கம்பர் காட்டும் மண விலக்கும்... மறு விலக்கும் ! 

இன்பத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று திருக்குறள் அமைப்பு முறையைத் தலைகீழாக மாற்றி,  அறிஞர் மு.வ. "வாழ்க்கை விளக்கம்' எனும் நூலை எழுதினார்.
கம்பர் காட்டும் மண விலக்கும்... மறு விலக்கும் ! 

இன்பத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று திருக்குறள் அமைப்பு முறையைத் தலைகீழாக மாற்றி,  அறிஞர் மு.வ. "வாழ்க்கை விளக்கம்' எனும் நூலை எழுதினார்.
""இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு'' என்று களவியலின் (தொல்.பொருள்) முதல் நூற்பாவில் , இன்பம், பொருள், அறம் என்று தொல்காப்பியர் வரிசைப்படுத்தியதை மு.வ. இதற்கு சான்றாக எடுத்துக் கொண்டார். இன்பத்துப் பாலில் களவில் தொடங்கிய காதல், கற்பியலில் திருமணத்தில் 
முடியும்.
தலைவனும், தலைவியும் எதிரெதிராகக் கண்டு, உருகி, காதல் கொண்டு பழகக் காரணம் பாலுணர்வுக் கவர்ச்சி இல்லை; ஒன்றி உயர்ந்த பாலான, விதியே ஆண் - பெண்ணைக் காண வைத்து, கணவன் - மனைவி ஆக்குகிறது.
""ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழவியும் காண்ப'' எனத் தொல்காப்பியர் (கள-பா3) இருவரையும் "ஊழாகிய விதியே சேர்க்கிறது' என்கிறார். 
கற்பியலில் மறையோர் ஏத்தும், பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய எட்டு வகை திருமணத்தில் காந்தர்வத் திருமணம் நடக்கிறது. தேடித் தேடி, ஓடி ஓடி, காதலர்கள் களவில் கூடி, கற்பில் திருமணம் முடிக்கின்றனர். அவ்வளவுதான், திருமணம் முடித்து காதலன் கணவனாக, காதலி மனைவியாக ஆனதும் கூடல் மறைந்து ஊடல்  தொடங்கிவிடுகிறது. ""புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய'' - இல்லத் தலைவியின் பொய்க் கோபமும், பிணக்கமும் தலைவனைத் தடுமாற வைக்கிறது. 
புலவி-  ஊடல் - துனி - மணவிலக்கு:
காதலர் கருத்து வேறுபாடுகளை அளவிட்டால், சிறுசினம், பொய்ச் சினத்தை "புலவி' என்றும், "புலவி' அதிகமாகி மெய்ச்சினமாகி செயலால் பிரிந்தால் "ஊடல்' என்றும், "ஊடல்' அதிகமாகி எல்லை கடந்தால்  "துனி' எனவும் கூறலாம். "துனியும்' துளி எல்லை மீறினால் மணவிலக்கு நேரலாம்.
"விவாகரத்து' எனும் மணவிலக்கு பற்றி தொல்காப்பியம், திருக்குறள் எதுவுமே பேசவில்லை. திருக்குறள் அதிகாரம் 131புலவி, 132 புலவிநுணுக்கம், 133 ஊடல் உவகையுடன் முடிகிறது. "புலவி'யை  2 இடங்களிலும், "துனி' யை 8 இடங்களிலும், "ஊடல்' பற்றி 18 இடங்களிலும்  திருவள்ளுவர் பேசியுள்ளார்.
""ஊடலில் தோன்றும் சிறு துனி'' (குறள் 1322); ""துனியும் புலவியும் இல்லாயின் காமம், கனியும் கருக்காயும் அற்று'' (குறள் 1306);  ""உப்பு அமைந் தற்றால் புலவி'' (குறள்-1302).  சோற்றில் உப்பு அளவுக்கே ஊடலும் புலவியும் இருக்க வேண்டும் என்கிறார். 
""ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்'' (குறள்-1327).
ஊடலில் தோற்றவர் கூடலில் வென்றுவிடுவார் என்று கணவன் - மனைவி பிணக்கை சமரசம் செய்து "ஊடல் முடிவில் உவகை' என்று ஊடலுவகையுடன்  திருவள்ளுவர் திருக்குறளை இனிதே முடித்தார். அதற்கு மேலும் சென்று, பிரிந்து தமிழர் மணவிலக்குப் பெறவில்லை. விவாகரத்தினை கம்பரே முதன்
முதலாகக் காட்டியுள்ளார்.
தயரதன் தன் மனைவி கைகேயியை "இவள் என் தாரம்  அல்லள்; இவள் மகன் பரதனும் எனக்கு இனி மகன் இல்லை' என்று கூறி விவாகரத்தை - "மணவிலக்கை' அரண்மனையில் பலர் முன்பாக 
அறிவிக்கிறார்.
