சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

உயிர்த்தெழுவாயாக!

DIN | Published: 14th July 2019 12:40 AM

சுப்ரதீபக் கவிராயர் என்பவரின் பாடல்கள் "தனிப்பாடல் திரட்டில்' இடம்பெற்றுள்ளன. அவர் "குன்னரங்கன்' எனும் அரசன் காலமானபோது, மனமுருகி இவ்வாறு பாடுகிறார்:
 தென்னரங்கன் அரங்கனென்பார் வாய்திறவான்
 கண்விழியான் திரும்பிப் பாரான்
 என்னரங்கன் துங்கரங்கன் ஏழையர்பாற்
 கருணையுடன் இரங்கா ரங்கன்
 மன்னரங்கன் தமிழ்ப்பெருமான் மழவரங்கன்
 அளித்தருளும் மைந்த னான
 குன்னரங்கா எனக்கிரங்காய் கொண்டுவந்த
 தமிழ்க்கிரங்கிக் குழைந்து எழாயே! (பா.1)
 "அழகிய ஸ்ரீரங்கத்திலுள்ள பெருமாளை சபைக்கு அதிபதி என்பார்கள். அவன் பேசமாட்டான்; கண்ணைத் திறந்து பார்க்கமாட்டான்; தான் பார்க்கும் திசையிலிருந்து மாறிப் பார்க்கமாட்டான்; அவன் எத்தன்மையான அரங்கனென்றால், துயில்கின்ற அரங்கன். எளியவர்களிடத்துத் தயவு வைத்து இரக்கம் காட்டாத அரங்கநாதன். அரசர்களைத் தனக்கு உறுப்பாக உடையவனான தமிழுக்குத் தலைவனான, மழவரங்க பூபதி பெற்ற மகனாகிய குன்னரங்கனே! என்பால் கருணை வையாவிடினும், நானியற்றிக் கொணர்ந்த தமிழ்ப் பாட்டிற்கு இரக்கம் வைத்து, மனமுருகி உயிர்த்தெழுவாயாக!' என்கிறார்.
 அரசனை உயிர்த்தெழச் சொல்லிப் பாடியவர், இன்னொரு பாடலில் இறைவனுக்காக இரக்கப்பட்டுப் பாடுகிறார். அல்லும் பகலும் திருவம்பத்தில் அனவரத தாண்டவமாடும் நடராஜப் பெருமான் படும் துன்பத்தை இப்புலவரால் தாங்கமுடியவில்லை! அதனால், இவ்வாறு பாடி உருகுகிறார்!
 "பெருமானே... புகழ்ச்சி பொருந்திய நாடோறும் வரம் கொடுப்பவனே! திருத்தில்லையில் திருநடனம் செய்யும் பெருமானே! நீ எக்காலத்தும் ஆடிக்கொண்டிருந்தால்... உமது தூக்கிய திருவடியானது வருந்தாதா? பொல்லாத முயலகனை மிதித்தழுத்திய உன் பாதமும்தான் தளர்ந்து போகாதா?' என்று இறைவனுக்காக இரக்கப்படுகிறார் புலவர்.
 தூக்கியதால் நோகாதோ துட்டமுய லகன்மேல்
 தாக்கியகா றானுஞ் சலியாதோ - வாக்கார்
 தினவரதா தில்லைத் திருத்தாண்ட வாநீ
 அனவரதங் கூத்தாடி னால்! (பா.9)
 - ஸ்ரீவித்யா சந்திரமெளலி
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
இறைவனுக்கே கண்ணேறு கழித்தவர்!
கடற்கரைக் காதல்
நப்பின்னையைப் புறக்கணித்தது ஏன்?
பஞ்சரத்தினம் இயற்றிய மகாராணி!