கவியரசரின் சமுதாயச் சிந்தனை! 

கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன.
கவியரசரின் சமுதாயச் சிந்தனை! 


கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், கோணல் மாணல்களையும், வர்க்க பேதங்களையும்கூட அவருடைய கவிதைகள், பாடல்கள் மூலமாக நம்மால் தரிசிக்க முடிகிறது.

சமதர்ம சமுதாயத்தைத் தம் கவிதைகள் வாயிலாகப் படைக்கத் துணிந்த கவிஞர் "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். "வல்லான் பொருள் குவிக்கும் தனி உடைமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொது உடைமை' என்று மார்க்சின் பொது உடைமைத் தத்துவத்தைப் பட்டித் தொட்டி எங்கும் பாடல்களாக ஒலிக்கச்  செய்த கவியரசர் கண்ணதாசன், வறுமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று வலிமையாகக் குரல் எழுப்பியவர். 

ஒரு நிகழ்வைக் காட்சிப்படுத்த கலைஞன் கையாளும் முறையிலேதான் அவனுடைய கற்பனைத்திறன் வெளிப்படுகிறது. கீழ்க்காணும் கவிதையில் ஓர் ஏழைத் தாயின் வறுமையின் கொடுமையை அவருடைய வீட்டில் உள்ள ஒரு பழைய சோற்றுப் பானை பேசுவதாகக் கவியரசர் தமது கற்பனைச் சிறகை 
விரித்துச் செல்கிறார்.  

"வாரத்திலே ஒருநாள் கொதிப்பேன் - கஞ்சி
வார்த்துக் கொடுப்பதற்காக
பசி தீர்த்து முடிப் பதற்காக பின்னர்
ஓரத்திலே பல நாள் கிடப்பேன்
 நல்ல ஓய்வு பெறுவதற்காக
வீட்டில் உள்ள குழந்தைகள் சாக!

நெல்லை அரிசியை நேரினில் கண்டதும்
துள்ளிக் குதிக்கும் பெண்டாட்டி
ரெண்டு சுள்ளி கொண்டுகனல் மூட்டித் - தன்
பல்லை நெருக்கும் பசிப்பிணி தீர்ந்திடப்
பானைஎனை அதிலேற்றி கொஞ்சம்
பைப்புத் தண்ணீரையும் ஊற்றி

வேங்கை பிடித்திட்ட வீரனைப் போலெனை
வெற்றிக் களிப்புடன் பார்த்து துணி
சுற்றி கழுநீரை வார்த்து-எனைத் தாங்கி
எடுத்துத் தன் பிள்ளைகளை வைத்து 
சாப்பிடுவாள் ரசம் சேர்த்து எனை
சாய்த்து வைப்பாள் பசி நீர்த்து..

அப்புறம் எத்தனை நாள்செலுமோ - எனை
அந்தக் குடும்பங்கள் தாங்க
கொஞ்சம் அரிசி மணிகளை வாங்க
இங்கு வந்த சுதந்திரம் ஏழைக்கல்ல- அது
வாழும் முதலைகள் தூங்க - பசி
வாட்டும் இதயங்கள் ஏங்க

இப்படியே பசி நீளுமென்றால் இது
என்ன சுதந்திரப் பூமி? - ஏன்
இத்தனை ஆயிரம் சாமி? - ஒரு
கைப்பிடியில் பல பூட்டை உடைத்தின்று
காத்திடுவோம் எங்கள் வீட்டை
பழிதீர்த்திடுவோம் இந்த நாட்டை!

ஏழைத் தாயின் வறுமையைப் பற்றி மட்டும் கவியரசர் பாடவில்லை. இந்தச் சமுதாய அமைப்பைப் பற்றியும் சாடுகிறார். அதற்கான தீர்வையும் கூறுகிறார்.

"மாட்டு வண்டி போகாத இடங்களுக்கெல்லாம் இவரின் பாட்டு வண்டி பயணம் செய்திருக்கிறது' என்று கவிஞர் பட்டுக்கோட்டை யாருக்குக் கூறப்பட்டக் கூற்று, கவியரசருக்கும் பொருந்தும். பாட்டு வண்டியில் மூட்டை மூட்டையாக சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச் சென்று பாமர மக்களின் மனதுக்குள் பசை போட்டு ஒட்ட வைத்தப் பெருமை கவியரசருக்கே உரித்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com