சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

வான் பெய்து வாழ்த்துமடி!

DIN | Published: 07th July 2019 03:33 AM

தலைவனைப் பிரிந்த வருத்தத்தில் தலைவி இருக்கிறாள். அப்போது தோழி, தலைவியிடம் பேசுகிறாள். "அகல் நிலவாக ஒளிவீசும் ஆயிழையே! அருமைத் தலைவியே! ஏன் நீ பகல் நிலவாகப் பாங்கிழந்தாய்? சஞ்சலம் தவிர்ப்பாயாக! நின்னைப் பிரிந்து பொருளீட்டும் பொருட்டு நெடுந்தூரம் சென்ற தலைவர் வரும் நேரம் நெருங்கிவிட்டது.
 மூங்கில் காட்டு வெண்ணெல்லை வயிறு புடைக்கத் தின்ற முறக்காது உடைய யானைகள் வருகின்றன. அவை நிரம்ப வரிகள் கொண்ட நெற்றியோடு, நல்ல குளிர்ச்சியும் நறுமணமும்மிக்க மலைச் சாரலில் ஓங்கி வளர்ந்த சந்தன மரங்களின் நிழலில் உறங்கத் தொடங்கிவிட்டன.
 அச்சம் தரும் அகன்ற இடத்தில் வெள்ளம் நிரம்பிய சுனைநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பெருமலை அடுக்கில் அருவிகள் ஆரவாரிக்கின்றன. கற்களைப் புரட்டும் காட்டாற்று வெள்ளம் கரை புரளும்; மூங்கிற் காட்டையும் மோதிப் பாய்ந்தோடும்.
 காதல் தலைவன் குறித்துச் சென்ற கார்காலம் கண்முன்னே தெரிகிறது. என்னுயிர்த் தலைவியே! ஏதத்தை நெஞ்சிலிருந்தே எடுத்தெறிந்திடுவாய். மணநாளை எண்ணியே மகிழ்ச்சி கொண்டிரு. முழங்கும் இடியோசை முரசு கொட்டிடும்; வானம் பெய்து வாழ்த்து வழங்கும்''. நல்வெள்ளியார் எனும் புலவர் இயற்றிய நற்றிணைப் பாடல் இது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வருணனை மழைக்காலத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
 "சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்
 பெருவரை அடுக்கத்து அருவி யார்ப்பக்
 கல்லலைத்து இழிதரும் கடுவரல் கான்யாற்றுக்
 கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத்
 தழங்குரல் ஏறொடு முழங்கி வானம்
 இன்னே பெய்ய மின்னுமால் - தோழி!
 வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை
 தண்ணறும் சிலம்பில் துஞ்சும்சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே' (நற்.பா.7)
 -எம். வெங்கடேசபாரதி
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
இறைவனுக்கே கண்ணேறு கழித்தவர்!
கடற்கரைக் காதல்
நப்பின்னையைப் புறக்கணித்தது ஏன்?
பஞ்சரத்தினம் இயற்றிய மகாராணி!