சிறுவர்மணி

அரங்கம்: முதல் மதிப்பெண்

கீர்த்தி

காட்சி - 1
இடம்: ஹரீஷின் வீடு
பாத்திரங்கள்: ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹரீஷ், அப்பா முகுந்தன், அம்மா விஜயா (மாலைவேளை. முகுந்தன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து வீட்டிற்குள் நுழைகிறார்)

ஹரீஷ்: ஹை... அப்பா வந்தாச்சு! அப்பா வாங்க... நாம கடைக்குப் போகலாம்... எட்டு மணிக்கெல்லாம் கடையை மூடிடுவாங்க.
விஜயா: ஹரீஷ்! அப்பா இப்பதானே வர்றார். முதல்ல முகம் அலம்பி காஃபி குடிக்கட்டும். அப்புறமா கடைக்குப் போகலாம். 
முகுந்தன்: என்ன ஹரீஷ்! திடீர்னு கடைக்குக் கூப்பிடுறே? என்ன வாங்கணும்? 
ஹரீஷ்: அப்பா! அரையாண்டு தேர்வுல கிளாஸ் 
ஃபர்ஸ்ட் வந்தா எனக்கு சைக்கிள் வாங்கித் தர்றதா சொன்னீங்களே! மறந்து போச்சா?!
முகுந்தன்: ஓ... வெரிகுட்! முதல் மார்க் எடுத்துட்டியா? அப்படின்னா இப்பவே ரெடியாகிறேன். 
விஜயா: சரி! சரி! ஸ்கூல்லயிருந்து வந்த ஹரீஷ் இன்னும் எதுவும் சாப்பிடாமல் உங்களுக்காகக் காத்திருக்கான். அவனுக்கும் உங்களுக்கும் ஏதாவது கொண்டு வர்றேன். சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க...
( சிறிது நேரத்திற்குப் பின் அப்பாவும் மகனும் கடைக்குக் கிளம்புகின்றனர்.)

காட்சி - 2
இடம்: கடைவீதி
பாத்திரங்கள்: முகுந்தன், ஹரீஷ், பாஸ்கர்.

முகுந்தன்: ஹரீஷ்! உனக்கு என்ன மாதிரி சைக்கிள் வேணும் சொல்லு?
ஹரீஷ்: லேட்டஸ்ட் மாடல் வேணும்பா. இப்ப கியர் வெச்ச சைக்கிள் எல்லாம் வருதே... அந்த மாதிரி.
முகுந்தன்: அதையே வாங்கலாம்..
(திடீரென்று ஹரீஷ்! ஹரீஷ்! என்று யாரோ அழைக்க, ஹரீஷ் திரும்பிப் பார்க்கிறான். அங்கே அவனது வகுப்பில் படிக்கும் பாஸ்கர் பானிபூரி விற்கும் ஒரு தள்ளு வண்டியின் அருகில் நின்று கொண்டிருக்கிறான்.
ஹரீஷ்: ஹாய் பாஸ்கர்! நீ எங்கே இங்கே பானிபூரி கடையில்... பானி பூரி சாப்பிட வந்தியா?
பாஸ்கர்: பானிபூரி விக்கிறது எங்க அப்பாதான் ஹரீஷ்! தினமும் ஸ்கூல்லயிருந்து வந்ததும், அப்பாவுக்கு உதவியா இங்கே வந்திடுவேன். கடையில எட்டு மணி வரைக்கும் கூட்டம் இருக்கும். கூட்டம் குறைஞ்ச பிறகு வீட்டுக்குப் போய்டுவேன். அப்புறம்தான் படிப்பேன்...
முகுந்தன்: உங்க அப்பா உதவிக்கு யாரையாவது வெச்சுக்கலாம் இல்லியா? நீதான் உதவி செய்யணுமா?
பாஸ்கர்: உதவிக்கு ஆள் வெச்சா அவருக்கு சம்பளம் குடுக்கணுமே! அந்த அளவுக்கு வருமானம் கிடைக்காதே அங்கிள்! அதான் நானே வந்திடுவேன்! இருங்க அங்கிள்... ரெண்டு பேருக்கும் ரெண்டு பிளேட் பானிபூரி தர்றேன். 
முகுந்தன்: வேண்டாம் பாஸ்கர்! இன்னொரு நாள் வந்து சாப்பிடுறோம்.
பாஸ்கர்: முதன் முதலா எங்க கடைக்கு வந்திருக்கீங்க... சாப்பிடுங்க... அங்கிள்.
(சொன்னபடி பாஸ்கர் இரண்டு பிளேட் பானிபூரி எடுத்து வந்து தருகிறான். இருவரும் சாப்பிடுகிறார்கள். பிறகு பாஸ்கரிடம் விடைபெற்று, சைக்கிள் கடையை நோக்கிச் செல்கிறார்கள்)

