காப்பியத்துள் இலங்கும் ஒரு சிற்றிலக்கியம்!

சேக்கிழார் பெருமான், பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும்போது, சம்பந்தர் எனும் குழந்தை அவதரித்து பிள்ளைத் தமிழின் பத்து பருவங்களுக்கேற்ப நன்கு அழகாக வளர்ந்ததனை மிகவும் சுவைபட
காப்பியத்துள் இலங்கும் ஒரு சிற்றிலக்கியம்!

சேக்கிழார் பெருமான், பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும்போது, சம்பந்தர் எனும் குழந்தை அவதரித்து பிள்ளைத் தமிழின் பத்து பருவங்களுக்கேற்ப நன்கு அழகாக வளர்ந்ததனை மிகவும் சுவைபட வருணனை செய்துள்ளார்.  ஒரு காப்பியத்தின் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி விளங்குவது பெரியபுராணம். இதில் இடம்பெறும் பிள்ளை புராணத்தை ஒரு சிறிய பிள்ளைத் தமிழ் வடிவாகவே கருதவும் இடமிருக்கிறது. 
குழந்தை பிறந்ததும் அந்தணர் வீடுகளில் செய்யப்படும் நற்சடங்குகளில், பத்துநாள் சடங்குகளை வருணித்து மற்றவற்றை நயத்துடன் சேக்கிழார் கூறும் அழகே அழகு. 

தொடர்ந்து வரும் பாடல்களில் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டு, சில வரிகளோ, பாடல்களோ ஆயினும் கற்பனைநயம் மிகக் கூறப்படுகின்றன. 

சிவபிரான் திருவருளால் உதித்த குழந்தையாதலால், பலவிதமான காப்புகள் தேவையில்லை எனக்கருதி, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசி, காப்புச் சடங்கினைச் செய்கின்றனர். இதனால், முதல் மாதத்தில் பாடப்படும் காப்புப்பருவம் கூறப்பட்டது.

தமிழுடன் சைவமும் சிறப்புற வந்துதித்த காழிப்பிள்ளையாரை தாயார் தன் மடித்தலத்தும், மணித்தவிசிலும், தூய்மையான விரிப்பைக் கொண்ட தொட்டிலிலும், மலர்ச் சயனத்திலும் கண்வளர்த்தித் தாலாட்டினார். இதன் மூலம், ஏழாம் மாதத்தில் பாடப்படும் தாலப்பருவம் கூறப்படுகிறது.

ஆளுடையபிள்ளை, ஐந்துமுதல் ஏழு மாத அளவில் குழந்தைகள் செய்யும் செங்கீரையாடலைச் செய்தார். மேலும், தவழும் குழந்தை முகத்தைப் பக்கவாட்டிலும், மேலும் கீழும் அசைக்கும்; அது, "சிவபிரானுடைய திருத்தொண்டைத் தவிர பிறிதொன்றினையும் செய்யோம்' என்பது போல இருந்ததாம்.

ஒன்பதாம் மாதம் ஆளுடையபிள்ளை கைகளைச் சேர்த்து ஒத்தியெடுத்து, சப்பாணி கொட்டியது சிவபெருமானிடத்துப் பிற்காலத்தில் கைத்தாளம்பெற வேண்டியதனைப் போல இருந்ததாம்! 

இவை அனைத்தும் சைவம் தழைக்க வந்துதித்த ஞானசம்பந்தர் குறித்து சேக்கிழார் பெருமானின் பக்தியில் உதித்தெழுந்த கவியுக்தி செறிந்த கற்பனைகள். 

வருகைப் பருவத்தில், "சீர்காழி நகர்வாழ் மக்களுக்கு சிறப்பு செய்ய உதித்த செல்வமே வருக!' என்றும், "கவுணிய குலத்தோரின் கற்பகமே! வருக' என்றும் குழந்தையை அழைக்கின்றனர். சிறு மகவான பிள்ளை, ஓடோடி வந்து தம் தாய் பகவதி அம்மையைத் தழுவிப் புறம் புல்குகின்றார்.  ஞானசம்பந்தப் பெருமானின் கால்களில் அணிந்த கிண்கிணிகள் இனிய ஒலி எழுப்ப, தாமும் தளர்நடையிட்டு நடந்தார்.

ஆண்பால் பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவங்களான சிறுதேர், சிற்றில் ஆகியவற்றையும்  சேக்கிழார் பாடியுள்ளார்.

அழகான சிறுதேரைப் பற்றிக்கொண்டு ஞானசம்பந்தப் பிள்ளை உருட்டிச் செல்கிறார். மணலைக் கொழித்து, சிற்றில் இழைத்து விளையாடும் பேதைச் சிறுமியர் இருக்குமிடங்கள் தோறும் ஓடியும் நடந்தும் சென்று அவற்றைக் காலால் தொடர்ந்து அழித்தும் விளையாடினார். இவ்வாறு விளையாடி வீதி முழுதும் திருவொளி பரப்பி வளர்ந்து வந்தார் எனக்கூறி, ஆளுடைய பிள்ளையின் மழலைப் பருவத்தினை அழகுறப் பாடியருளியுள்ளார் சேக்கிழார் பெருமான்.


"சிறுமணிதேர் தொடர்ந் துருட்டிச் 
செழுமணல் சிற்றில்களிழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்,
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழுப்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்து வளர்ந் தருளும்' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com