செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

குண்டக்க... மண்டக்க...

By -முனைவர் அ. தட்சிணாமூர்த்தி| Published: 16th June 2019 02:15 AM


""குண்டக்க மண்டக்க வண்டி ஓட்டுறாங்க - கோளாறாப் போயிட்டு வாங்க'' - இது மதுரையில் குடியேறியபோது, மதுரை நண்பர் சொன்ன எச்சரிக்கை உரை. இது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இது மதுரைக்கே உரிய வட்டார மொழி. 

"சட்ட விதிகள் பற்றிக் கவலைப்படாமல், முரட்டுத்தனமாக வாகனம் ஓட்டுபவர்கள் பலராக உள்ள நிலையில், பாதுகாப்புக்குரிய வகையில், துன்பம் ஏதும் இன்றிப் போய் வாருங்கள்' என்று நண்பர் அறிவுறுத்தினார் என்று ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன்.

மதுரை தமிழ் வளம் செறிந்த பழம் பெருமையுடைய நகரமாதலின், இவ்வழக்கில் ஏதோ வரலாறு மறைந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் சிந்தித்தபோது, தேவாரமும், திவ்யப் பிரபந்தமும் கை கொடுத்தது. சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பல்லவர் காலத்தில் சமணரோடும், பௌத்தரோடும் கடுமையாகப் போராடும் பக்தி நெறியினை வளர்த்தனர். 

திருஞானசம்பந்தரின் பதிகங்களில், ஒரு பாட்டு சமண, பௌத்தர்களை இழித்தும் பழித்தும் சாடுதலையே நோக்கமாகக் கொண்டது. அப்பர் பாடல்களிலும் இத்தகு பழிப்புரைகள் உண்டு. ஆழ்வார்களுள் தொண்டரடிப் பொடியாழ்வாரின் ஒரு பாடல் மட்டுமே அக்காலத்து சமய முரண்பாட்டுப் போரை நமக்குக் கோடிட்டுக் காட்டும். 

ஆழ்வாரின், "வெறுப்பொடு சமணமுண்டர், விதியில் சாக்கியர் நின்பால் என்ற பாட்டிலுள்ள "முண்டர்' என்ற சொல்லை நினைவில் வையுங்கள். அப்பர் பெருமான், தாம் சமண நெறி சார்ந்ததற்குக் கழிவிரக்கப்படுதலை பல சான்றுகளால் அறியலாம். அவற்றுள் ஒன்று,  ""குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை'' (தேவா.384) என்பது. குண்டன் என்பது முரடன், மூர்க்கன் எனப் பொருள்படும் வசைமொழி.

"குண்டனாய்த் தலைபறித்திட்டுக் குவிமுலையார்
நகை காணாது உழிதர்வேனை!''  (தேவா 45)

என்பதில் திகம்பர சமணனாகத் தாம் திரிந்து பற்றிய குறிப்புள்ளது. சாதாரண குண்டனாய் மட்டுமல்லாது, குண்டர்களுக்குத் தலைவனாகவும் தாம் விளங்கியதை எண்ணி நாணமுற்றார். ""சமணர்க்கோர் குண்டாக்கனாய்'' (தேவா. 963) என்ற குறிப்பைக் காணலாம். குண்டாக்கன் என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி தரும் பொருள், "குண்டர்க்குத் தலைவன்' என்பது. இன்னும் குண்டர் சட்டம் நம்மிடையே உண்டே! மூர்க்கர்கள்  (ரெளடிஸ்) என்று இதனை விளக்கு
கின்றனர்.

"முண்டன்' என்ற சொல்லை ஆற்றல்மிக்கவன் என்ற பொருளில் நாம் ஆள்கிறோம். இது மிண்டன் என்பதன் திரிபு. விறன்மிண்ட நாயனாரை நாம் அறிவோம். இந்த முண்டன் என்ற சொல்லுக்கு, ஆடையற்றவன் (திகம்பரன்) என்ற பொருளும் உண்டு. முண்டமாகத் திரிகிறான் என்பதும், ஒருவனை முண்டம் என்று இகழ்வதும், சமணர்களைத் தேவார திவ்யப் பிரபந்த ஆசிரியர்கள் திட்டிய வரலாற்றையே தெரிவிக்கின்றன. குண்டன் குண்டாக்கன் ஆனவாறே மிண்டன், மிண்டாக்கனாக ஆகலாமல்லவா?

""மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே'' (திருமாலை) எனத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறவில்லையா? முரட்டுத்தனமாக, அறிவீனத்தோடே பேசும் பேச்சு என்ற பொருளை, ""பிண்டியர்கள் மிண்டு மொழி'' (தேவா.49) என்று வரும் பகுதி கொண்டு உணரலாம். தமிழ்ப் பேரகராதி மிண்டுதல் என்ற சொல்லுக்கு வலியராதல், மதம் கொண்டவர் என்ற பொருள்களைத் தருகிறது.

இச்சான்றுகளால், பல்லவர் காலத்தில் நடந்த சமயப் புரட்சியில், சைவ, வைணவர்கள் தம் எதிரியரான சமணரையும், பௌத்தரையும் பழித்துப் பேசிய வரலாற்றின் எச்சங்களாகவே "குண்டக்க மண்டக்க' என்னும் வழக்காறு இருந்துள்ளது தெளிவாகிறது. 

இனி, "கோளாறு' பற்றிப் பார்க்கலாம். வயிற்றுக் கோளாறு, மூளைக் கோளாறு என்பவை நமக்குப் பழக்கமானவை. தாறுமாறான நிலையை இது குறிக்கிறது. தாறுமாறு, குற்றம் என்ற பொருள்களைத் தலைமையானவையாகப் பேரகராதித் தருகின்றது. தேவாரத்தில் "கோள்' என்பது "தீமை' என்று பொருள்படும். இதற்கு ஞானசம்பந்தர் பாடிய "கோளறு பதிகமே' சான்று. 

"கோள் அற' அதாவது, யாதொரு தீமையும் இல்லாத வகையில் போய் வருமாறு வற்புறுத்துவதே, "கோளாறாய்ப் போங்கள்'' என்பது. பேச்சில் கோள்+அற என்பது கோளாறா என்று திரிந்து போயிற்று. சமண சமயத்தாரோடு அனல் வாதமும், புனல் வாதமும் புரிந்த ஞானசம்பந்தர் வரலாற்றோடு "கோளாறு' என்பது தொடர்புடையது என்பதை அறிய, நமக்கு இன்று வியப்பு ஏற்படுகின்றது!

மக்களின் பேச்சில் மறைந்து கிடக்கும் வரலாறுகள் மிகப் பலவாகும். நுட்பமாகச் சிந்தித்தால் நூற்றுக்கணக்கான வரலாறுகளை மக்கள் பேச்சிலிருந்து உணர வாய்ப்புண்டு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நீ உயிர், உடல் நானே!
இந்த வாரம் கலாரசிகன்
உயிர்த்தெழுவாயாக!
ஆழ்வார் பாசுரங்களில் அருந்தமிழ்க் குறள்!
பழமொழி நானூறு