காட்சி - 3
பாத்திரங்கள்: முகுந்தன், ஹரீஷ்
ஹரீஷ்: அப்பா!  எனக்கு இப்ப சைக்கிள் வேண்டாம்பா. அப்புறமா வாங்கிக்கலாம்!

முகுந்தன்: என்னாச்சு ஹரீஷ்? நீதானே சைக்கிள் வாங்கணும்னு என்னை அழைச்சுட்டு வந்தே. இப்ப எதுக்கு வேண்டாம்னு சொல்றே?
ஹரீஷ்: ஆமாப்பா! எனக்குக் கொஞ்சம் ஹோம் ஒர்க் இருக்கு. இப்ப போனாதான் அதை முடிக்க முடியும். சைக்கிள் இன்னொரு நாள் வாங்கிக்கலாம்பா.
(முகுந்தன் ஹரீஷின் முகத்தைப் பார்க்கிறார். ஹரீஷின் மனமாற்றத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.)
முகுந்தன்: சரி ஹரீஷ்! அப்புறமா வாங்கிக்கலாம்!
(இருவருமே வீட்டை நோக்கி நடக்கிறார்கள்)

காட்சி - 4
இடம்: ஹரீஷின் வீடு
பாத்திரங்கள்: ஹரீஷ், முகுந்தன், விஜயா.

விஜயா: என்ன கண்ணா! சைக்கிள் வாங்கணும்னு அப்பாவை அழைச்சுட்டுப் போய், இப்ப வேண்டாம்னு சொல்லிட்டியாமே... என்ன ஆச்சு?
ஹரீஷ்: ஆமாம்மா! என்கூட படிக்கிற பாஸ்கரோட அப்பாவின் ரோட்டோரக் கடையில பானிபூரி சாப்பிட்டோம். எப்பவும் பாஸ்கருக்கும் எனக்கும்தான் படிப்புல போட்டி. அவன் எப்பவாவதுதான் வகுப்புல ஃபர்ஸ்ட் வருவான். எப்பவுமே நான்தான் ஃபர்ஸ்ட் வருவேன். இந்த அரையாண்டு தேர்வுலயும் நான்தான் ஃபர்ஸ்ட். பாஸ்கர் செகண்ட். 
முகுந்தன்: ஆமா... நீ ஃபர்ஸ்ட் வந்திருக்கல்ல. அதுக்காகத்தானே சைக்கிள் வாங்கப் போனோம்?
ஹரீஷ்: ஆமாப்பா... ஆனா, எனக்கு வீட்ல எந்த வேலையும் இல்லை. அதனால் நிறைய நேரம் படிக்கிறேன். ஆனால் பாஸ்கர் ஸ்கூல்லயிருந்து வந்து, அப்பாவுக்கு உதவியா கடையில இருந்துட்டு, அதுக்கப்புறம் வந்து கிடைக்கிற நேரத்துலதான் படிக்கிறான். உதவிக்கு ஆள் வைக்க முடியாத சூழல்லதானே அவங்க அப்பா பாஸ்கரைக் கடைக்கு வரச் சொல்றார். அவன் குடும்பம் ஏழைக் குடும்பம்தானே. எல்லா வசதியும் இருந்து வகுப்புல ஃபர்ஸ்ட் வர்ற நான் திறமைசாலியா? கஷ்டமான சூழ்நிலையிலயும் படிச்சு செகண்ட் வர்ற பாஸ்கர் திறமைசாலியா? நிச்சயமா அவன்தாம்பா திறமைசாலி!
முகுந்தன்: அதுக்காக நாம என்னப்பா செய்ய முடியும்? ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி வாழ்க்கை...
ஹரீஷ்: இல்லப்பா! நல்லா படிக்கிற பாஸ்கருக்கும், வேற பிரச்னை ஏதும் இல்லாம படிக்கிற வசதி செய்து கொடுக்கணும்னு தோணுது. அப்படிப் படிச்சா நிச்சயம் அவன் என்னைவிட நிறைய மார்க் வாங்குவான். அதுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்களேன்.
(முகுந்தனும் விஜயாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்)
விஜயா: எனக்கு ஒரு யோசனை தோணுது. நம்ம வீட்ல வேலை செய்யுற வள்ளியோட கணவர் காலைல சித்தாள் வேலைக்குப் போறாரு. எல்லா நாளும் வேலை கிடைக்கிறதில்லையாம். அவரை வேணும்னா பாஸ்கரோட அப்பாவுக்கு சாயங்காலம் உதவி செய்யச் சொல்லலாமே.
முகுந்தன்: தனியா வேலைக்கு ஆள் வெச்சா கூலி குடுக்க முடியலன்னுதானே பாஸ்கரைத் துணைக்கு வரச் சொல்றாரு... இப்ப வள்ளியோட புருஷனுக்கு எப்படி கூலி குடுப்பார்?
விஜயா: தினமும் நாலு மணிநேரம்தானே. அதுக்கான சம்பளத்தை நாம குடுக்கலாங்க. தினமும் அம்பது அல்லது நூறு ரூபாய் குடுக்கலாம்.
முகுந்தன்: நல்ல யோசனைதான். நாமே குடுக்கலாம். நாளைக்கே வள்ளிக்கிட்டே பேசி, அவ புருஷனை பாஸ்கரோட அப்பாவுக்கு உதவிக்கு அனுப்பலாம்.
ஹரீஷ்: நிஜமாவாப்பா! அப்படியே செய்யுங்களேன். எப்ப சைக்கிள் வாங்கிறதுக்குப் பணம் சேருதோ, அப்ப எனக்கு சைக்கிள் வாங்கிக் குடுத்தாப் போதும்பா...

