22 செப்டம்பர் 2019

பரிமேலழகரின் "ஓவிய' உரை!

DIN | Published: 09th June 2019 01:25 AM

திருக்குறளுக்குக் குறளனைய செறிவுடன் உரை வரைந்தவர் பரிமேலழகர். "காலக்கோட்பட்டு இவர் முரணி எழுதிய இடங்கள் சில உண்டு' என்று குறிப்பிடும் வ.சுப.மாணிக்கனார்,"இவரது நுண்ணிய தெளிவுரை என்றும் கற்றுப் போற்றற்குரியது' (வள்ளுவம், ப.146) என்றும் புகழ்ந்துரைப்பார். 
இலக்கண - இலக்கியச் செறிவு, பல்துறை அறிவு, திட்ப நுட்பம், திகட்டாத தீந்தமிழ் நடை போன்றவற்றால் கற்போர்க்குப் பெருவிருந்து படைத்தவர் பரிமேலழகர். அவரது உரை விளக்கம் பலவிடங்களில் காட்சிப்படுத்தும் ஓவியங்களாய் ஒளிர்வதுண்டு. அத்தகைய "ஓவிய' உரைகளுக்கு இரண்டு சான்றுகள் காட்டலாம்.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு (752)
என்பது பொருள் செயல்வகை (76) அதிகாரத்தில் இடம்பெறும் குறளாகும். இதில் அருஞ்சொற்கள் ஒன்றும் இல்லை; சொற்களைக் கொண்டுகூட்டிப் பொருள்காண வேண்டிய தேவையுமில்லை. பொருள் வெளிப்படை. மூலத்தில் உள்ள சொற்களைக்கொண்டே இவ்வெளிப்படைப் பொருளை மணக்குடவர் முதலான ஏனை உரையாசிரியர்கள் எழுதிச் சென்றனர். பரிமேலழகர் மட்டும் ""..... பொருளில்லாரை யாவரும் இகழ்வர்... அஃதுடையாரை யாவரும் உயரச் செய்வர்'' என்று எழுதினார்.
"செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்' என்ற மூலபாடமே தெளிவாகப் பொருளை உணர்த்தும்போது, பரிமேலழகர் கூறும், "உயரச்செய்தல்' என்பது என்ன? என்று கேட்கத் தோன்றும்.
உயரச்செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல் என்று விளக்கம் தருகிறார் அவர். இதன் மூலம் உலக நடப்பில் பொதுவாகக் காணப்படும் நிகழ்வினைக் கண்முன் நிறுத்துகிறார் பரிமேலழகர். 
பொருளுடைமை காரணமாக ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் (குறள்.751) போற்றிக் கொண்டாடுவது உலக இயல்பு. 
வாழ்ந்து கெட்டவனும், வறுமைப்பட்டவனும் அத்தகைய செல்வரை நாடிச்சென்று அவர் முன் கூனிக்குறுகி நிற்கின்றனர். அவர்களின் காலில் விழாக் குறையாகக் கைகட்டி நின்று நாணத்துடன் தங்களின் வறுமைத் துன்பத்தை வாய்விட்டுச் சொல்கின்றனர். அப்படிச் சொல்லும் போதே உயிர் நீங்கியது போன்ற நிலையை அடைகின்றனர். இத்தகைய அளவுகடந்த தாழ்ச்சி காரணமாகப் பொருளுடையவனை அவனிருக்குமிடத்திலேயே உயர்ச்சி உடையவனாக்கி விடுகிறான் இந்த வறியவன். இவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டதால் அச்செல்வனுக்குத் தானாகவே கிடைக்கும் தனி உயர்வு இது.
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும் (1045)
என்னும் குறளுக்கும் இவ்வாறே அவரின் உரை அமைதல் காணலாம். வறுமையால் பல துன்பங்கள் விளையும் - என்பதே இக்குறளின் கருத்து. ஆயினும் அத்துன்பங்கள் எவை எவை என்ற விளக்கம் பாட்டில் இல்லை. பரிமேலழகர் அத்துன்பங்களை உளவியல் முறையில் அவருக்கே உரிய நுண்ணுணர்வுடன் அடுக்கிக் கூறுகிறார். அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
* வறியவன் செல்வரை நாடிச் சென்று அவர் வீட்டு வாசலில் நிற்கையில் துன்பம்;
* காத்திருந்து காண்பதில் துன்பம்;
* கண்டாலும் அவர் கொடுக்க மறுப்பதால் உண்டாகும் துன்பம்;
* மறுக்காது கொடுத்தாலும், கொடுத்ததொன்றை அவரிடம் வணங்கிப் பெறுவதால் ஏற்படும் துன்பம்;
* பெற்றதாகிய அப்பொருளைக் கொண்டு தேவையானவற்றைத் திரட்டலால் துன்பம்.
இப்படி நாள்தோறும் வேறு வேறாக விளையும் துன்பங்கள் பல என்கிறார் அவர். இவ்விளக்கம் பொருள் முட்டுப்பாடு உடையவர்களின் வாழ்வியல் அனுபவத்தைக் காட்சிப் படுத்துவதாகவே உள்ளது.
"பல்குரைத் துன்பங்கள்' என்பதற்குத் தான் இனிது உண்ணப்பெறாத துயரம், தன் சுற்றம் ஓம்பப் பெறாத துயரம், சான்றோர்க்கு உதவப் பெறாத துயரம், வருவிருந்து ஓம்பப் பெறாத துயரம் முதலியவற்றை எடுத்துக் காட்டுவார் மணக்குடவர்.
எனினும், "பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார்' படும் துன்பங்களை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்திக் காட்டும் பரிமேலழகரின் விளக்கம் போல, மணக்குடவரின், "துயரப்பட்டியல்' நம் மனத்தில் தைக்கவில்லை. எனவே, மேற்குறித்த உரைப் பகுதிகளை, பரிமேலழகரின் "ஓவிய உரைகள்' எனலாம்.
-முனைவர். ம.பெ.சீனிவாசன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்