""ஏண்டா சாந்தன் நீ எப்பவும் பள்ளிக்கு நடந்தே வரே? நடந்தே போரே?'' என்று பேருந்துக்காகக் தினமும் அரை மணி நேரம் காத்திருந்து கூட்டத்தில் ஏறிப் படியிலேயே உந்தி உந்தி நின்று பள்ளியில் வந்து விழும் பேருந்தன் கேட்டான்.
""எங்கப்பா காரில் ஏஸி போட்டு என்னைக் கொண்டு வந்து விடுவார்... எனக்கு அலுப்பே தெரியாது...'' என்று ஏஸியன் கூறினான்.
""நான் நடந்து வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. நடந்தால் அது நல்ல உடற்பயிற்சி. அதிலும் நம்ம புத்தக மூட்டையை சுமக்க சுமக்க உடல் வலிமை பெறுகிறது. பேருந்துக்குக் காத்திராமல் என்னுடைய கால்களையே நம்பும்போது தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் வளருகின்றன. இப்போ உள்ள நெரிசலைத் தவிர்க்க நடைதான் தீர்வு. அதுக்கும் மேலே சுற்றுப்புறச் சூழல் மாசுபடுபவதைக் குறைக்க வண்டி, வாகனங்களைக் குறைக்க வேண்டாமா?'' என்று சாந்தன் கூறினான்.
""சாந்தன் சொல்வது ரொம்ப சரி... நான் முதலில் நடந்துதான் வந்தேன். பிறகு ஏஸியன் காரில் ஓஸியிலேயே கொஞ்ச நாளா வரேன்... இப்போ எனக்கு மீண்டும் நடக்கிற வலுவே போயிடுச்சு...'' என்றான் ஓஸியன்.
சாந்தனுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்து செல்லும் ஒரு குழு உண்டாயிற்று. எப்பப் பார்த்தாலும் காதுல கருவியை மாட்டி, பாட்டுக் கேட்டுகிட்டே பேருந்தில் பயணம் செய்யும் எந்திரன்கூட அந்தக் குழுவில் சேர்ந்துவிட்டான். தினமும் ஒருவர் வீதம் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டே நடந்தார்கள். அவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அப்போதுதான் காணத் தொடங்கினார்கள்.
"எந்திரங்களை நம்பி
எந்திரங்களானோம்-நாம்
நம் மனித எந்திரத்தை
நம்பி மனிதர்களாவோமா...'
என்று பாடிக்கொண்டே எந்திரன் கூடவே நடந்தான்.
(அமைதிக்கு காந்திய வழி நூலிலிருந்து...)