தமிழ்மணி

நாவினிக்கும நவபங்கி

11th Aug 2019 01:39 AM | -டிஎம். இரத்தினவேல்

ADVERTISEMENT


இராமச்சந்திர கவிராயர், தொண்டை நாட்டிலுள்ள இராசநல்லூரில் பிறந்து சென்னப்பட்டணத்தில் வசித்தவர். கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் புலமையும் பெற்றுத் திகழ்ந்த இவர், பாரதக் கதைகளை விசாலமாகப் பாடியவர். "இவர் செய்துள்ள வேறு நூல்கள் இரண்ய வாசகப்பா, இரங்கூன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம், தாருக விலாசம் முதலியன' என்ற சிறுகுறிப்பு மட்டும் பழம்பெரும் நூலான அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. முழுமையான வரலாறு கிடைக்கவில்லை.

இவர் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அவ்வாறு இயற்றிய பல பாடல்களில் புதுமையான சிந்தனைகளைக் கையாண்டுள்ளார். திரிபங்கி, சத்யபங்கி, நவபங்கி என்கிற வகைப் பாடல்களை இயற்றி, தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

"திரிபங்கி' என்பது ஒரு செய்யுளைக் கொண்டு, மேலும் கூட்டாமல், உரை மாறாமல் மூன்று பாடல்களாக உருவாக்குவது. "சத்த பங்கி' என்பது ஒரு செய்யுளை ஏழு வகையாகப் பிரித்து, ஏழு பாடல்களாகக் கொள்ளுமாறு பாடுதல். "நவபங்கி' என்பது ஒரு செய்யுளை ஒன்பது வகையாகப் பிரித்து, ஒன்பது பாடல்களாக அமைப்பது.முருகப்பெருமான் மீது இராமச்சந்திர கவிராயர் பாடிய நவபங்கி பாடல்கள் வருமாறு:  நவ - ஒன்பது. பங்கி - பிரித்துக் கட்டுதல். ஒரு பாடலை ஒன்பது பாடலாகக் கட்டுவதே நவபங்கி எனப்படும். 

""அரிமரு காகரு ணாலய னேதிட வாரணனே போதன்
அரியிமை யோர்சூழ் புனிதா புலவட ரயிலமர் பொற்கரனே
கரிமுக னேயசகோ தரனே படிகா ரணனே நாதங்
கதியுற வேவா னவனே நலமிகு கயிலை யனற்குருவே
குரவலர் நீபம ணிப்புயனே வடி கூரமுதே யோதுங்
குருமணி சேர்மார் பினனே யுலகருள் குயிலுதவுத்தமனே
மரகத மாமயில் வாகனனே கொடி வாரணனே கோதின்
மதியக மேவாழ் குமரா குலவிய மயிலைம லைக்குகனே''

