செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

சம்பாபதி

DIN | Published: 09th June 2019 01:26 AM

"சம்பாபதி' என்பது "சம்பாதி' என்பதன் திரிபாகத் தோன்றி இன்று வழக்கிலுள்ளது. இது புகார்நகரக் கடவுள் பெயர் என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் பல்வேறு கடவுளர்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், "சம்பாதியிருந்த சம்பாதி வனமும்' (மணி.3: 54) என்கிற இத்தெய்வத்தின் பெயரே இந்நகர்க்கும் பெயராயிற்று.
 மேலும், இந்நகர்க்குப் "புகார்', "கழார்', "காவிரிப்பட்டினம்', "பட்டினம்' முதலிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை சங்க இலக்கியத்தின் வாயிலாக அறியலாம்.
 "பட்டினம்' என்ற பெயர் பல இடங்களில் இருந்தாலும், அது புகாரையே குறித்தது என்று அறிஞர்கள் தெளிவுறுத்துவர்.
 இதன் சிறப்பினை, ""பட்டினம் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற சோழநாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வீற்றிருந்தது. அக்காரணத்தால் "புகார்' என்றும், "காவிரிப்பூம்பட்டினம்' என்றும் அந்நகரம் பெயர் பெறுவதாயிற்று'' என்று ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
 மேலும், இந்நகர்க்கு "காகந்தி' என்னும் பெயர் இருந்ததை, "ககந்தன் காத்தல் காகந்தி என்றே இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு ஈங்கு' (22: 37-8) என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.
 திவாகர நிகண்டும், "காகந்தி, புகார், காவிரிப்பூம்பட்டினம்' என்று புகார்க்கு இப்பெயர் இருந்ததைக் குறிப்பிடுகின்றது. இதைப் பழங்காலத்தில் "ககந்தன்' என்பவன் காத்து வந்ததனால் இது "காகந்தி' என்னும் பெயரினைக் கொண்டது என்பர்.
 "தவா நீர்க் காவிரிப் பாவைதன் தந்தை ஆங்கிருந்த கவேரன் கவேரவனமும்' (மணி. 3-55, 56) என்று காவிரிக்குப் பெயர் வந்ததையும், மணிமேகலை "கவேரன் மகள் காவிரி' என்று குறிப்பிடுகின்றது. பிற்காலத்தில் புகாரைக் குறிக்க, "பூம்புகார்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு, இன்று வரையில் வழக்கில் இருந்து வருகின்றது.
 "புகார்' என்றால், காவிரி நீர் கடலில் புகுகின்ற இடம் என்பதாகும். "பூம்புகார்' என்றால், பொலிவினையுடைய புகுகின்ற இடம் என்பது பொருளாகும். இச்சொல் முதலில் சிலப்பதிகாரத்திலே பயின்று வந்துள்ளது (சிலம்பு.1:10).
 பூம்புகாரிலிருந்து மேற்குப் பக்கத்தில் சுமார் மூன்று கி.மீ. தொலைவிலும் "திருச்சாய்க்காடு' என்று சங்க இலக்கியத்தில் வழங்கப்படுகின்ற "சாயாவனம்' என்னும் கோயிலின் அருகின் தென் புறத்திலும் பெண் வடிவில் இத்தெய்வமும், அது அமைந்துள்ள கோயிலும் பழுதடைந்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது.
 "சம்பாபதி' என்று வழங்குவதால் இது பெண் தெய்வமாக இருக்க முடியாது; "பதி' என்பது, ஆண் தெய்வத்தையே குறிப்பது. லட்சுமிபதி, வேங்கடாஜலபதி, கணபதி என்றும்; பெண் தெய்வத்தினைக் குறிக்க "வதி' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது - குணவதி, பார்வதி, பத்மாவதி, பகவதி என்றும் சான்றுகளைக் காட்டி, "சம்பாபதி' என்பது ஆண் தெய்வமாகவே இருந்திருக்க வேண்டும் என்று துணிகின்றார் கல்வெட்டறிஞர் முத்துச்சாமி.
 சம்பாபதியின் சிலைகள் மற்றும் கோயில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 - சரவண சுந்தரமூர்த்தி
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்