நீரினும் இனிய சாயலன்!

தனக்கு ஒப்பாய்த் தனியொருவன் இல்லாத வேள்பாரியை நினைக்கும் போதெல்லாம் கவிதைத் தேனூறி நிற்கும்போல, குறிஞ்சிக் கபிலருக்கு. 
நீரினும் இனிய சாயலன்!

தனக்கு ஒப்பாய்த் தனியொருவன் இல்லாத வேள்பாரியை நினைக்கும் போதெல்லாம் கவிதைத் தேனூறி நிற்கும்போல, குறிஞ்சிக் கபிலருக்கு. 

அகத்திணை சார்ந்த நற்றிணை முதற் பாடலில், கபிலரே தலைவியாய்ப் புனைவுகொண்டு, வள்ளல்பாரியைத் தலைவனாய் மனக்கொண்டு "எழுதியது'தானோ என எண்ணும்படியாய் இனிக்கும் பாடல்தான் "நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்!' இவ்வாறு தொடங்கும் அப்பாடலில், ஒரு காட்சி உவமையாக மலர்கிறது; அது தாமரையாகிறது. தாழ்ந்த நிலத்துக் கயத்தில் பூத்த தாமரையை வண்டு கண்டு, அதன் தண்தாது ஊதிச் சேகரித்த தேனை வாய்தனில் நிரப்பி, மேலே பறக்கிறது. மணம் பரப்பி இழுக்கும் மலைச்சிகரத்துச் சந்தனமரத்தின் கிளையில் தேனடை அமைத்து, அதனில் சேர்க்கிறது. பறம்புமலையில் கபிலர் கண்ட காட்சி,  "தாமரைத் தண்தாதுஊதி' என பாரி- கபிலர் நட்பின் சாட்சியாகப் பாடலில் விரிகிறது. 

இன்னொரு உவமையையும் கவிமனம் கொண்டுவந்து சேர்க்கிறது. "நீர்இன்றி அமையா உலகம் போல' அவனின்றித் தான் இல்லை எனும் அகத்திணை மரபில் தலைவியின் மனஉணர்வினைத் தேன் தமிழில் குழைத்துக் கொடுக்கிறார் கபிலர். கூடவே, பாரியின் இயல்பையும் சிறப்பையும் எடுத்துமொழிகிறார்.

வாரி வழங்கும் பாரியை நினைக்கும்போதெல்லாம் வானின்று வழங்கும் மாரியின் தண்மை (புறம்-107) கபிலருக்குள். அகப்பாடலான முதற்பாடலுக்கும், புறப்பாடலான இப்பாடலுக்கும் இடையே, இயற்கை சார்ந்த அறிவியல் உண்மையை நுட்பமாகச் சித்தரிக்கிறார். வெகு உயரத்தில் நின்று பூமியைப் பார்க்க, அது தாமரை போலவும், அலைகடல் அதனில் சுரக்கும் தேன் போலவும், அதில் முடிந்த அளவு முகந்துமீளும் மேகம் வண்டுபோலவும், திரண்ட கார்மேகக் கூட்டம், சந்தன மரக்கிளை போலவும் தோன்றுகின்றன. அந்தக் கணத்தில், கவிதை மின்னலாய் வெட்ட, இடியிடித்துக் கபிலரின் மனதுக்குள் பாமழை பொழியத் தொடங்கிய அழகைக் குறிஞ்சிப் பாட்டில் காணலாம்.

நிறைஇரும் பெளவம் குறைபட முகந்துகொண்டு,
அகல்இரு வானத்து வீசுவளி கலாவலின்,
முரசுஅதிர்ந்தன்ன இன்குரல் ஏற்றொடு,
நிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி,
இன்னிசை முரசின், சுடர்ப்பூண், சேஎய்,
ஒன்னார்க்கு ஏந்திய இலங்குஇலை எஃகின்,
மின்மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென
(கு.பா.47-53)

மழை பொழிகிறது. அது அருவியாய் இறங்கி, மண்ணில் பெருகும் தண்ணீராய் நிறைகிறது. மன்னுயிர்க்கெல்லாம் தன்னுயிர் தருகிற நன்னீர், மன்னரைப் போல் ஆவதால், பாரிவேள், "நீரினும் இனிய சாயலன்' ஆகிவிடுகிறான். வான் பொய்க்கினும் தான் பொய்க்காத பேரருவி, பறம்புமலையில் இருப்பதனால், வற்றாத வளம் அம்மலைக்கு; வள்ளண்மை பாரிக்கு. 

அவன் மலை, உழவர் உழாதன நான்கு பயன் உடையது. 1.மூங்கில் நெல். 2. சுளைபல தரும் பலா, 3. வள்ளிக்கிழங்கு, 4.தேன். அதனால்தான், வாள்நுதல் விறலியைப் பார்த்து, 

"சேயிழை பெறுகுவை' எனப் பாடுகிறார் கபிலர். மழையானது, 
"பெய்யினும் பெய்யாதாயினும், அருவி
கொள்உழு வியன்புலத்து உழை கால் ஆக,
மால்புடை நெடுவரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயற் பாரிவேள்பால் பாடினை செலினே" 
(புறம்-105)

என விறலியை ஆற்றுப்படுத்துகிறார்.  ஆனால், இப்போது  அவை எல்லாமும் அருகிப்போயின. கபிலராய்க் கலங்கும் (புறம்-118) நம் மனத்துயர் மாற்ற மீளவும் வருவானா, நீரினும் இனிய சாயற் பாரிவேள்? "கரையுயரக் கவியுயரும்'; வருவான் பாரி, வான்மழையாய்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com