"நிலாவே வா'... வராது! 

அனைவருமே வானில் வட்டமாகத் தெரிவதையே நிலவு (நிலா) என்று குறிப்பிட்டு வருகின்றனர்
 "நிலாவே வா'... வராது! 

அனைவருமே வானில் வட்டமாகத் தெரிவதையே நிலவு (நிலா) என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் அது தவறு. "நிலா நிலா ஓடிவா/ நில்லாமல் ஓடிவா' என்று பாட்டி காலத்துப் பழம்பாடல் முதல், பாவேந்தர் பாரதிதாசனின், "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து / நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை' என்ற பாடல் வரையிலும், அன்றி திரைப்படப் பாடலாசிரியர்கள் மற்றும் தற்காலக் கவிஞர்கள் வரையிலும் அனைவருமே இரவில் வானில் வட்ட வடிவமாகத் தெரிவதை நிலாவென்று தவறாகக் கூறிவருகின்றனர்.
 இராமலிங்க அடிகளார் தமது (திருவருட்பா 2 ஆம்) திருமுறையிலும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சிலம்பிற்கு எழுதிய உரையில் 676-ஆம் பக்கத்திலும் "வானில் வட்டமாகத் தெரிவதை நிலவு என்னும் பொருள்படவே' கூறியுள்ளனர். இனி இது குறித்துக் காண்போம்.
 வானில் வட்ட வடிவமாகத் தெரிவன 1) சூரியன் 2) சந்திரன். சூரியனுக்கு ஆதித்தன், ஞாயிறு, வெங்கதிர், செங்கதிர், காய்கதிர்ச் செல்வன் முதலிய பல பெயர்கள் உள்ளன.
 சந்திரனுக்கு திங்கள், இந்து, மதியம், மதி, தண்கதிர், பசுங்கதிர், பைங்கதிர், வெண்கதிர் முதலிய பல்வேறு பெயர்கள் உள்ளன. சூரியனிலிருந்து வரும் ஒளி "வெயில்' என்று பெயர் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிலிருந்து வரும் ஒளி "நிலா' என்று அழைக்கப்படுகிறது. ஆகவே "நிலா' என்பது சந்திரனிலிருந்து கிடைக்கப்பெறும் ஒளியின் பெயரே அன்றி வானில் வட்ட வடிவமாகத் தெரிவது அல்ல என்பது அறியக் கிடைக்கிறது. பின்வரும் சான்றுகளால் இதைத் தெளிவாக அறியலாம்.
 "நிலா' என்பதற்கான பொருள் "ஒளி' என்பதாகும் (நிலா-ஒளி) என்று உ.வே.சாமிநாதையர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார். (சிலப்பதிகாரம்: உ.வே.சா. பதிப்பு, அரும்பத அகராதி - பக்.683). சிலப்பதிகாரம் 4-ஆவது காதையான அந்திமாலை சிறப்புச் செய் காதையில் மூன்றாவது மற்றும் நான்காவது வரிகளில், "அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்; திங்களஞ் செல்வன்' என்று கூறப்பட்டுள்ளது.
 இடமகன்ற அழகிய வானில் குளிர்ச்சி பொருந்திய நிலவை (ஒளியை) பரவச் செய்யும் திங்களாகிய (சந்திரன்) செல்வன் என்பது இதன் பொருள்; ஆகவே திங்களால் (சந்திரனால்) பரவச் செய்யப்படும் ஒளியே "நிலா' என்று பெயர் பெறுகிறது என்பதையும், திங்கள் எனப்படும் சந்திரன் வேறு; நிலா வேறு என்பதையும், "நிலா' என்றால் சந்திரனிலிருந்து பெறப்படும் ஒளியே தவிர சந்திரன் ஆகாது என்பதையும் நாம் நன்கு உணரலாம்.
 சிலப்பதிகாரம் காதை 22-இல் 16 மற்றும் 17-ஆவது வரிகளில் ""நிலாத் திகழ் அவிரொளி தண்கதிர்மதியம்''என்று இளங்கோவடிகள் இயம்புகிறார். நிலா விளங்குகின்ற மிகுந்த ஒளியினையுடைய குளிர்ச்சியான கதிர்களையுடைய சந்திரன் என்பது இதன் பொருளாகும். அதாவது குளிர்ந்த கதிர்களையுடைய சந்திரன், நிலாவை (ஒளியை) திகழச் செய்கிறது என்பதை இதன் வாயிலாக அறிவதால் நிலாவேறு; சந்திரன் வேறு என்று தெளிவாக உணரலாம். சந்திரனுக்கு "வெண்கதிர்' என்ற பெயருமுண்டு. சிலம்பு, காதை 13, வரி 27-இல், "பால்நிலா வெண்கதிர்' என்கிறார் அடிகளார். பால் போன்ற ஒளியையுடைய திங்கள் என்பது இதன் பொருள்.
