கிளி அலகில் வேப்பம்பழம்!

தமிழரின் பழைமை பற்றிய ஆய்வில் கீழடிக்கென்று தனி இடம் உண்டு. அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு மணிகள் பார்ப்பதற்கு வண்ணங்களால் (பச்சை, மஞ்சல், நீலம்) வேறு வேறாக
கிளி அலகில் வேப்பம்பழம்!

தமிழரின் பழைமை பற்றிய ஆய்வில் கீழடிக்கென்று தனி இடம் உண்டு. அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு மணிகள் பார்ப்பதற்கு வண்ணங்களால் (பச்சை, மஞ்சல், நீலம்) வேறு வேறாக இருந்தாலும் வேப்பம்பழம் போன்ற அளவினதாக இருக்கின்றன. அதில் நுண்ணிய துளையிட்டு ஆபரணமாக (மணியாக) செய்திருக்கின்றனர். அது கண்ணாடி மணியாக இருப்பினும் அன்று அதற்கென்று தனி மதிப்பு இருந்திருக்கிறது. அதற்கான சான்று சங்க இலக்கியத்தில் உள்ளது. குறுந்தொகையில், தலைவி கூற்றுப் பாடலாக வரும் பாலைத் திணைப் பாடலில் (67) மேற்குறித்த பதிவு இடம்பெற்றுள்ளது.
 உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
 வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
 புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
 பொலங்கல வொருகா சேய்க்கும்
 நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே!
 "தோழியே கேட்பாயாக! கிளியின் வளைந்த அலகின் இடையே வேம்பினது அழகிய பழத்தை வைத்திருக்கிறது. அது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்றால், புதிய பொன்னால் செய்யப்பட்ட மெல்லிய கம்பியை வேப்பம்பழம் போன்ற கல்லில் உள்ள சிறு துளையின் ஊடாகச் செலுத்தும் பொற்கொல்லனது செயல்போன்று இருக்கிறது' என்று பதிவு செய்திருக்கிறார் புலவர் அள்ளூர் நன்முல்லையார்.
 இப்பாடலுக்கு உரை கூறும் உ.வே.சா., "கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள். காசைப் பற்றுதற்குரிய தகுதியுடையதைப் புலப்படுத்தி, "நுதிமாண் வள்ளுகிர்' என்றாள். ஒருவகைப் பொற்காசு உருண்டை வடிவமாகவும் இருந்ததென்பது'' என்கிறார்.
 நற்றிணையில், "பொன்செய் காசி னெண்பழந் தாஅம்குமிழ்' (நற். 274:4-5) என்று வருகிறது. அதாவது, கிளியின் அலகில் வேப்பம் பழத்தைப் பிடித்திருப்பது பொன்னாபரணம் செய்யும் கொல்லன் வேப்பம்பழம் போன்ற மஞ்சள்நிற கல்லை கிடுக்கியால் பிடித்துக் கொண்டிருத்தல் போன்று இருக்கின்றது என்று உவமைப்படுத்துகின்றார். அப்படிப் பிடித்தால்தான் அதில் பொன்கம்பி போகும்படி துளையிட முடியுமாம்.
 இப்பாடலைப் பாடியவர் அள்ளூர் நன்முல்லையார். அள்ளூர் தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்றது. கீழடி சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. அள்ளூர் நன்முல்லையார் பாடல்கள் - அகநானூறு 46, புறநானூறு 306, 340, குறுந்தொகை - 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237 என்று பன்னிரண்டு பாடல்கள் உள்ளன. இவர்தம் பாடலில் பெரும்பாலும் பெண்களுக்குரிய ஆடை, ஆபரணம், ஒப்பனை பற்றிய பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
 இப்பாடலின் மூலம், வேப்பம்பழம் போன்ற சிறிய கண்ணாடி மணியில் நுண்ணிய துளையிட்டுப் பொன் கம்பியால் கோத்து மணியாக மாற்றும் தொழில் நுட்பத்தைத் தமிழன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சாத்தியப்படுத்தியவன் என்பதை அறிகிறோம்.
 -முனைவர் கா.அய்யப்பன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com