செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

இந்த வாரம் கலாரசிகன்

DIN | Published: 09th June 2019 01:32 AM

ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டுக்கு மயிலாடுதுறையிலிருந்து நாகூருக்குக் கவிஞர் யுகபாரதி, முனைவர் ஹாஜாகனி, எங்கள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஈகைப் பெருநாள் மலரைத் தயாரித்த சர்ஃப்ராஸ் மூவருடனும் காரில் பயணித்தபோது, நாங்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள் ஏராளம்... ஏராளம்...
 தோழர் மணலி கந்தசாமி பற்றிப் பேசத்தொடங்கி, தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தையும், அந்த இயக்கம் உருவாக்கிய தலைசிறந்த ஆளுமைகள் பற்றியும் நானும் கவிஞர் யுகபாரதியும் பரிமாறிக்கொண்ட செய்திகள் முனைவர் ஹாஜாகனிக்கும், சர்ஃப்ராஸுக்கும் புதியதாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்திருக்கக்கூடும்.
 சாதாரணமான செய்திகளையும், சம்பவங்களையும்கூட மிகைப்படுத்தி ஆவணப்படுத்தும் திராவிட இயக்கங்களின் அதிபுத்திசாலித்தனம், தமிழக தேசிய இயக்கத்தினருக்கு இல்லாமல் போனது துரதிருஷ்டம். எவ்வளவு பெரிய தலைவர்கள், எத்தனை எத்தனை ஆளுமைகள், எத்துணை தியாகங்கள், அடேயப்பா...! சட்டப்பேரவை, மக்களவைப் பிரதிநிதித்துவத்துக்காகத் தங்களது தன்மானத்தை மட்டுமல்ல, அவர்களது வரலாற்றையே அல்லவா திராவிடக் கட்சிகளின் காலடியில் தேசியக் கட்சிகள் அடமானம்
 வைத்திருக்கின்றன.
 தோழர் ஜீவபாரதிக்கு ஒரு வேண்டுகோள். தமிழகப் பொதுவுடைமை இயக்க வரலாற்றை அவர் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் அந்தக் கட்சிகளிலிருந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்புள்ள ஆளுமைகளை அந்தத் தொகுப்பில், இன்றைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
 
