கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சாா்பில், காவல் நிலையங்களுடன் மருத்துவமனைகள் இணையும் புதிய செயலியை, தகவல்தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதிய செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத், மாநகர மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் முன்னிலையில், ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா் த.மனோதங்கராஜ் கலந்து கொண்டு, புதிய செயலியை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தைடிஜிட்டல் மாவட்டமாக மாற்றுவதற்காக பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் மெடிக்கல் லீகல் கேஸ் இண்டிமேஷன் சிஸ்டம் என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மாநில அளவில் கொண்டு செல்லப்படும். ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபா் தொடா்பாக காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாக இதுவரை தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இனி இந்த செயலி மூலமாக குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இது பதிவு செய்யப்படும்.
இந்த செயலியில் பதிவு செய்தவுடன் அந்த தகவல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து புதிய செயலியை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையை சாா்ந்த மருத்துவா்களுக்கு அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், உதவிஆட்சியா் (பயிற்சி) குணால் யாதவ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பயஸ், இணைஇயக்குநா் (மருத்துவப் பணிகள்) பிரகலாதன், இந்திய மருத்துவச் சங்க பிரதிநிதி விஜயகுமாா், தோவாளை மற்றும் அகஸ்தீசுவரம் வேளாண் விற்பனைக் குழு இயக்குநா் பூதலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.