"மதியம்' எனும் சொல்லாட்சி!

"மதியம்' என்ற சொல்லாட்சி இரு பொருள்களில் பயன்பட்டு வருகிறது.  மதியம் - பகல் நேரத்தின் நடுப்பகுதி. அதாவது, சூரியன் உச்சிக்கு வரும் நேரம் - நண்பகல் என்று ஒரு பொருளிலும்;  நிலா, சந்திரன் என்று ஒரு பொருளிலும்

"மதியம்' என்ற சொல்லாட்சி இரு பொருள்களில் பயன்பட்டு வருகிறது.  மதியம் - பகல் நேரத்தின் நடுப்பகுதி. அதாவது, சூரியன் உச்சிக்கு வரும் நேரம் - நண்பகல் என்று ஒரு பொருளிலும்;  நிலா, சந்திரன் என்று ஒரு பொருளிலும் வழங்கி வருகின்றது. ஆனால், சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களை நோக்கும்போது, "மதியம்' என்ற சொல் நிலவைக் குறிப்பதாகவே வந்துள்ளது.
திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில், "மாசில் வீணையும் மாலை மதியமும்' என்று மாலையில் (இரவில்) தோன்றும் முழுமதியையே குறிப்பிடுகின்றார்.
இளங்கோவடிகள், "வானூர் மதியம் சகடணைய வானத்து...' (சிலம்பு: மங்கல 5-7) என்று வானத்தில் ஊர்கின்ற முழுமதியையே மதியம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.
பிசிராந்தையார், "கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்...' (புறம்: 67) என்று கோப்பெருஞ்சோழனை போற்றிப் பாடும் பாடலில், "கோடு கூடு மதியம்' என்ற சொல்லாட்சியில் இரு பக்கமும் வந்து பொருந்திய நிறை மதியையே - நிலவையே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது.
சேந்தன்பூதன் என்கிற புலவர் பெண் ஒருத்தியின் அழகினை வருணிக்கும் போது, "பிறையென மதியம் குறுஉ  நுதலும்... ' (குறுந். 226 1-3) என்று பெண்ணின் நெற்றிக்கு நிலவின் பிறையை உவமித்துக் குறிப்பிட்டுள்ளார்.
பரிபாடலில்,
"விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரி, சடை எழில் வேழம், தலையெனக் கீழிருந்து' 
என்றும்,
"மதியம் மறைய, வருநாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரைவரைக் கீறி' (பரி.11)
என்றும், "மதியம்' என்ற சொல்லாட்சி பயன்று வருகிறது. அகநானூற்றில், "வைகுநிலை மதியம் போல' (அகம். 299. 11-12) என்ற பாடலில் மதியம் பயன்று வருதலைக் காணலாம். புறநானூற்றில்  புலவர் பெருந்தலைச் சாத்தனார் பாடலில், "வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர' (புறம். 294: 1-2) என மதியம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை காணலாம்.
புலவர் வேளாதத்தன் என்பார், 
"எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு' என்று வரைவிடை வேறுபடுதலைத் தோழிக்குக் கிழத்தி உரைக்கும் வண்ணம் பாடியது நோக்கத்தக்கது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் என்கிற புலவர்,  "தண்டா வீகைத் தகைமாண் குடுமி/ தண்
கதிர் மதியம் போலவும்' (புறம் 6: 27-30) என்று பாடும்போது தண்கதிர் மதியம் போல என்ற சொல்லாட்சியைக் குறிப்பிடுகின்றார்.
அருணகிரிநாதர்,  "சீத மதியம் எறிக்குந் தழலாலே' என்று இசையுடன் பாடும்போது, மதியம் என்ற சொல்லைக் குறிப்
பிட்டுள்ளார்.
இலக்கிய வழக்கில் மதியம் என்பது நிலவைக் குறிக்கிறது பேச்சு வழக்கில் பயன்படுத்தும்போது "மதியம்' என்பது நண்பகலையே குறிக்கிறது கவனத்திற் கொள்ளத்தக்கது.
"மத்தியானம்' என்ற வடமொழிச் சொல்லாகவே பெரும்பாலும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com