"மா'த் தமிழ் இன்பம்!

எண்ண எண்ண ஈடில்லா இன்பம் தரும்; சொல்லச் சொல்ல சுவை யாவும் அள்ளித் தரும் நம் வண்ணத் தமிழில் எத்தனை எத்தனையோ தித்திப்புகள்;

எண்ண எண்ண ஈடில்லா இன்பம் தரும்; சொல்லச் சொல்ல சுவை யாவும் அள்ளித் தரும் நம் வண்ணத் தமிழில் எத்தனை எத்தனையோ தித்திப்புகள்; தீங்கனிச் சாறுகள்; இனிப்பு நயங்கள்; எழிலான தேனடைகள்; அணிநலன்கள்; அழகுச் சிலிர்ப்புகள்; நகைச்சுவை விருந்துகள்; சிந்தனையின் சுவை ஊற்றுகள்.
அங்கும் இங்குமின்றி எங்கெங்கும் தங்கு தடையின்றி ஒவ்வோர் எழுத்திலும், சொல்லிலும், சொற்றொடரிலும், தொடர் மொழியிலும் விரிந்தும், பரந்தும், மறைந்தும், நிறைந்தும், சிறந்தும் கிடக்கின்றன; இவ்வின்பப் பெருக்கைச் சான்றோர்களின் உரைகளிலும், பாடல்களிலும் கண்டு இன்புறலாம்.
இதனாலன்றோ ""இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'' என்று தமிழ்விடு தூது ஆசிரியரும்; ""மங்கை ஒருத்தி தரும் இன்பம், என் மாத்தமிழுக்கு ஈடாமோ'' என்று பாவேந்தரும்;  ""தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல் தான் வீழ்வேன், தனியேனாய் நின்றாலும் என் கொள்கை மாறேன்''  என்று பெருஞ்சித்திரனாரும் முழங்கினர் போலும்!
கொஞ்சு தமிழ் பாடிய சான்றோர் பலருள்ளும், குமுகாய நலனுக்கே சமயத்தைப் புகுத்தி, புதுக்கிப் புரட்சி செய்த வெள்ளாடைத் துறவியார்; கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகப் பாடிய அரும்பாவலர்; பகுத்தறிவு ஒளியை முதன்முதல் ஏற்றிய  வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளார் ஆவார். அவர் பாடிய "திருவருட்பா' தொகுதியில் "வெறிவிலக்கு' 
எனும் பகுதியில் வரும் பாடலில், ஒரே எழுத்தை 19 இடங்களில் பெய்து இலக்கியத் தமிழின்பம் தருகிறார்.
தலைவி ஒருத்தி,  தன் தலைவனுடன் மையல் கொள்கிறாள்; அவளைக் காதல் நோய் வருத்துகிறது. ஊரில் அலர் தூற்றப்பெறுகிறது; பழிச்சொற்கள் பலராலும் பேசப்பெறுகின்றன. இதனை மாற்ற காளி தேவிக்கு ஆடு ஒன்றை வெட்டி, பூசை நடத்த வேலனால் முயற்சி மேற்கொள்ளப்பெறுகிறது. இந்நிலை எண்ணி வருந்திய வள்ளலார் உள்ளம் பேசுகிறது... பாருங்கள்!
"என்ன வியப்பு! இந்த ஆடு உங்களை இந்தப் பிறவியில் என்ன செய்தது?  தாயே! மன்மதன் இதைக் கண்டு அஞ்சுவானா? (5 மா); அதனால் இவள் துன்பம் ஆறுமா? (6 மா); இந்த முயற்சிகள் தலைவனுக்கு எட்டுமா? (8 மா); இத்தகைய பொருள் அமைந்த பாடல் இதுதான்:
(1) இம்மை யறையனைய (2) வேசூர (3) மாதருமா
(4) இம்மையுமை (5) யிம்மையையோ
வென்செய்த- (6) தம்மைமதன்
(7) மாமாமா  மாமா(8)மா மாமாமா மாமாமா(9)
மாமாமா மாமாமா மா.
குறிப்பு: (1) இம்மையல் + தையல் + நைய; (2) ஏசு + ஊர; (3) மாதரும் + ஆ
(4) இம்+மை (ஆடு) உமை;  (5) இம்மை + ஐயோ; (6) அம்மை + மதன்
(7) 5 மா (அஞ்சுமா); (8) 6 மா (ஆறுமா ); (9) 8 மா (எட்டுமா) (5+6+8 = கூடுதல் 19 மா).
எப்படிச் சுவை தருகிறது பார்த்தீர்களா? "தெய்வத்தின் பெயரால் உயிர்ப் பலி செய்தல் கூடாது; இதனால் எப்பயனும் இல்லை' என்கிற தம் கருத்தை யாப்பில், சிறந்த நேரிசை வெண்பாவின் வழி எவ்வளவு நேர்த்தியாக மனித குலத்திற்கு நினைவூட்டியுள்ளார்.
தித்திக்கும் தெள்ளுதமிழ் கற்ற வித்தகு திருவருட்பா தந்த வள்ளலாரின் உள்ளம் வழி பெற்ற "மா'த் தமிழ் இன்பத்தை நாமும் மாந்தி மகிழ்வுறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com