ADVERTISEMENT

"பாற்கடலில் பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் மருமகனே! கருணைக்கு இருப்பிடமானவனே! நான்கு வேதங்களின் பொருளாக விளங்குபவனே, நான்முகனாகிய பிரம்மன், திருமால் மற்றுமுள்ள தேவர்கள் அனைவரும் சூழ்ந்து வழிபடுகின்ற தூயவனே, முருகப்பெருமானே! அசுரர்களைக் கொன்றொழித்ததால் புலால் மணம் கமழும் கூர்மையான வேல் தாங்கும் கைகளை உடையவனே! எப்போதும் வெற்றியை அருளும் யானைமுகக் கடவுளின் அன்பிற்குரிய தம்பியே! இம்மண்ணுலகத்திற்குக் காரணமான தலைவனே! மேன்மையுடைய தேவர்களின் தேவனே! நன்மையுடைய கயிலாய மலையின்கண் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் குருவாய் விளங்குபவனே! எப்போதும் குரவ மலர் மாலையும், கடப்பமலர் மாலையும் அணிந்தவண்ணம் காட்சியளிக்கும் அகன்ற தோள்களையுடைய கந்தவேளே! வடித்த அறிவுக் கூர்மையுடைய அமுதமாக விளங்குபவனே! சிறப்பாகப் பேசப்படும் சிறந்த நிறத்தை உடைய மணிமாலையை அணிந்த மார்பினனே! உலகில் வாழும் உயிர்களுக்கு அருளும் குயில் போன்ற இனிய குரலையுடைய அன்னை உமையம்மை பெற்ற தூயவனே! உத்தமனே! மரகதமணி போன்ற பச்சை மயிலை வாகனமாகக் கொண்டவனே! மால்மருகா! சேவற்கொடியோனே! குற்றமொன்றும் இல்லாத அறிவில் தங்கும் குமரனே! சிறப்புப் பொருந்திய மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே, அருள் புரிவாய்!' என்பது இப்பாடலின் பொருள்.
இவ்வாறு பொருள் தரும் இப்பாடலை முதன்மையாகக் கொண்டு, புதிய பாடல் வரிகைளைக் கூட்டாமல், இருக்கும் வரிகளைக்கொண்டே பொருள் மாறாமல் "நவபங்கி' எனப்படும் ஒன்பது வகையான பாடல்களை உருவாக்கித் தந்துள்ளார்.


1. சிந்தடி வஞ்சி விருத்தம்
அரிமருகா கருணாலயனே
கரிமுகனே யசகோதரனே
குரவலர்நீப மணிப்புயனே
மரகதமா மயில் வாகனனே!

2. கலி விருத்தம்
புலவட ரயிலமர் பொற்கரனே
நலமிகு கயிலை நற்குருவே
உலகருள் குயிலுத வுத்தமனே
குலவிய மயிலை மலைக்குகனே

3. கட்டளைக் கலித்துறை
அரிமரு காகரு ணாலய னேதிட வாரணனே
கரிமுக னேய சகோதர னேபடி காரணனே
குரவலர் நீப மணிப்புய னேவடி கூரமுதே
மரகதமா மயில் வாகன னேகொடி வாரணனே

4. கொச்சகம்
ஆரணனே போத னரியிமையோர் சூழ் புனிதா
காரணனே நாதங் கதியுறவே வானவனே
கூரமுதே யோதுங் குருமணிசேர் மார்பினனே
வாரணனே கோதின் மதிலகமே வாழ்குமரா

5. சந்த விருத்தம்
போதன் அரி யிமையோர் சூழ் புனிதா  புலவடரயிலமர் பொற்கரனே
நாதங்கதி யுறவே வானவனே நலமிகு கயிலைய னற்குருவே
ஓதுங் குருமணி சேர் மார்பினனே யுலகருள் குயிலுத வுத்தமனே
வாரணனே கோதின் மதியக மேவாழ்குமரா

6. கலி விருத்தம்
போதன் அரியிமை யோர்சூழ் புனிதா
நாதங் கதியுற வேவா னவனே
ஓதுங் குருமணி சேர்மார் பினனே
கோதின் மதியக மேவாழ் குமரா

7. குறளடி வஞ்சி விருத்தம் 
அயிலமர் பொற்கரனே
கயிலைய னற்குருவே
குயிலுத வுத்தமனே
மயிலமலைக் குகனே

8. குறளடி வஞ்சி விருத்தம்
திடவா ரணனே
படிகா ரணனே
வடிகூ  ரமுதே
கொடிவா ரணனே

9. வெண்பா 
ஆரணனே போதன் அரியிமையோர் சூழ்புனிதா
கூரமுதே யோதுங் குருமணிசேர் - மார்பினனே
வாரணனே கோதின் மதியகமே வாழ்குமரா
காரணனே நாதங் கதி!

இந்த ஒன்பது வகைப் பாடல்களுக்குமான உரை முதற் செய்யுளில் உரைத்தவாறே கொள்ள வேண்டும். இவர் இயற்றிய பாடல்கள் எல்லாம் கிடைத்த வரையில், தனிப்பாடல் திரட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT