். இச்செயல்களால் மழை வருமா? என்ற வினாவிற்கு விடையாக, ஏற்கெனவே தமிழகம் முழுவதும் நிகழ்ந்துள்ள பழைய வரலாற்று நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திருஞானசம்பந்தர் நிகழ்த்திய (ஞானசம்பந்தர் தேவாரம்) அற்புதங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்று மழை பொழியச் செய்தது. அவர் அருளிய தேவாரத்துள் முதல் திருமுறையில் மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் பாடிய ஏழு திருப்பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. திருக்கழுமலப்பதிகம் (சேவுயரும் திண்கொடியான்),  திருவையாற்றுப் பதிகம் (புலனைந்தும் பொறி கலங்கி), திருமுதுகுன்றப் பதிகம் (மெய்த்தாறு சுவையும்), திருவீழிமிழலைப் பதிகம் (ஏரிசையும் வடஆலின்), திருக்கச்சியேகம்பப் பதிகம் (வெந்த வெண்பொடி), திருப்பறியலூர் வீரட்டப் பதிகம் (கருத்தன் கடவுள்), திருப்பராய்த்துறைப் பதிகம் (நீறு சேர்வதொர்) ஆகிய அவ்வேழு பதிகங்களை இறைவன் திருமுன்பு அடியார்கள் பண்ணுடன் பாடிப்பணிந்து வேண்டுவாராயின் பெருமழை பொழியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலும், அப்பர் பெருமான் அருளிய திருக்குறுக்கைத் திருநேரிசையும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய "முன்னிக்கடலை' என்னும் திருவெம்பாவைப் பாட்டும், ஆண்டாளின் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து' என்ற திருப்பாவையும் மழை வேண்டிப் பாடுதற்குரியனவாம். இவைதவிர, பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து சில பாடல்களைப் பாடினால் மழை பொழியும்.

முன்பெல்லாம் தமிழகத்துக் கிராமங்களில் மழைவேண்டித் தெருக்கூத்து நடத்துவர். பாரதக் கதையில் விராட பருவத்தைப் படிப்பர். வள்ளித் திருமணம் நாடகம் நடத்துவர். கிராம மக்கள் ஒன்றுகூடி கொடும்பாவி கட்டி எரிப்பர். இவ்வாறு செய்தால் மழை பொழியும் என நம்பினர்; மழையும் பொழிந்தது. 

இவை தவிர,  புலவர்கள் மற்றும் ஆதீனத் தலைவர்களும் பஞ்சம், வறட்சி வந்தபோதெல்லாம் மக்கள் வேண்டுகோளை ஏற்று   "மழை' பொழிய சில பாடல்களைப் பாடி மழை பொழியச் செய்துள்ளனர். அந்த வகையில், தருமை ஆதீனத்தின் பதினான்காவது குருவாக இருந்த கந்தப்ப தேசிகர் பாடிய, 

"சைவ சமயம் சமயமெனில் அச்சமயத்
தெய்வம் பிறைசூடும் தெய்வமெனில்-ஐவரைவென்(று)
ஆனந்த வெள்ளத்து அழுந்துவதே முத்தியெனில்
வானங்காள்! பெய்க மழை'

என்ற பாடலால், நெல்லை மாவட்டம் முழுவதும் பெருமழை கொட்டியதாக வரலாறு. அதேபோல,  சித்தர் சிவப்பிரகாசர் தம்மோடு வந்த அடியார்களை அழைத்து "மேகராகக் குறிஞ்சியை' பாட,  நாடு முழுவதும் பெருமழை பொழிந்ததாம். கொங்கு நாட்டுப் புலவராகிய தே.இலட்சுமண பாரதியார் என்பவர், ராமேசுவரத்திற்குச் சென்றபோது, சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று,

"தெண்டாயுதா! பழநிச் செல்வனே! உன்கிருபை
உண்டாவ தும்உலகில் உண்மையேல் -விண்டுமழை
எங்கும் பொழிய இராமநா தன்மனது
பொங்க அருளே புரி' 

என்று பாடிய அன்றே பெருமழை பொழிந்ததாம். விருதை சிவஞான யோகி என்பவர், முருகன் மீது ஏழு பாடல்களைப் பாடினார். பாடிய அன்றே பெருமழை பொழிந்ததாகக் கூறுவர். அதில் ஒரு பாடல் இது:

"செய்யவள் மருகா வேலா தேசிகா முருகா னந்தா
துய்யவெண் மேகம் எல்லாம் சூல்முற்றிக் கரிய வாகி
வையகம் வளம்பெற்று ஓங்க வான்மிசைக் கர்ச்சித் தேறி
வெய்யிலின் கொடுமை போக மிகமழை பொழியச் செய்யே'

காவிரி நதிநீர் தொடர்பான பிரச்னையில் தமிழகத்து மக்களுக்குத்  தண்ணீர் வருமா? வராதா என்கிற கேள்வி தமிழக மக்கள் சார்பில்   மறைந்த மூதறிஞர் அடிகளாசிரியரிடம் கேட்கப்பட்டபோது,  அதற்கு அவர்,  இறைவனிடம் முறையிடுகின்றேன் என்றுகூறி, 

"கருத்திளகாக் கருநாடரைக் காவிரிநீர் கேளோம்
கண்ணுதலே உன்னுடைய கருணைமழை கேட்டோம்
அருத்தியுடன் காலமுகில் அந்தரத்தில் தோன்றி
அச்சுதன்போல் அமுதுமழை அவனியின்கண் பொழிக!
திருத்தியுடன் கங்கைநீர் திருமதிநல் லறுகு
திகழ்ந்துவனப் புடனிற்கத் திகழவற் றிடையே
மருத்திகழக் கார்மலர்த்தும் கொன்றைமலர்க் கண்ணி
மணந்திருக்க மகிழ்ந்திருக்கும் மாண்புநெறி முடியோய்!'

என்று பாடி, இறைவனிடம் முறையிட்ட மறுநாள் பெரு மழை பொழிந்தது. ஆகவே, மேற்குறிப்பிட்ட அருளாளர்களின் அனைத்து பாடல்களையும் மனமுருகி இறைவன் திருமுன் பாடி,  வழிபட பெரு மழை பொழியும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com