சிறுவர்மணி

செய்திச் சிட்டு!

DIN

சிறுவர்கள் தயாராக இருந்தார்கள். ஒரு சுற்று சுற்றி வந்து, ""என்ன, எல்லோரும் செளக்கியமா...?'' என்று கேட்டவாறு வந்து கிளையில் அமர்ந்தது சிட்டு!
""செளக்கியம்...! இந்த வாரம் எந்த ஊருக்கு டூர் போனியோ?'' என்று கேட்டான் பாலா. 
""ஃபாரிதாபாத்... தில்லிக்குப் பக்கமா இருக்கிற ஊரு... அங்கே ஓர் அருமையான காட்சியைப் பார்த்தேன்!அதைப் பத்தி சொல்ல நானே ரொம்ப ஆர்வமா இருக்கேன்...''
""சொல்லு... சொல்லு!!''
""பதினாறு வயசுப் பையன்... தில்லி பப்ளிக் ஸ்கூல்லே படிக்கிறான். ஸ்கூலுக்குப் போற வழியிலே ஒரு பெரிய நிலப்பகுதியை தினமும் பார்க்கிறான்... அந்த நிலப்பகுதி ரொம்ப மோசமா இருந்தது. சொல்லப்போனா, அந்தப் பகுதி மக்கள் அந்த இடத்திலே குப்பைகளைக் கொட்ட உபயோகப்படுத்தியிருக்காங்க. இவ்வளவு பெரிய நிலப்பகுதி இப்படி ரொம்பக் கேவலமா நாற்றத்தோட இருக்கிறதைப் பார்க்க அந்தப் பதினாறு வயதுப் பையனுக்குப் பார்க்க சகிக்கலே...'' என்றது சிட்டு.
""அதனாலே?'' ஆர்வத்தோடு கேட்டாள் லீலா.
""அந்த இடத்தை ஒரு சிறு காடாக மாற்ற தீர்மானித்து, அதற்கான செயலிலும் ஈடுபடத் தொடங்கினான் அந்தச் சிறுவன். முதலில் தன் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு குப்பைகளை அகற்றினான். ஆனால், அந்த நிலம் மிகவும் சத்தே இல்லாத நிலமாக மாறியிருந்தது. எனவே அவனும், அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மண்புழு உரம், தழை உரம் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை நிரப்பினார்கள்.
பிறகு யமுனைக் கரையிலிருந்த பாரம்பரிய தாவரங்களை எடுத்துவந்து அங்கு நட்டார்கள். சில பழ மரங்களையும் விதைத்தார்கள்.... மெல்ல மெல்ல தாவரங்கள் வளர ஆரம்பித்தன. இந்த வேலைகள் நடந்து முடியவே ஒரு வருடம் ஆகிவிட்டது...''
""அந்த மாணவர்கள் ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்காங்க...'' என்றாள் மாலா.
""மழைக்காலம் வருவதை அறிந்து ஆங்காங்கே மழை நீர்க் குளங்களை அமைத்தார்கள். மழையும் வந்தது... குளங்களும் நிரம்பின...''
""பரவாயில்லையே... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே!'' என்றான் ராமு. 
""அது மட்டுமில்லே... இப்போது அந்தப் பகுதி சிறிய வனமாகக் காட்சி தருகிறது. ஏராளமான மரங்கள், தாவர வகைகள், பசுமைப் புதர்கள், மலர்ச் செடிகள், புல் வகைகள் எல்லாம் அங்கு உள்ளன. அது மட்டுமில்லாமல், குளங்களில் தவளைகள் மீன்கள், தும்பிகள் ஆகியவையும் வந்துவிட்டன. பறவையினங்கள் அங்கு வட்டமடிக்கின்றன. மரங்களில் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. 112 தாவர வகைகள் தற்போது அங்கு உள்ளன. 37 விதமான பறவையினங்கள் இருக்கின்றன. 22 வகையான வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் அழகிய வண்ணச் சிறகுகளை விரித்துப் பறக்கின்றன! எல்லோரும் வியப்புடன் இந்த மாறுதலைப் பார்த்து, அந்தச் சிறுவனுக்கு பாராட்டுகளையும் ஆதரவையும் தருகின்றனர்.  
""அதெல்லாம் சரி... பையனின் பெயரை நீ இன்னும் சொல்லவே இல்லையே?'' என்றான் ராமு.
""பெயர்தானே? சொல்றேன்... சமர்த் கண்ணா!''
""பொருத்தமான பேருதான். ரொம்ப சமத்து கண்ணா!'' என்றவாறே தன் கையிலிருந்த வேர்க்கடலையை சிட்டுக்கு முன் நீட்ட, அது ஆர்வத்தோடு கொறித்துவிட்டு, "பை... பை' என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.
-சுமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT