வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

பஞ்சரத்தினம் இயற்றிய மகாராணி!

DIN | Published: 18th August 2019 02:34 AM

சங்க காலத்தில் ஆதிமந்தியார், பாரிமகளிர், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு ஆகிய அரச மகளிர் அனைவரும் பெண் புலவர்களே. அந்த வரிசையில்,  திருமங்கலம் தாலுகா சாப்டூர் சமஸ்தானத்தில் மகாராணியாக  இருந்து தமிழறிவு பெற்றவர் முத்துக்கிருஷ்ணம்மாள்.

புதுக்கோட்டையில் இலட்சுமி அம்மணி என்ற மகாராணியும் கல்வி அறிவு, தமிழறிவு பெற்றவராகவும்; "திருக்குறள் தீபாலங்காரம்' என்ற நூலை உரைபெறு கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கே இணைத்துப் பார்க்கத்தக்கது. புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த ஜானகி ராஜாயி சாஹேப் என்ற அரச மகளிர்  மாரியம்மன் பேரில், கீர்த்தனைப் பாமாலை பாடியவர். முத்துக்கிருஷ்ணம்மாள் மகாராணியாக இருந்து, "பஞ்சரத்தினம்' என்ற இந்நூலை வெளியிட்டுள்ளார்.

எனவே, அக்காலத்துச் சமஸ்தானத்தில் மகாராணியர் நன்கு கல்வி கற்று, தமிழ் அறிவு பெற்று விளங்கினர் என்பது தெரிய வருகிறது. இவர் எழுதிய நூல் சதுரகிரியில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமி "பஞ்சரத்தினம்' ஆகும். இந்நூலை மதுரை வித்வான் குப்புசாமி நாயுடு பார்வையிட்டும், இ.இராம குருசாமிக் கோனார் மதுரை வடக்கு மாசி வீதி ஸ்ரீஇராமச்சந்திர விலாச அச்சு இயந்திர சாலையில் பதிப்பித்தும் 1914-இல் வெளிக்கொணர்ந்தனர் என்பது முகப்புப் பகுதியால் தெரியவருகிறது. 

சதுரகிரி என்ற ஊரில் எழுந்தருளிய சிவனாகிய சுந்தர மகாலிங்கம் பேரில் ஈடுபாடு கொண்டு பஞ்சரத்தினம் என்ற நூலை ஐந்து பாடல்களில் எழுதி முடித்திருக்கிறார். அவற்றுள் ஒரு பாடலைப் படித்துய்வோம்!

"சத்தோடு சித்தாகி யானந்த மயமாகித்
    தண்ணருள் சுரக்கு முகிலே
சன்மார்க்க நெறி நின்று சரியைகிரியா யோக
    சாதனையில் நிற்கும் வண்ணம்
எத்தனைவி தத்தினும் புத்திபோ திக்கினும்
    இதயமு மொடுங்க வில்லை
என்செய்கு வேன்பாவி முன்செய்த தீவினைக
    ளென்னுடன் போராடுதே
சித்தனே முத்தனே அத்தனே சுத்தனே
    ஜென்மமீ டேறும் வண்ணம்
சீலமுறு தன்விரத ஞானவழி காட்டியென்
    தீவினை யகற்றி ஆள்வாய்
சத்தமுனி சித்தரொடு நாதாக்கள் பலரும்நின்
    தாள் மலர்கள் ஏற்றி வாழ்த்த 
சதுரகிரி தன்னில்வளர் சுந்தர மகாலிங்க
    சச்சிதா னந்த சிவமே'                     (பா.1)

-தாயம்மாள் அறவாணன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்