மரண வாக்குமூலத்தை நீதிபதிகள், அதிகாரிகள் முன்பாகத் தந்தால்தான் செல்லுபடியாகும். அதுபோல, இந்த மண விலக்கை குலகுரு வசிஷ்டர் மற்ற அரசு அதிகாரிகள் முன்பாக அறிவிக்கிறார்.
"சொன்னேன் இன்றே, இவள்
என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அப்பரதன்
தனையும் மகன் என்று
உன்னேன்! முனிவா! அவனும் 
ஆகான் உரிமைக்கு என்றார்''  
(அயோ.1654)
தயரதன் கைகேயியை விவாகரத்து செய்து, பரதனை விலக்கி வைத்தார். தயரதன் சட்டப்பூர்வமாக இதை செய்ததால் பரதன் தன் தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை. "இவள் கைகேயி என் தாரம் அல்லள்' என்று மட்டும் கூறி
யிருந்தால் வெறுப்பில், விரக்தியில் கூறியதாய்க் கொள்வர். ஆனால், "துறந்தேன்' என்று மணவிலக்கு தந்துவிடுகிறார்.
ஊடல், புலவி, துனியின் உச்சத்தில் நின்று கைகேயி இரு வரங்களை தயரதனிடம் கேட்டாள். மாமன்னன் தயரதன் கைகேயி பாதங்களில் விழுந்து வணங்கி "பரதனுக்கு நாடு கொடு, ஆனால் ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிடாதே' என்று அழுது கெஞ்சினார்.
"மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையும் காலைப் புலவியுள் உரிய' 
 (தொல்.பொருள். 223)
மனைவியின் காலில் கணவன் விழுவது புலவி காலத்திற்குரியது என்றார் தொல்காப்பியர். பத்து திசைகளிலும் தேர் செலுத்தி வென்ற தயரதன், மனைவி கைகேயியிடம் தோற்றுப் புலவியில் விழுந்தார். ஊடல், புலவி, துனி என்ற பிணக்கின் எல்லைகள் கணக்கின்றிச் சென்றதால் "மணவிலக்கு' 
நேர்ந்தது.
தமிழரின் வாழ்வுக்குப் பொருளிலக்கணம் வகுத்த தொல்காப்பியர், கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகளுக்கு முடிவாக "மணவிலக்கு' என்கிற தீர்வைக் காட்டவே இல்லை. பழந்தமிழ்ச் சமுதாயத்தில் காதலர்கள் கூடியும், ஊடியும், பிரிந்தும், சேர்ந்தும் வாழ்ந்தனரே அன்றி, நிரந்தரமாகப் பிரியும் விவாகரத்து எனும் "மணவிலக்கு' அன்று இல்லவே இல்லை.
கம்பருக்கு வான்மீகத்தை மொழிபெயர்க்கும்போது "மணவிலக்கு' பற்றிப் பாடும் அவசியம் நேர்ந்தது. இதற்குத் தீர்வாக விவாகரத்து செய்த கைகேயியையும், பரதனையும் மன்னித்து மீண்டும் ஏற்குமாறு ராமர் வேண்டுகிறார்.
ராமனது கருணைக்கும், மன்னிக்கும் குணத்திற்கும் எடுத்துக்காட்டான இந்த வேண்டுகோளை ஏற்று, இறுதியில் தேவ வடிவில் வந்த தயரதன் "மணவிலக்கை' மறுவிலக்கு செய்து மீண்டும் கைகேயியை மனைவியாகவும், பரதனை மகனாகவும் ஏற்கின்றார்.
யுத்தகாண்டத்தின் மீட்சிப் படலத்தில் மறைந்த தயரதன் தேவ வடிவில் ராமன் முன் வருகிறார். தெய்வ உருவில் நிற்கும் தயரதனிடம் "நீங்கள் தீயள் எனத் துறந்த என் தெய்வமும், மகனும், தாயும், தம்பியும் ஆகும் வரம் தருக!' (கம்ப.10079) என்று ராமர் 
வேண்டுகிறார்.
தனக்குக் கெடுதல் செய்து, காட்டுக்குத் துரத்திய சிற்றன்னையை தெய்வம் என்று போற்றியதால், உயிரினம் யாவும் ஆர்த்து எழுந்து ராமனை வாய்திறந்து போற்றின. கைகேயிக்குத் தந்த இரு வரங்களால் நேர்ந்த அத்தனை கொடுமைகளையும், ராமனுக்கு இரு வரங்கள் தந்து போக்கிக் கொண்டார் (கம்ப- 10082) தயரதன்.
மனைவிக்கு மணவிலக்கு தந்து மீண்டும், மறுமுறை அதனை விலக்கி, தயரதன் மன்னித்து மறுவாழ்வு தந்தது போல் இன்றைய உலகிலும் நிகழ்ந்தால் ராமராஜ்யம் மலரும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com