 சூரியனின் ஒளியைப் "பகலொளி' என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளியை "நிலவொளி' என்றும் சிலம்பில் (13ஆவது) புறஞ்சேரியிறுத்த காதையில் 11 மற்றும் 12ஆவது வரிகளில் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 சிலப்பதிகாரம் (உ.வே.சா. பதிப்பு) 13ஆவது காதையில் 27ஆவது வரிக்கு எழுதப்பட்டுள்ள உரையில், ""நிலாவைச் சொரிந்த அளவிலே'' என்று காணப்படுகிறது. ஒளியைச் சிந்திய அளவில் என்பது இதன் பொருள் என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது.
 உயரமானவரும், சந்திரனிலிருந்து கிடைக்கப்பெறும் நிலா போன்ற வெண்மையானவராகவும் இருந்த புலவர் அகநானூற்றில் 47-ஆவது பாடலை எழுதியுள்ளார். அவரது பெயர் நெடுவெண்ணிலவினார் என்பதாகும். புறநானூற்றில் பாரி மகளிர், "அற்றைத்திங்கள் அவவெண்ணிலவில்'' என்ற பாடலில், "அன்று தோன்றிய (இதற்கு முன்பு தோன்றிய) சந்திரனின் வெண்மையான ஒளியில் (நிலவில்) எம் தந்தையும் இருந்தார்; எம் குன்றும் எம்வசம் இருந்தது. இன்று உதித்த சந்திரனின் வெண்மையான ஒளியில் (நிலவில்) எம் தந்தையும் இல்லை; எம் குன்றையும் பகைவர்கள் கைக் கொண்டனர்' என்று கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்ட மாற்றம் என்று இதனைக் கொள்ள ஏதுவாகிறது!
 ஐம்பெருங்காப்பியங்களிலும் சங்க இலக்கியங்களிலும் சந்திரனிலிருந்து கிடைக்கப்பெறும் ஒளியே "நிலா'வென்று அழைக்கப்பட்டதே தவிர, நாம் நினைப்பது போல வானில் வட்ட வடிவமாகத் தெரிவது "நிலா' என்று அழைக்கப்படவில்லை என்பது இவற்றால் புலனாகிறது. அன்றியும் நாலடியார் 151ஆவது பாடலில்,
 "அங்கண் விசும்பின் அகல்நிலாப்பாரிக்கும்/திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்' என்று கூறப்படுகிறது. "இடமகன்ற அழகிய வானின்கண் மிகுதியாக நிலாவினை (ஒளியினை) தோற்றுவிக்கும் சந்திரனும் சான்றோரும் ஒப்பர்' என்பது இதன் பொருள். சந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் நாலடியார் பாடல்களில் (எண்.125, 148, 151, 176, 241) சந்திரனைக் குறிப்பதற்கு "நிலா' என்ற சொல் ஒருமுறை கூடப் பயன்படுத்தப்படவில்லை.
 திருவள்ளுவர் தம் குறட்பாவில் திங்கள், மதி என்ற சொற்களையே சந்திரனைக் குறிப்பதற்குப் பயன்
 படுத்தியுள்ளார். "நிலா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. சந்திரனிலிருந்து கிடைக்கப்பெறும் நிலவின் பயனைத் துய்க்கும் முற்றம் மற்றும் முன்றில் ஆகியன "நிலா முற்றம்' மற்றும் "நிலா முன்றில்' என்றே இலக்கியங்களில் பேசப்படுகின்றன.
 சந்திரன் முற்றம் என்றோ, மதி முன்றில் என்றோ அழைக்கப்படவில்லை, ஆகவே, வானில் வட்ட வடிவமாகத் தெரிவதற்குச் சந்திரன், மதி, மதியம், இந்து, வெண்கதிர், பசுங்கதிர், தண்கதிர், திங்கள் முதலிய பெயர்கள் உள்ளனவேயன்றி, "நிலா' என்ற பெயரே இல்லை என்பது தெளிவாகிறது.
 தேய்ந்தும், வளர்ந்தும் வரும் மதியை முறையே தேய்பிறை, வளர்பிறை என்றும் குறிப்பிட்டார்களளே தவிர, தேய்நிலா, வளர்நிலா என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் ஆய்வுக்குரியது.
 மொத்தத்தில் "நிலா' என்பது சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கு உரிய பெயரே தவிர, "நிலா' என்பது சந்திரன் ஆகாது என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. ஆதலின், இனி வானில் (இரவில்) வட்டமாகத் தெரிவதைப் பார்த்து "நிலாவே வா!' என்று யாரும் கூறமாட்டார்கள்! அவர்களுக்குத் தெரியும்! அது "வராது' என்று!
 
 -முனைவர் குரு. சண்முகநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com