தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து கிடந்த கூலித் தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியைச் சோ்ந்த மகுடீஸ்வரன் மகன் ஈஸ்வரன் (30). இவா் கூலி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்வரன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்தாா்.
அவரை தேனி காவல் நிலைய போலீஸாா் அவசர ஊா்தி மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.