 இயக்குநர் திலகத்தாலும் (கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்), இயக்குநர் சிகரத்தாலும் (கே.பாலசந்தர்) தலைசிறந்த கதாசிரியர், வசனகர்த்தா என்று அடையாளம் காணப்பட்ட அற்புதமான ஆளுமை எம்.எஸ்.பெருமாள். நிரந்தர அரசுப் பணியில் சேராமல் தன்னை முழுமையாகக் கலைத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், ஒருவேளை என் பெருமதிப்பிற்குரிய ஐயா சுகி.சிவத்தை எம்.எஸ். பெருமாளின் இளவல் என்றுதான் குறிப்பிட்டிருப்பார்கள்.
 அகவை 73-இல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் எம்.எஸ்.பெருமாள் ஏறத்தாழ 58 ஆண்டுகள் ஊடகவியலாளராக வலம்வந்து கொண்டிருப்பவர்.
 சுகி.சுப்பிரமணியம் என்கிற ஜாம்பவானுக்குப் பிறந்த ஜாம்பவான்.
 அகில இந்திய வானொலி நிலையத்துடனும், தொலைக்காட்சி நிலையத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டுவிட்ட எம்.எஸ்.பெருமாளின் கற்பனையின் திரை வடிவம்தான் 1974 தீபாவளி அன்று வெளியான "அவள் ஒரு தொடர்கதை'. அந்தக் கதை திரைப்படம் ஆனதன் பின்னணியில் ஒரு சுவாரசியம் இருக்கிறது.
 கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்' திரைப்படம் வெளியானபோது, "கணையாழி' இதழில் அந்தத் திரைப்படம் குறித்து அகிலன் கண்ணன் விமர்சனம் எழுதுகிறார். அதில், ஜெயகாந்தனின் "பிரம்மோபதேசம்' குறுநாவலையும், எம்.எஸ்.பெருமாளின் சிறுகதையையும் அந்தத் திரைப்படம் நினைவுபடுத்துவதாகக் குறிப்பிடுகிறார். ஆனால், எந்தச் சிறுகதை என்று குறிப்பிடவில்லை.
 1972 மார்ச் மாதம் "கலைமகள்' இதழில் வெளியான எம்.எஸ்.பெருமாளின் குறுநாவல் "வாழ்க்கை அழைக்கிறது'. அகிலன் கண்ணனின் விமர்சனம் கே.பாலசந்தரை அந்தக் குறுநாவலைத் தேடிப்பிடித்துப் படிக்க வைக்கிறது. விளைவு, பல்வேறு மாற்றங்களைக் கண்டு அந்தக் குறுநாவல் "அவள் ஒரு தொடர்கதை'யாக வெள்ளித்திரையில் தனி முத்திரை பதிக்கிறது.
 எம்.எஸ்.பெருமாள் சென்னை வானொலியிலும், தொலைக்காட்சி நிலையத்திலும் செய்து காட்டியிருக்கும் அற்புதங்கள் ஏராளம். வானொலி நாடகங்கள் என்பவை அவ்வளவு எளிதானதல்ல. அவற்றுக்கு எழுத்து வடிவமும் கிடையாது. ஒளி வடிவமும் கிடையாது. ஓவிய இணைப்பும் கிடையாது. உணர்ச்சியையும், பாவங்களையும் வசனங்கள் மூலமாகவும், வசன உச்சரிப்பின் மூலமாகவும் வெளிப்படுத்தி, நேயர்களைக் கட்டிப்போடும் அசாத்திய திறமை இருந்தால் மட்டுமே அவை வெற்றியடைய முடியும்.
 எம்.எஸ்.பெருமாளின் "காப்புக்கட்டிச் சத்திரம்', "ஜனதா நகர்' போன்ற தொடர்கள் எனது பள்ளி நாள்களில், வானொலிப் பெட்டியின் முன்னால் குடும்பத்தினருடன் அமர்ந்து ஆர்வத்துடன் கேட்டு ரசித்தவை. நான் மட்டுமா? ஒட்டுமொத்த தமிழகமே ரசித்த வானொலி நாடகங்கள் அவை.
 ஏறத்தாழ 60 ஆண்டுகால வாழ்க்கை அனுபவத்தில் எம்.எஸ்.பெருமாள் நெருங்கிப் பழகிய ஏழு ஆளுமைகள் குறித்த தனது அனுபவங்களை "சிகரங்களுடன் நான்...' என்கிற பெயரில் தொகுப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். டாக்டர்
 சீர்காழி கோவிந்தராஜன், நடிகையர் திலகம் சாவித்திரி, இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சென்னைத் தொலைக்காட்சியின் முதல் இயக்குநர் சி.ஆர்.முரளிதரன், மனோரமா, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் ஆகிய ஏழு பேர் குறித்து அவர் பதிவு செய்திருக்கும் சுவாரசியமான சம்பவங்களை அந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து ரசிக்க வேண்டும்.
 சாவித்திரி குறித்த பதிவு பல இடங்களில் நெகிழ வைக்கிறது. மனோரமா குறித்த செய்திகள் வியக்க வைக்கின்றன. கே.எஸ்.ஜி. குறித்தும் , கே.பாலசந்தர் குறித்துமான அவரது அனுபவங்கள், அந்த ஆளுமைகளின் தனித்துவத்தை எடுத்துரைக்
 கின்றன.
 அண்ணனின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பவர் தம்பி சுகி.சிவம். ""எம்.எஸ்.பெருமாள் புத்தகத்துக்கு நான் எப்படி முன்னுரை எழுத முடியும்?அவர்தான் எனக்கு முன்னுரை'' என்கிற சுகி.சிவத்தின் பதிவை மிகவும் ரசித்தேன்.
 
 கவிஞர் எழில் என்பவரின் கவிதை இந்த மாத "கணையாழி' இதழில் வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு, "கைநாட்டுக் கவிதை'. அந்தக் கவிதையின் சுருக்கம் இது:
 பேனா முனையைக்
 கட்டைவிரலில் தேய்த்துக்
 கைநாட்டுப் பதிப்பார்
 அப்பா
 ஊருக்கே நாட்டாண்மை
 தாத்தா கூட
 கட்டை வண்டி மசையைக்
 கட்டைவிரலில் பிரட்டித்தான்
 உருட்டுவார்;
 என்னைக்
 கான்வென்ட்டில்
 படிக்க வைத்தார்கள்
 இருந்தும் என்ன?
 தினமும் இரண்டு முறை
 கைநாட்டு வைக்கிறேன்
 பயோமெட்ரிக்கில்!
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்