சிறுவர்மணி

நூல் புதிது

29th Jan 2022 06:00 AM

ADVERTISEMENT

 

களிறும் கன்றும் காட்டினிலே...

ந.க.தீப்ஷிகா; பக்.50; ரூ.140; சாரல் வெளியீடு; 131/1, முனியப்பன் வீதி, கீழ அம்பிகாபுரம், திருச்சி620 004. தொ.பே.7358968695.
இந்த நூலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என்ன தெரியுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தீப்ஷிகா எழுதியது இந்நூல்.  வண்ணப்படங்களுடன் 47 பக்கங்கள் கொண்ட இதில் நான்கே வரிகளில், தீப்ஷிகா தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி,  மனிதத் தாய் மட்டுமல்லாது, பறவைகள், விலங்குகளின் தாயன்பையும்; வீட்டு விலங்குகள், காட்டு மிருகங்கள், பறவைகளின் இயல்புகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து, அதன்மூலம் "நச்' சென்று சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டுக்கு இரு  பாடல்களைப் பாருங்களேன்...  
"நாயும் குட்டியும் வீட்டினிலே / காவல் காத்தனவே/ உலகில் முதலில் விண்வெளிக்கே / சென்றதும் உன்னினமே...'; "எலியும் குஞ்சும் பொந்தினிலே/ பதுங்கி வாழ்ந்தனவே/ நீண்டகாலம் நீரின்றியே/ வாழும் திறனுடனே...' 
இச்சிறுமி பல விருதுகளைப் பெற்றிருக்கிறார், பல பத்திரிகையில் எழுதியும் வருகிறார். அதுமட்டுமல்ல,  சிறுவர்கள் நூலுக்கு ஓவியங்கள்கூட வரைந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

 

ADVERTISEMENT

 

முத்து முத்துப் பாடல்கள் (குழந்தைகள் படிக்க, பாட, நடிக்க)

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்;  பக்.146; ரூ.132; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை14; 04428132863/ 43408000.

குழந்தைகளுக்கான பாடல்கள், கதைப் பாடல்கள் என மொத்தம் எண்பது பாடல்கள் உள்ளன. அவை, அமுத முத்து, பொன் முத்து, ஒளி முத்து, தேன் முத்து, சுடர் முத்து, நல்முத்து, வெண் முத்து, பெருமுத்து என எட்டு முத்துக்களாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு முத்திலும் பலவிதமான தலைப்புகளில் பாடல்கள் அமைந்துள்ளன. 

அமுத முத்தில், 12  பாடல்கள் உள்ளன. கலைவாணி, என் பாட்டி, உறவை அறிவோம், கோலம், இனிய தமிழ், இனிக்கும் மூன்று, பாரதிப் பாதையும்; பொன்முத்து பகுதியில் தாத்தாபாட்டி சிறுவயதில் ஆடி மகிழ்ந்த விளையாட்டுகள், வேடிக்கை நிகழ்ச்சிகள் உள்ளன; ஒளி முத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் பலூன் தொட்டில், ஜல்ஜல் மாட்டுவண்டி, தடக்... தடக் ரயில்வண்டி, மயக்கும் வான ஊர்தி,  கைப்பேசி முதலிய  ஒன்பது பாடல்கள்; சுடர் முத்தில் அறிவியல் தொடர்பான பாடல்கள், கண்டுபிடிப்புகள், விளையாட்டுச் சாதனங்களும்; தேன் முத்தில் இயற்கை அன்னையைப் போற்றும் பாடல்களும் உள்ளன.  இவ்வாறு எண்பது பாடல்களும் முத்து முத்தானவை. "ழகர' உச்சரிப்பு வராத குழந்தைகளுக்காக "ழ'கரப் பாடல் ஒன்றும்; நாடகப் பாங்கில் அமைந்த கதைப் பாடல்களும் (யாருக்கு பொம்மை?, நீலக்கடல் ஓரத்திலே...) இந்நூலில் உள்ளன. படித்து மகிழுங்கள், பாடி ஆடுங்கள்!

 

 

பாட்டி சொன்ன கதைகள்  

பால. நடராஜன்; பக்.96; ரூ. 50; மணிவாசகர் புதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்னை108; 4425361039.

குழந்தைகளுக்குக் "கதை' என்றாலே அது தாத்தாபாட்டி சொல்லும் கதைகள்தான்.  இந்நூலில்,  இந்துமுஸ்லிம் ஒற்றுமை,  வான்கோழி விற்ற வள்ளல்,  சேரிகளின் பாட்டி,  பொறுமை தந்த பெருமை, தளரா உழைப்பே தங்கச் சுரங்கம், மோட்டார் மன்னர் முதலிய  சீதாப் பாட்டி சொன்ன  21 கதைகள் உள்ளன. ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு விறுவிறுப்பானவை, சுவாரசியமானவை.  ஒவ்வொரு கதையிலும் பாட்டி தான் சொல்ல வந்த கருத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதற்காக  திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார். கூடவே பாரதியாரின் பாடல்களையும். சிறார் படிக்க வேண்டிய, கேட்க வேண்டிய கதை நூல் இந்த சீதாப் பாட்டி சொல்லும் கதைகள்...

ADVERTISEMENT
ADVERTISEMENT