வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

கடற்கரைக் காதல்

By -கோதை ஜோதிலட்சுமி| DIN | Published: 18th August 2019 02:37 AM


சிற்றூர்களில் வசிப்போர், மலைவாழ் மக்கள், பெருநகரங்கள் அல்லது பட்டண வாசிகள் இவர்களுக்குள் பல பண்பாட்டு மாற்றங்களைக் காண்கிறோம்.

சிற்றூர்களில் வாழும் பெண்களுக்கும் பட்டணத்துப் பெண்களுக்கும் பழக்க வழக்கங்கள், நாகரிக நடைமுறைகள், சுதந்திரமான செயல்பாடுகள் இவற்றில் மாறுபாடுகளைக் காண்கிறோம் அல்லவா! இந்த மாறுபாடுகள் காலம் காலமாக இங்கே தொடர்கின்றதோ என்ற எண்ணம் இலக்கியத்தை நுட்பமாகக் கவனித்தால் புரியும்.  

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலவியல் அடிப்படையிலான பகுப்பு அந்தந்த நிலங்களின் தனித்தன்மை கொண்டே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலத்தின் மக்களுக்கும் தனித்துவமான பண்புகளும் உணர்வுகளும் உண்டு. முல்லை நிலத்தில் மட்டுமே தலைவன் காளையை அடக்கி, தலைவியை மணக்கிறான். இது அந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மையாக இருக்கிறது. 

காதல் அல்லது களவொழுக்கத்தில் குறிஞ்சிநிலத் தலைவி யாரேனும் பார்த்து விடுவார்களோ, காவல் கடுமையாய் இருக்கிறதே, தந்தைக்குத் தெரிந்துவிடுமோ, மலையில் விலங்குகளால் தலைவனுக்கு ஏதும் தீங்கு விளையுமோ என்றெல்லாம் அஞ்சுபவளாகக் கூறப்பட்டிருக்கிறாள். ஆனால், நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதியில் வாழும் தலைவியின் மனநிலை முற்றிலும் வேறாக இருக்கிறது. 

கடற்கரைப் பகுதிகளில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருப்பதாகத் தோன்றுகிறது. வாணிகம் பெரிதாய் ஆரவாரமாய் நடைபெறும் பகுதியாக இருப்பதால், அடையாளமற்று  இங்கு எந்தத் தடையும் இல்லாமல் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர்.

"இனிவரின் தவறும் இல்லை
ஏனையதூ உம் பிறர்பிறர் 
அறிதல் யாவது தமர் தமர்
அறியாச் சேரியும் உடைத்தே'

"எங்கள் ஊர்க்காரர்களுக்கே ஒருவரை இன்னொருவருக்குத் தெரியாது. அப்படியிருக்க,  பிறர் வருவது யாருக்குத் தெரியப் போகிறது? நீ என்னைப் பார்க்க வரலாம், தடையில்லை' என்றே தலைவனுக்கு அழைப்பு விடுக்கிறாள் நற்றிணையின் தலைவி. கடற்கரைப் பகுதியில் இது சாத்தியமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்ல, குறுந்தொகையின் நெய்தல் நிலத் தலைவியும்கூட இத்தகைய சுதந்திரமும் துணிவும் கொண்டவளாகவே இருக்கிறாள். அதே நேரத்தில், கடற்கரைப் பகுதியில் வசிக்கும் தாய், தன் மகளை காவல் காப்பதாகவும் தெரியவில்லை. 

"உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள்என்னும் தூதே'

எல்லோருக்கும் வெளியே வேலை இருக்கிறது. சுறாமீன் தாக்கிய புண் ஆறி, தந்தை மீண்டும் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டார். தாய் உப்பை விற்று நெல்லை வாங்கும் பொருட்டு உப்பளம் போய் விட்டாள். இப்பொழுது வந்தால் தலைவியைக் காண்பது எளிது' என்று தூது அனுப்பும் அளவுக்கு நெய்தல் நிலம் சுதந்திரமுடையது. என்றைக்கும் கடற்கரையில் காதல் கட்டற்றதாகத்தான் இருக்கிறது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்