காட்சி - 5
இடம்: ஹரீஷின் வீடு. மறுநாள் 
மாலைப்பொழுது
பாத்திரங்கள்: ஹரீஷ், முகுந்தன், விஜயா.


(மாலை பள்ளி முடித்து ஹரீஷ் வீடு திரும்புகிறான். அவன் வீட்டின் முற்றத்தில் புத்தம் புதிய நவீன சைக்கிள் ஒன்று நிற்கிறது. அதைக்கண்ட ஹரீஷ் ஆச்சரியப்படுகிறான். ஓடிச் சென்று சைக்கிளைத் தொட்டுப் பார்க்கிறான். ஹரீஷின் அம்மா விஜயாவும் அப்பா முகுந்தனும் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள்)
முகுந்தன்: என்ன ஹரீஷ்... சைக்கிள் உனக்குத்தான். பிடிச்சிருக்கா?
ஹரீஷ்: ரொம்பவே பிடிச்சிருக்கு அப்பா! இதை இப்போ எதுக்காக வாங்கினீங்க? 
முகுந்தன்: உண்மையிலேயே சைக்கிளைப் பெற நீ தகுதியானவன் ஹரீஷ். அதனால் தாமதப்படுத்த வேண்டான்னு இன்று காலையிலேயே போய் வாங்கிட்டு வந்தேன். உன்னுடன் படிக்கும் ஏழைப் பையன் பாஸ்கரைப் பார்த்து வருத்தப்பட்டாய். அவனுக்கும் நல்லாப் படிக்கிற சூழலை உருவாக்கிக் கொடுக்கணும்னு நினைத்தாய். உனது நல்ல எண்ணத்திற்கான எங்களோட பரிசு இது.
விஜயா: ஆமான்டா ஹரீஷ்! நீ இப்போ எங்க மனசுலயும் முதல் மதிப்பெண் பெற்றுவிட்டாய்!
ஹரீஷ்: எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்ததுதானே! நாம முன்னேறினா மட்டும் போதாது, நமக்குக் கீழே இருக்கிறவங்களையும் கைதூக்கி விடணும்னு சொல்வீங்களே... அதனால நீங்களும் என் மனசுல முதல் மதிப்பெண் வாங்கிட்டீங்க...

(சிரித்தபடி சொல்லிவிட்டு ஓடிச் சென்று அம்மாவையும் அப்பாவையும் கட்டிக் கொண்டான் ஹரீஷ்)

(திரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT