தமிழ்மணி

நப்பின்னையைப் புறக்கணித்தது ஏன்?

18th Aug 2019 02:35 AM | -புலவர் ச.மு.விமலானந்தன்

ADVERTISEMENT


கண்ணன் யாதவ குலத்தில் தேவகி வயிற்றில் பிறந்தான். அவனை யசோதை வளர்த்தாள். கண்ணன் ஆயர்குலத்திற்கு ஏற்ப ஏழு எருதுகளை அடக்கி ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையை மணந்தான். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் கண்ணனின் மனைவியான நப்பின்னையை ஒன்பது ஆழ்வார்களும் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர்.

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலித்தொகை முதலான சங்க இலக்கியங்களில், நப்பின்னை பற்றிய பாடல்களில், அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்திகள் உள்ளன.

பெரியாழ்வார் (66, 70, 160, 162, 246, 333). ஆண்டாள் (491,492,493). குலசேகர ஆழ்வார் (660, 662, 677). திருமழிசை ஆழ்வார் (764,  784,  806,  850). 

திருமங்கையாழ்வார் (960, 1061, 1072, 1136, 1144, 1152, 1172, 1176, 1181, 1226, 1247, 1281, 1290, 1353, 1359, 1491, 1492, 1505, 1506, 1542, 1614, 1703, 1730, 1966, 1971, 2020, 2080).

ADVERTISEMENT

பொய்கையாழ்வார் - 2143; பூதத்தாழ்வார் (2244). பேயாழ்வார் (2306, 2330, 2366, 2414). நம்மாழ்வார் (2498, 2546, 2632, 2672,2674, 2719, 2748, 2758, 2835, 2884, 2944, 2992, 3022, 3087, 3177, 3191, 3261, 3265, 3280, 3356, 3453, 3469, 3635, 3637, 3659, 3702).

மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் சிகரங்களாக ""ஒரு மகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள், மற்றைத் திருமகளோடும்'' என்று திருமங்கையாழ்வார் பாசுரத்திலும் (1176), ""பூமகள், மண்மகள் ஆய்(ஆயர்)மகள்'' என்று நம்மாழ்வார் பாசுரத்திலும் (3469) நப்பின்னையைப் பூமகளோடும் (திருமகளோடும்), மண்மகளோடும் (பூதேவியோடும்) சேர்த்துக் கூறியுள்ளது சிறப்புக்குரியது.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்பது ஆழ்வார்கள் 75 பாசுரங்களில் நப்பின்னை பிராட்டியைப் போற்றிப் பாடியிருந்தும், அவரை வைணவர்கள் கோயிலிலும், வீட்டிலும் போற்றி வழிபடாமல் புறக்கணித்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை. எங்கோ ஒரு சிலர் "நப்பின்னை' எனத் தம் பெண் பிள்ளைகளுக்குப் பெயரிட்டுள்ளது பாராட்டுக்குரியது. வைணவக் கோயில்களில்  "நப்பின்னை' இடம்பெறவில்லை. 

மூவரும் ஒருவரா? 

1. தொல்காப்பியத்தில் முல்லை நில ஆயர்களின் தெய்வமாக மாயோன் (கண்ணன்) சொல்லப்பட்டிருக்கிறார். கண்ணன் என்பதும் நப்பின்னை என்பதும் தூய தமிழ்ச் சொற்கள். ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழகத்தில் தோன்றி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடினர். அதில் எந்தவொரு பாசுரத்திலும் கிரந்த எழுத்து இல்லை. எனவே, கண்ணன் தமிழ் நாட்டுத் தெய்வம்.

2. கிருஷ்ணன்: இவன் துவாரகை என்ற பகுதியை ஆண்ட சிற்றரசன் (வடநாட்டுச் சிற்றரசன்). கிருஷ்ணன் என்ற பெயரிலேயே கிரந்த எழுத்து வந்துள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் ஓரிடத்திலும் கிருஷ்ணன் என்ற பெயர் இல்லை. இவன் பல சூழ்ச்சிகளைச் செய்து, குருஷேத்திரப் போரில் பாண்டவர்களை வெற்றிபெறச் செய்தவன். எனவே, இவன் வடநாட்டுத் தெய்வம் எனக் கருத வேண்டியுள்ளது. (கிருஷ்ணனின் மனைவியர் பாமா, ருக்மிணி)

3. திருமால்: தெய்வ உலகத்தில் திருமாலாக சங்கு, சக்கரங்களோடு இருக்கிறான். அவன் மனைவி திருமகள் (கோயில்களில் ஸ்ரீதேவி, பூதேவி மனைவியராக உள்ளனர்). எனவே, மேற்கண்ட மூவரும் வெவ்வேரானவர் எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், இம்மூவரையும் பாகவதமும் மற்றும் சில புராணங்களும் ஒருவனாக்கிக் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT